விபரீதமாகிப் போகும் விமானப் பயணங்கள்!

flight delays conflict
flight delays conflict Img credit: AI Image
Published on
Kalki Strip
Kalki Strip

கோடையும், விடுமுறையும் தொடங்கி விட்டாலே மக்கள் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்து விடுவார்கள். நம் தமிழக மக்களோ அருகிலிருக்கும் ஏலகிரி, ஏற்காடு தொடங்கி, கொடைக்கானல், ஊட்டி, குலு மணாலி, காஷ்மீர், சுவிட்சர்லாந்து என்று அவரவர் விருப்பத்திற்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்பப் பயணங்களை வகுத்துக் கொண்டு வாழ்க்கையை ரசிப்பார்கள்.

’ஊர் சுற்றி வந்தாலே உவகை பெருகி உடல் நலம் தேறும்’ என்பார்கள். சில நோய்களுக்கு, மருத்துவர்களே கூட இடத்தை மாற்றச் சொல்லி ஆலோசனைகள் வழங்குவதுண்டு. கணினி படிப்பும், தகவல் தொழில் நுட்ப படிப்புகளும் பெருகிய பிறகு, நமது இளம் வயது ஆண்களும், பெண்களும் உலகம் முழுவதும் வியாபித்துப் பணியாற்ற ஆரம்பித்து விட்டார்கள்!

இப்பொழுதெல்லாம் விமானங்களில் முதியோர்களே அதிகமாகப் பயணம் மேற்கொள்கிறார்கள். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் நமது இளம் வயதினர் இல்லாத இடமே கிடையாது என்று சொல்லுமளவுக்கு, எங்கணும் நிரம்பி உள்ளார்கள்.

இந்நிலையில் இந்த வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு, ‘மிடில் ஈஸ்ட்’ என்று அழைக்கப்படும் அரபு நாடுகள் விமானக் கம்பனிகளை ஆரம்பித்து நல்ல பிசினஸ் பார்த்தன. துபாய், அபுதாபி, ஓமன், கத்தார் போன்ற நகரங்கள் வழியாகப் பெரும்பாலான விமானங்கள் இயக்கப்பட்டன. நம் நாட்டிலிலிருந்து இந்த நகரங்களுக்குச் சென்று, அங்கிருந்து மாற்று விமானங்களில் பயணங்களை மேற்கொள்ள வழியேற்படுத்தி, நன்றாகச் செயல்படவும் செய்தார்கள்.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க யுத்தம் தொடங்கிய பிறகு, எல்லாமே குளறுபடி ஆகிப்போனது. திடீர் திடீரென்று விமானங்களை ரத்து செய்வதும், பல விமானங்களைத் தாமதப் படுத்துவதுமாகப் பயணியரைச் சிரமப்படுத்த ஆரம்பித்தார்கள்.

இதையும் படியுங்கள்:
இரவுப் பயணமும் இளையராஜாவின் இதமான இசையும்: ஆழ்மன அமைதி தரும் ஆன்மீக அனுபவம்!
flight delays conflict

மூன்று மாதங்களுக்கு முன்பாகவே பயண நிகழ்ச்சிகளை முடிவு செய்து, ஆங்காங்கே தங்கும் வசதிகளுக்கும், பிறவற்றுக்கும் ஏற்பாடு செய்தவர்கள் அனைவருமே அல்லல்பட ஆரம்பித்தார்கள். விமானத்தில் ஏறியோர் உயிருடன் தரையிறங்குவோமா என்று கிலியில் பயணம் செய்யும் நிலையையும் ஏற்படுத்தினார்கள்.

வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவது சகஜந்தான். ஆனால் எதிர்பாராத திடீர் மாற்றங்கள் பலரை நிலைகுலையச் செய்து விடும். ’சேர்ந்தாற்போல் சில தலைமுறைகள் வாழ்ந்தவர்களும் இல்லை; சேர்ந்தாற்போல் சில தலைமுறைகள் தாழ்ந்தவர்களும் இல்லை’ என்பார்கள். அது உண்மையே என்று நிரூபிக்கக் கண் முன்னாலேயே சில நிகழ்வது உண்டு.

கொரோனா காலம் கொடுமையானதுதான் என்றாலும், உலகினரால் கீழ் நிலைப் பணியாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள், கடவுளர்களாகப் போற்றப்படும் கண்ணிய நிலையை எய்த, கொரோனா உதவிற்று. இந்த யுத்தமோ அரபு நாடுகளின் விமானப் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்து விட்டது.

விமானப்பயணியர் அரபு நாடுகள் வழியைத் தவிர்த்து, சுற்று வழி என்றாலுங்கூட பிற வழிகளில் பயணித்துத் தங்கள் சேர்விடங்களை அடைகிறார்கள். என்ன? பயணக் கட்டணங்களை உயர்த்தி விட்டார்கள். டபுள், ட்ரிபிள் என்று ஆக்கி விட்டார்கள். பணி நிமித்தமும், தவிர்க்கமுடியாத சூழலிலும் பயணிப்போர் பணத்தைப் பற்றிய கவலை கொள்ள முடியாதல்லவா?

இதையும் படியுங்கள்:
சிறு(சிரி)கதை: அம்பியின் அரசியல்!
flight delays conflict

நாமும் ஒரு வாரம் முன்னதாகவே துபாய் வழியாக சூரிக்கை அடைய வேண்டியவர்கள். விமானங்கள் ரத்தாகிப் போனதால், டெல்லி வழியாக சூரிக்கை அடைந்தோம். எம்மோடு பயணம் செய்த பலர் சூரிக்கில் இறங்கிப் பல அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வதாகச் சொன்னார்கள். பறக்கும் நேரமும், பணச் செலவும் அதிகமென்றாலும், பயமற்ற பயணம் என்பதால் அதனைத் தேர்ந்ததாகக் கூறினார்கள். சிறிய நாடான சுவிட்சர்லாந்து பல ஸ்பெஷல் ப்ளைட்டுகளை விட்டுப் பயணியரின் வயிறுகளில் பால் வார்க்கிறது.

சிறு நாடுகளுக்கும் நேரம் சில சிறப்புக்களை வழங்கி ஊக்குவிக்கும் போலும். காலந்தானே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. ஈரான் சிறு நாடென்றாலும், இன்று அமெரிக்காவையே அலற விடுவதாகவும், ட்ரம்பின் தூக்கத்தைக் கெடுத்துச் சிரமப் படுத்துவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் இரவு எட்டு மணிக்கு மேல் விண்ணைத் தொட்ட விமானம், டெல்லி மண்ணை நள்ளிரவில் தொட, ஐந்து மணி நேர இடைவெளிக்குப் பிறகு, டெல்லிக்கு டாடா சொல்லிக் கிளம்பினோம். சூரிக் நேரம் எட்டரை மணிக்கு (நம்மூரில் மதியம் ஒரு மணி) இறங்கினோம்.

நம்மூரில் கதிரவன் வியர்வையைத் தர, இங்கோ குளிரைக் கொண்டு வந்து கொட்டியது இயற்கை. நேற்று இரவில் பனிமழை பொழிய இதம் இதயத்தைத் தொட, அதனை உங்களனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி!

விபரீதமாகிப் போன விமானப் பயணம் மீண்டும் நல் வழிக்குத் திரும்பி அமைதி தந்திட, ஆண்டவனைப் பிரார்த்திப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com