

“இந்த சனிப்பெயர்ச்சி ஆனதும் அம்பிக்கு நேரம் சூப்பரா இருக்கு. ஓஹோனு வரப்போறார். குடத்திலிட்ட குத்து விளக்கு போல இருக்கிறவர் மலை மேலிட்ட குத்து விளக்கு போல ஐயா ஜொலிப்பார்" ஜோசியர் சொல்லச்சொல்ல அம்பிக்கு நம்பிக்கை உச்சிக்கு போனது.
ஒரு 500 ரூபாய் நோட்டை நீட்டி “நெசமாலுமா?” என்று ஜொள் வழிய கேட்டான். குஷியான ஜோஸியர் “ஆமாம்..! கிரஹங்கள் தருகிற பலன். நான் ஒரு மெஸேஞ்சர் தான்” என்றார் அடக்கமாய்.
“எனக்குள் பல திறமைகள். ஒன்றன் பின் ஒன்றாய் நிக்குது. எதைனு சொல்றது?”
“ஊரிலே பெரிய மனுஷனாகப்போறீங்க.”
குழம்பினான்.. "வாயாலே செயகிற தொழில்” க்ளூ தந்தார்.
“அப்படியா? எதாயிருக்கும்? ஆங்.. அரசியல் தான்... சொல்லி வைத்தால் போல தேர்தல் வருது.”
"கரெக்டா ரூட்டை பிடிச்சீங்க,” என்றவர், “இன்னொரு 500 ரூபாய் தாங்க. இதை உங்க வெற்றிக்கு அடையாளமாய் இப்பவே வைச்சுக்கிறேன்.” வலை விரித்தார்.
“கையில் நாலனா கூட இல்லை.” வடிவேல் மாதிரி பையை பிதுக்கினான்.
“பரவாயில்லை இதெல்லாம் தான் கேதுவின் வேலை” என்று கிளம்பினார் ஜோஸியர். போகும் போது செல் நம்பரை கொடுத்து "வீட்டுக்கு போயி ஜீ பே பண்ணுங்க,” என்றார்.
அம்பிக்கு செம குஷி. தேர்தலில் நிக்கப்போறேன். புது ரூட். என்றபடி தன் மச்சுனன் கோண்டுவுக்கு போன் செய்தான்.
“எங்கேடா இருக்கே? போனை எடுடா,” என்று முனுமுனுக்க, “என்ன மாப்பிளே! திடீர்னு என் ஞாபகம்? வீட்டை விட்டு போடானு விரட்டினீங்க இப்ப எதுக்கு கூப்பிடறீங்க?” சற்று கோபமாய் கேட்டான்.
“டேய் நீரடிச்சு நீர் விலகுமாடா? கோபத்திலே சொன்னதெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு. உடனே வாடா."
“இருந்தாலும் நல்லாத்தான் பேசறீங்க. பேசாமல் நீங்க தேர்தலில் நின்னு எம். எல். ஏ ஆகலாம்."
“எப்படிடா கண்டு பிடிச்சே. செம மூக்குடா உனக்கு..!”
“செம மூக்கா? செம மூளைனு சொல்லுங்க. இப்பவே கண்ணை கட்டுதே.! உளற ஆரம்பிச்சிட்டீங்க. கண்டிப்பா மந்திரி ஆயிடுவீங்க.”
“இதே தான் ஜோஸியரும் சொன்னார் வேற மாதிரி...”
“மாப்ளே எப்ப ஜோஸியரை நம்பினீங்களோ அப்பவே அரசியல்வாதி ஆயிட்டீங்க. தேர்தலில் நாம மனுதாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். புயல் வேகத்தில் செயல்படனும்.” உஷார் செய்தான்.
“சும்மா பேசிக்கி்ட்டே நிக்காதே. உடனே வா,” என்று போனை வைத்தான் அம்பி.
பத்தே நிமிடத்தில் வந்தான் கோண்டு.
“வாடா வா என் சிங்கமே.. புறநானூற்று வரலாறு படைக்க வா. ஓடிப்போய் ஒளியாதே. தேடிப்போய் வெற்றி கொள்...” அம்பி பிரச்சாரத்துக்கு தயாராக..
