

சங்கவியும் அபிநயாவும் குழந்தைக் காலம் முதலே தந்தையின் கருமித்தனம், கட்டுப்பெட்டித்தனம், ஆதிக்கம், ஒடுக்குமுறை ஆகியவற்றில் வளர்ந்தவர்கள் என்பதால் அதற்குப் பழகிவிட்டனர்.
“ஏன் எப்பவும் நாலஞ்சு பளைய ட்ரஸ்ஸையே திரும்பத் திரும்பப் போட்டுட்டு வர்ற? ரெண்டு ட்ரஸ் தவிர வேற நல்ல ட்ரஸ்ஸே இல்லையா?”
இவளது பழைய ஆடைகள் குறித்து பரிகசித்துவந்தனர். அவர்களிடம் பெருமாள்சாமியின் கருமித்தனம், கெடுபிடிகள் பற்றிச் சொன்னால் அது குறித்தும் கேலி செய்வார்கள் என்பதால் சொல்லவில்லை. தோழிகளையும் சொல்ல வேண்டாம் என்று தடுத்துவிட்டாள். அதனால் கேலிகள் வழக்கமாகத் தொடர்ந்தன.
“பளைய ட்ரஸ் போட்டுட்டுப் போகும்போது, வேலைக்காரி, பிச்சைக்காரின்னெல்லாம் என்னை கேலி பண்றாங்கம்மா! ‘எங்களோட பளைய ட்ரஸ்களை வேண்ணாக் குடுக்கறோம். அதெல்லாம் இதைவிட நல்லா இருக்கும்’னு சொல்லி, இன்னைக்கு ரொம்பவே அவமானப்படுத்திட்டாங்க. என்னால இனியும் இந்த அவமானங்களைத் தாங்கிட்டு காலேஜ் போக முடியாது…” என்றாள் சங்கவி, அழுகையோடு.
லோகநாயகிக்கு அவளின் கஷ்டங்கள் புரிந்தன.
“அதுக்காக காலேஜ் போகாம இருக்கக் கூடாது. உங்கப்பா வரட்டும். அவருகிட்ட இதைச் சொல்லி, புது ட்ரஸ் வாங்கறக்குப் பணம் வாங்கி, நாளைக்கே போயி உனக்கு வேணுங்கற ட்ரஸ்ஸை வாங்கிக்கலாம்” என்றாள்.
*****