
இன்றைய உலகில் சுற்றுச்சூழல் என்பது மிகப் பெரிய கவலையாக உள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் மனித குலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இன்று உருவாகும் கழிவுகளின் அளவு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்துவதால், அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தல் அவசியம்.
பொதுவாக, மக்கும் மற்றும் மக்காத என்று இரண்டு வகையான கழிவுகள் உள்ளன. மக்காத சில பொருட்கள் உள்ளன. ஆனால், அவற்றை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம். கழிவுகளில் பெரும் பகுதியை மறுசுழற்சி செய்யலாம் என்றும், ஒரு பகுதியை உரமாக மாற்றலாம் என்றும், அதில் ஒரு சிறிய பகுதி மட்டுமே பயன்படாத உண்மையான கழிவு என்று அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
வீடுகளில் இருந்து உற்பத்தியாகும் கழிவுகளை ஈரமான மற்றும் உலர்ந்த கழிவுகள் போன்ற வகைகளின்படி வெவ்வேறு குப்பைத் தொட்டிகளில் பிரிக்க வேண்டும். குப்பைத் தொட்டிகள் (Waste Bins) பொதுவாக, நிறங்களால் வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொன்றும் முறையான அகற்றல் மற்றும் மேலாண்மைக்கு ஒரு குறிப்பிட்ட கழிவு வகையைக் குறிக்கின்றன.
பொதுவான நிறக் குறியிடப்பட்ட குப்பைத் தொட்டிகளில் பின்வருவன அடங்கும். மக்கும் கழிவுகளுக்கு பச்சை நிறம், மக்காத/மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளுக்கு நீல நிறம், அபாயகரமான கழிவுகளுக்கு சிவப்பு நிறம், காகிதம் மற்றும் கண்ணாடி போன்ற குறிப்பிட்ட பொருட்களுக்கு மஞ்சள் போன்ற பிற நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
1. பச்சைக் குப்பைத் தொட்டிகள்
இயற்கையாகவேச் சிதைந்து போகும் மக்கும் கழிவுகளுக்காக பச்சை நிறக் குப்பைத் தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. உணவுக் கழிவுகள், தோட்டக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் மற்றும் பிற கரிமப் பொருட்கள் போன்றவைகளை இந்நிறத்திலான குப்பைத் தொட்டிகளில் சேகரிக்கலாம். இவை பெரும்பாலும் உரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது நிலப்பரப்பு கழிவுகளைக் குறைக்கவும், ஊட்டச்சத்து நிறைந்த மண்ணை உருவாக்கவும் உதவுகிறது.
2. நீலக் குப்பைத் தொட்டிகள்
மக்காத மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளுக்கு நீல நிறக் குப்பைத் தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள், காகிதம், அட்டை, கண்ணாடி மற்றும் உலோகம் போன்றவை இந்நிறக் குப்பைத் தொட்டிகளில் சேகரிக்கப்படுகின்றன. மறுசுழற்சி முயற்சிகளுக்கு இவை அவசியம். குப்பைக் கிடங்குகளில் முடிவடைவதற்குப் பதிலாக, பொருட்கள் மீண்டும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கின்றன.
3. சிவப்புக் குப்பைத் தொட்டிகள்
அபாயகரமான மற்றும் உயிரி மருத்துவக் கழிவுகளுக்குச் சிவப்பு நிறத்திலான குப்பைத் தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவக் கழிவுகள், கூர்மைகள் (ஊசிகள்), வேதிப்பொருட்கள் மற்றும் சில வகையான மின்னணுக் கழிவுகள் போன்றவை இந்நிறக் குப்பைத் தொட்டிகளில் சேகரிக்கப்படுகின்றன. மாசுபாட்டைத் தடுப்பதற்கும், தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதன் மூலம் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் இவை மிக முக்கியமானவை.
4. மஞ்சள் குப்பைத் தொட்டிகள்
சில நேரங்களில் காகிதம் மற்றும் கண்ணாடி போன்ற குறிப்பிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற குப்பைகளை மஞ்சள் நிறக் குப்பைத் தொட்டிகளில் சேகரிக்கலாம். காகிதம், அட்டை மற்றும் கண்ணாடி பாட்டில்கள் போன்றவைகளை இதில் சேகரிக்கலாம். இந்தப் பொருட்களுக்கான மறுசுழற்சி செயல்முறையை சீராக்க இது உதவுகிறது.
குப்பைத் தொட்டிகளில் கழிவுகள் சேகரிப்புக்கு மேற்காணும் நிறங்கள் வழியிலான சில வழிகாட்டுதல் சொல்லப்பட்டிருந்தாலும், வீடு, கடைகள், நிறுவனங்கள் என்று அமைப்புகளுக்கேற்ப குப்பைத் தொட்டிகள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டிலிருந்து வருகின்றன.
1. வணிகக் குப்பைத் தொட்டிகள்
வணிக அமைப்புகளில் கழிவு சேகரிப்புக்குப் பெரிய அளவிலான குப்பைத் தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் இக்குப்பைத் தொட்டிகள் சக்கரங்கள் பொருத்தப்பட்டவையாக இருக்கின்றன.
2. மருத்துவமனைக் குப்பைத் தொட்டிகள்
கூர்மையான பொருட்கள் கொண்ட கொள்கலன்கள் உட்பட பல்வேறு வகையான மருத்துவமனை கழிவுகளுக்கான சிறப்புத் தொட்டிகள் இருக்கின்றன.
3. கெட்டியான தொட்டிகள்
தொழில்துறை அமைப்புகளில் கழிவுகளை சுருக்கவும், அளவைக் குறைக்கவும் இவ்வகையான தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.
4. கால் பெடல் தொட்டிகள்
கைகளைப் பயன்படுத்தாமல் இயக்கக்கூடிய இவ்வகைத் தொட்டிகள், பெரும்பாலும் சமையலறைகளிலோ அல்லது சுகாதார அமைப்புகளிலோ பயன்படுத்தப்படுகின்றன.
5. மூடியிடப்பட்ட குப்பைத் தொட்டிகள்
சமையலறை அல்லது அலுவலக பயன்பாட்டிற்கான சிறிய தொட்டிகள்.
6. சக்கரத் தொட்டி உறைகள்
பொது இடங்களில் சக்கரத் தொட்டிகளை மறைத்து ஒழுங்கமைக்கப் பயன்படுகிறது.
குப்பைத் தொட்டிகளின் பயன்பாடு என்பது கழிவு மேலாண்மை அமைப்புகளின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கும் மறுசுழற்சி முயற்சிகளை எளிதாக்குவதற்கும் முறையான பிரித்தல் மற்றும் அகற்றலை ஊக்குவிக்கிறது.
எனவே, வீடுகளில் கழிவாகும் குப்பைகளை மேற்காணும் நிறத்திலான குப்பைத் தொட்டிகளில் தனித்தனியான குப்பைத் தொட்டிகளில் பிரித்து, வீடு தேடி வரும் குப்பை சேகரிக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்குக் கழிவுப் பொருட்களைப் பிரித்து வழங்கி, உள்ளாட்சி அமைப்புகளின் கழிவு மேலாண்மை முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தந்து உதவுங்கள்.