கோண்டு, "இதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். முதலில் மனு தாக்கல் செய்வோம்” என்று கிளம்ப, எதிரே அம்பியின் மனைவி ராணி வந்து “எங்கே போறீங்க? என் உள் பாவாடையை தோவச்சுடீங்களா?" என்று கேட்க,
“சுத்தம்.. போகும்போதே சகுனத்தடை” அம்பி எரிச்சலாக,
“வீரனுக்கு ஒரு முறைதான் சாவு. செத்துச்செத்து பிழைக்கறவன் கோழை. வாங்க களம் காண்போம்” கோண்டு தைரியமூட்ட,
“ஏங்க என் உள் பாவாடை..” ராணி கேட்க,
“சே தங்கையானாலும் புருஷனை கேவலப்படுத்தறதுக்கு அனுமதிக்க மாட்டேன்” என்ற கோண்டு “தப்பு போட்டுக்க தங்கச்சி.”
“டேய் நோரமாச்சு வா. உள் பாவாடையை தோய்த்து உலர்த்திட்டேன்” என்று பொதுவாய் பேச,
“ஆண் குலத்திற்கே அவமானம்” முறைத்த கோண்டு எமஹாவில் கிளம்ப ஏறி உட்கார்ந்தது்ம் வண்டி பஞ்சர். பெட்ரோலும் இல்லை.
“மாப்ளே சகுனம் சரியா இல்லையே!”
“வீரன் சகுனம் பாக்கமாட்டான்.”
“அது சரி. நீங்க பாக்கனுமே!” என்று கெளன்டர் விட்டான் கோண்டு.
ஒருமுறை முறைத்த அம்பி, காருக்கு போன் செய்ய, அதில் சென்றனர்.
மனுவை கையெழுத்திட்டு, மனுதாக்கல் செய்து வெளியேவர, ஒரு கூட்டம் “தலைவர் அம்பி வாழ்க!” என்று கூச்சலிட புளகாங்கிதமடைந்த கோண்டு, “எப்படி என் ஏற்பாடு? ஒருத்தருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் முப்பதாயிரம் தந்தால் நாள் முழுக்க கத்துவான்.”
“என்னிடம் அவ்வளவு பணமில்லையே..." ஜகா வாங்கினான் அம்பி.
“பரவாயில்லை. காருக்கு பின்னாடி ஓடி வர இன்னொரு ரெண்டாயிரம். மொத்தம் 90ஆயிரம்”.
“யாரைக்கேட்டு ஏற்பாடு செஞ்சே? என்னிடம் பணமில்லை.”
“இப்போ இவங்களே உங்களை ஒழிக என்று கத்துவாங்க. பரவாயில்லையா?”
“என்னடா பயமுறுத்தறே?”
“முழிக்காதீங்க. உங்க மைனர் செய்னை கழட்டுங்க. பின்னாடி தான் அடகுக்கடை”
“ஓ! ப்ளான் பண்ணிதான் இடம் பிடிச்சிருக்கான். இந்தா செயின்”
செயினை வாங்கிய பத்தாவது நிமிடம் பணம் கூட்டம் கத்துவதை நிறுத்த, “பணத்தை உடனே கொடுங்க. இல்லைனா கோஷம் மாறிடும்.”
பணத்தை ஆட்டிக்காண்பித்த அம்பியை “தலைவர் வாழ்க..!” என்று சத்தமாய் கத்தினர்.
“இதை போட்டோ எடுடா. எல்லா பத்திரிக்கை, டிவி மற்றும் இந்த தொகுதி செல்கள் மற்றும் வால் போஸ்டர்கள் எல்லாத்திலும் போட வேண்டும்” அம்பி சொல்ல, “உங்களுக்கு அரசியல் தெளிவாத் தெரியுது” பாராட்டினான் கோண்டு.
“என் கட்சியின் பெயர் எளிமை. நேர்மை, உழைப்பு, செழிப்பு தான் எங்கள் கொள்கை.” என்று அம்பி கூற,
“எளிமை கட்சி வாழ்க” சத்தமாய் கூவினர் அங்கிருந்தோர்.
