கல்வியை பொறுத்த வரையில், உலகளவில், மக்கள் பலவிதமான முறைகளை கையாளுகிறார்கள். பல்வேறு துறையை சேர்ந்த பல்கலைகழகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டில் வெவ்வேறு விதமான education system ஐ பின்பற்றுகிறார்கள். ஒரு சில தத்துவஞானிகள் மற்றும் சிந்தனையாளர்களின் கோட்பாடுகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில்தான் கல்வி நிலையை வடிவமைக்கிறார்கள். அந்த வகையில் இந்த உலகிற்கு சிறந்த கல்வித் தத்துவத்தை வழங்கிய முக்கிய நபர்களில் ஒருவரான ஜீன்-ஜாக் ரூசோவின் வாழ்க்கை, படைப்புகள், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை இப்பதிவில் பார்க்கலாம்.
ரூசோ அவர்கள் 1712 ஆம் ஆண்டு ஜெனீவாவில் பிறந்தார்; 1778 ஆம் ஆண்டு 66ஆம் வயதில் இறந்தார். அவரது முக்கிய மற்றும் முதல் தத்துவப் படைப்பு 1750 இல் வெளியிடப்பட்டது. இது கலை மற்றும் அறிவியலின் தார்மீக விளைவுகள் குறித்த ஒரு சொற்பொழிவாக இருந்தது.
1753 ஆம் ஆண்டில், 'மனிதர்களிடையே சமத்துவமின்மையின் தோற்றம் குறித்த சொற்பொழிவு' என்ற தலைப்பில் மற்றொரு கட்டுரை வெளியிடப்பட்டது. அவரது நாவலான ஜூலி அல்லது புதிய ஹெலோயிஸ் 1761 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
1762 ஆம் ஆண்டில் அவர் இரண்டு மிக முக்கியமான தத்துவ ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். முதலாவது அரசியல் தத்துவம் குறித்த ஒரு படைப்பான 'சமூக ஒப்பந்தம்'. இரண்டாவது கட்டுரையின் தலைப்பு 'எமிலி' அல்லது 'கல்வி'. அதில் அவர் கல்வி குறித்த தனது கருத்துக்களை விளக்கியிருக்கிறார்.
'எமிலி' என்பது கல்வியின் தன்மையை குறித்து ஜீன்-ஜாக் ரூசோ எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரையாகும். இது முதலில் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டு 1762 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ரூசோ தனது 'கன்ஃபெஷன்ஸ்' இல் இந்த படைப்பை "எனது அனைத்து எழுத்துக்களிலும் சிறந்தது; மற்றும் மிக முக்கியமானது" என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரெஞ்சு புரட்சியின் போது, எமிலி ஒரு தேசிய கல்வி முறையை உருவாக்குவதற்கு உத்வேகம் அளித்தது. எமிலி அரசியல் மற்றும் தத்துவமும் நிறைந்த இயல்பை உடையது.
ரூசோ, எமிலி என்ற கட்டுரையில் அவருடைய கல்வித் தத்துவச் சிந்தனையை மிக அழகாக விளக்கியிருக்கிறார்.
இயற்கை நியதியினடிப்படையில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு குழந்தைகளை பார்க்க வேண்டுமென்றும், வளர்ப்பு முறை இயற்கை நியதிக்கு ஏற்றவாறு அமைய வேண்டுமென்றும் ரூசோ விரும்பினார்.
ஒரு பிள்ளைக்கு பெற்றோர்கள் அவனை ஒரு பிள்ளையாக வளர்வதற்கும் வாழ்வதற்கும் இடமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குழந்தைகளின் நிலையை மாற்றுவதால் அவர்களின் மனம் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
அவர் குழந்தைகளின் கல்வி கற்கும் முறையை மூன்று ஊடகங்களின் மூலமாக கூறியிருக்கிறார்..
குழந்தை, மற்றும் சிறு பிள்ளைப் பருவங்களில் பிள்ளைகள் இயற்கைச் சூழலில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
சூழலுக்கு ஏற்றவாறு கல்வி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கல்வி கற்க வேண்டும்.
மூன்றாவதாகப் பண்டங்களையும் பொருள்களையும் பயன்படுத்திக் கொண்டு கல்வி பெறவேண்டும்.
ரூசோ சமர்ப்பித்த கல்வித்திட்டம் – ஐந்து பகுதிகள்:
குழந்தைப் பருவம் – 2 வயது வரை
பிள்ளைப் பருவம் - 2 லிருந்து 12 வயது வரை
முன் கட்டிளமைப் பருவம் – 12 லிருந்து15 வயது வரை
கட்டிளமைப் பருவம் – 15 லிருந்து 19 வரை
வளர்ந்த பருவம் – 20 வயதிற்கு மேல்
குழந்தைகளுக்கு உடல் ரீதியான வளர்ச்சியை போலவே அறிவிலும் சமூகரீதியாகவும் உணர்ச்சிகளும் அவர்களுடைய வயதிற்கேற்றவாறு வேறுபடும், ஆகவே சிறு வயது குழந்தையின் சிந்திக்கும் முறையானது வளர்ந்தோர் சிந்திக்கும் முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அதனால் குழந்தைகளை கூர்ந்து கவனித்து அவர்களுடைய திறமைகளுக்கு ஏற்ற கல்வியைத் திட்டமிட வேண்டும் என்பதை ரூசோ வலியுறுத்துகிறார்.
குழந்தைகளின் வயதையும் திறமையையும் கருத்தில் கொள்ளாமல், பெற்றோர்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பிள்ளையை வழிநடத்துவது என்பது ஒரு பெரிய பாரத்தை குழந்தைகளின் மீது சுமத்துவதற்கு ஈடாகும். அத்தகைய தவறான முறையைப் பின்பற்றாமல் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிப்பாங்குக்கு ஏற்றவாறு அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டுமென்பதை இந்த கட்டுரையில் ரூசோ அழகாக எடுத்துக்காட்டி இருக்கிறார்.
அந்தெந்த வயதிற்கும் பருவத்திற்கும் ஏற்றவாறும் குழந்தைகளுடைய வளர்ச்சிக்கும் ஏற்றவாறு கல்வி முறையை வழங்க வேண்டும் என்பதே அவருடைய முக்கிய கோட்பாடாக இருந்தது.