“பிரமாதம்” என்று முதுகில் தட்டிய கோண்டு, "ஐயோ! போலீஸ்” என்று நைஸாய் வெளியேற முயற்சி செய்ய,
“என்ன யெஸ்கேப் ஆக பாக்கறே?” என்று கட்டிப்போட்டு, “மிஸ்டர் கோண்டு தான் எளிமை கட்சியின் தலைவர்” என்று அறிவிக்க,
"இப்ப கேட்டாங்களா? என்னை போலீஸில் மாட்டிவிடத்தானே என்னை தலைவர்னு அறிவிச்சீங்க" பயந்து கேட்க,
போலீஸ் வந்து கோண்டுவிடம் “அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தினது, பப்ளிக்குக்கு இடைஞ்சல் செய்தது, என்று பல கேஸ்களில் புக் செய்ய,
“போலீஸ் அராஜகம் ஒழிக“ என்று கத்திய அம்பியையும் கைது செய்தது.
கூட்டம் தானே கலையத் தொடங்கியது. ராணி காலையில் ஒரு டொக்கு வக்கீலை வைத்து இருவரையும் ஜாமினில் எடுத்து, “சும்மா இருக்க முடியலையா?” என்று எரி்ந்து விழுந்தாள்.
வெளியே பெரிய கூட்டம் “தலைவர் வாழ்க” என்று கத்த,
"நான் தான் அரேஞ் பண்ணினேன்” என்று கோண்டு பெருமைப்பட,
“போடா இவனே! இதுக்கு வேற தனியா கேஸ் வரும்” கோபமாய் முதுகிலடிக்க, ராணி வேறு “இவரை கெடுக்கறதே நீ தான்” என்று குட்டினாள் கோண்டுவை.
காருக்குள் நுழையும் போது ஒரு கனமான ஆசாமி தடுத்து “எங்கே போறீங்க. எனக்கு செட்டில் பண்ணுங்க” என்று கை பிடித்து இழுக்க, ராணியின் செயினை பார்த்தான் கோண்டு.
“புரியறது” என்ற ராணி செயினை கழட்டித்தர, “இல்லைனா விடமாட்டாங்க.” என்று கோண்டு சொல்ல கை மாறியது செயின்.
"நம்ம கட்சிக்குனு மகளிர் அணித்தலைவியாய் ராணியை அறிமுகப்படுத்துவோம். ப்ரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்," என்றான் அம்பி.
“என்ன? எதுக்குனு” கேட்ட ராணியை, “அரசியலுக்கு வா. ஜாலியா இருக்கலாம்” என்றான் கோண்டு.
“ஆமாம் மீடியாகளி்ல் உன் பெயரோடு போட்டோ வரும். உன்னை பேட்டி எடுப்பார்கள். டிவி சேனலிலெல்லாம் நம்மை பற்றி பேசுவாங்க. விவாதம் நடக்கும். ஊரில் பெரிய மனுஷி ஆயிடுவே.”
“அப்படின்னா சரி” என்று ராணி தலையாட்ட,
“சும்மா ராப்பகல் பாக்காமல் உழைக்கணும். ஊர் சுத்தணும். வெயில் மழை பாக்காமல் அலையணும். பணச் செலவை பற்றி கவலைப்படக்கூடாது. எல்லா நிகழ்வுகளையும் கவனித்து அறி்க்கை தரணும். சமயத்தில் ஜெயிலுக்கு போக வேண்டி வரும்” அம்பி மிரட்ட...
“ஐய்யய்யோ..! எனக்கு இது சரிப்படாது என்னை விட்டுடு“ கையெடுத்து கும்பிட்டாள்.
“அது...” என்று கர்ஜித்து கர்வமாய் நின்றான் கோண்டு.
“வீட்டுக்கு போய் சாப்பிட்டு பிரச்சாரத்துக்கு போவோம். வெற்றி நமதே!" என்று அம்பி சொல்ல, “ஒரு மணி நேரம் தூங்கிட்டு போவோம்" வேண்டுகோளை வைத்தான்.
“முடியாது. வெற்றி பெறும் வரை தூக்கம் கிடையாது” அம்பி சொல்ல, “சரி” என்றழுதான் கோண்டு.
வீட்டுக்கு போனதும் ஒரு போன், “நான் முல்லை கட்சித்தலைவர் பேசறேன். அம்பி ஸாரா? உங்க கட்சிக்கு ஒரு எம்பி சீட் தரேன். நீங்க தேர்தலில் நிக்காதீ்ங்க. உங்க ஜாதி ஓட்டை நம்பித்தானே நிக்கறீங்க. வேணாம்.”
“எங்களுக்கு பதவி முக்யமில்லை. தொண்டு செய்யத்தான் அரசியலுக்கு வரோம்...” அம்பி சொல்ல,
“பணமா வேணுமா? தரேன்.”
“தேவையில்லை. நீங்க பேசறதிலேயே என் வெற்றி நிச்சயம்னு தெரியுது.”
“அப்ப நேரில் பேசுவோம். வரு தியேட்ருக்கு வாங்க பேசுவோம்.”
“சரி” என்ற அம்பி, “இப்பவே வரோம்” என்று கிளம்ப,
“நிறைய பணம் தருவான். ரெண்டு பேரும் சமமா பிரிச்சுக்குவோம்” என்றான் கோண்டு.
“இது நல்ல பிஸினஸ் தேர்தலில் நிற்காமலே பணம் பார்த்து விடலாம்” அம்பி திட்டமிட்டான்.
ஒரு பெரிய மீசை வைத்த தடியன் வரவேற்றான்.
“வாங்க..! ஐயா வெயிட் பண்றார்” என்று உள்ளே கூட்டிச்சென்றான்.
“வணக்கம் ஐயா” என்ற பெரியவர் ஒருவர், “உட்காருங்க” என்று கேட்டு ஒரு பையை எடுத்தார்.
“இதுவரை எண்ணல...”
"ரெண்டே பேர். கட்சியே இன்னும் பதிவே செய்யலை. அதற்குள் பேட்டி தரதும், போஸ்டர் ஒட்டறதும், பேனர் வைக்கறதும் ஓட்டை பிரிக்கத்தானே. எவ்வளவு வேணும்?”
“250 கோடி” கோண்டு கேட்க, தலைவர் அம்பி, "ஆமாம் சரியான தொகை தான்."
"பின்னாடி தோட்டத்துக்கு வாங்க ஒருத்தர் ஒருத்தராய்.”
“நான் தான் தலைவர். முதலில் நான் போறேன்...” கோண்டு பறக்க,
“அவசரப்படாதே” என்ற பெரியவர் 5 நிமிடம் தான். அடுத்தவர் வரலாம். பெட்டியை வாங்கிட்டு வரவேண்டியது தான்." கனிவாய் பேசினார்.
“முதலில் தலைவர் வரட்டும்” என்று கோண்டுவை கூப்பிட, அரை மணி நேரமாகியும் அவன் வரவில்லை.
“பணத்தை எண்ணுகிறாற்போல."
"சரி.. நீங்களும் வாங்க” என்று தோளில் கை போட்டு அழைத்துச்செல்ல கும்மிருட்டில் ஒரு ரூம்.
“ஸார்” என்று அம்பி கூப்பிட, அவர் இல்லை.
“பயமாயிருக்கு” என்று நடுங்கிய அம்பி தோளில் ஒரு கரலாக்கட்டை பளார் பளாரென்று அடி விழ, “ஐயோ செத்தேன்” என்று அரை மயக்கத்தில் விழ, புளிய மரத்தில் கட்டிப்போட, பக்கத்து புளிய மரத்தில் கோண்டு இருப்பதையே இரண்டு நாள் சென்று தான் பார்த்தான்.
மதிய நேரத்தி்ல் ரெண்டு குண்டர்கள வந்து “பணம் வாங்கவே தேர்தலில் நின்னா இப்படித்தான். ஓடுங்க” என்று விரட்டிவிட,
"எதிர்பார்த்தேன் இப்படி நடக்கும்னு" என்று தர்மாஸ்பத்திரியில் அட்மிட் பண்ண,
“இனி எம்பி சீட்ல தான் நிக்கனும்” என்று சொன்ன அம்பியை, கையெடுத்து கும்பிட்ட கோண்டு, “ஆமாம், நீங்க யாருனு தெரியலையே...” என்றான்.
பக்கத்து பெட்டில் குத்துயிரும் குலைஉயிருமாய் ஜோஸியர். “நீங்க வருவீங்கனு தெரியும்” என்ற ஜோஸியரை, “ஏய்..!” என்று முறைத்தான் கோண்டு.
அம்பி, "ஏன்யா..! இது உனக்கே நல்லாயிரு்க்கா?" என்று பரிதாபமாய் கேட்டான்.