
சமீபத்தில் என் கணவருக்கு முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (Joint replacement surgery) நடந்ததன் காரணமாக ஏற்பட்ட அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். ஏனென்றால் இதில் இருந்து நாங்கள் நிறைய பாடம் கற்றுக் கொண்டோம்.
முதலாவதாக 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மூட்டு வலியை அலட்சியம் செய்யாமல் ஆரம்பத்திலேயே ஒரு ஆர்த்தோவிடம் காட்டி விடுவது நல்லது. அப்படி செய்யாமல் அதை பொறுத்து கொண்டு நடப்பது, படி ஏறி இறங்குவது என்று செய்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் வலி மிக அதிகமாகி, அறுவை சிகிச்சை தவிர்க்க முடியாமல் போவதற்கான சாத்தியம் ஏற்படலாம். ஸ்டேஜ் 1 மற்றும் ஸ்டேஜ் 2 வரை மருந்துகள், ஊசிகள் மூலம் வலி குறைத்து தேய்மானத்தைத் தடுக்க முடியும் என்பது மருத்துவர்கள் கூற்று.
சரி, அறுவை சிகிச்சை தவிர்க்க முடியாத கட்டத்தில் இருக்கிறோமா - கவலைப்படாதீர்கள் - சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும்.
முதலாவதாக மிகவும் அனுபவம் மிக்க மருத்துவரை அணுக வேண்டும். அவரது ஆலோசனைப்படி நடந்து பின்னர் நமக்கு வசதியான ஒரு நாளை ஆபரேஷன் செய்யத் தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். ஒரு நாள் முன்பாகவே அட்மிட் செய்வார்கள். கூட ஒரு அசிஸ்டென்ட் (நமது குடும்பத்தினர் ஒருவர்) இருப்பது நலம். ஒருக்கால் அது முடியாத பக்ஷத்தில் பிரபல மருத்துவமனைகள் கட்டணத்திற்கு உதவியாளர் ஒருவரை ஏற்பாடு செய்தும் தருகிறார்கள். சமீப காலத்தில் ரோபோவின் உதவியுடன் ஆபரேஷன் செய்வதும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. அதன் சாதக பாதகங்களை நன்கு தெரிந்து கொண்டு நமக்கு எது ஏற்புடையதாகப் படுகிறதோ, அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
மருத்துவமனையில் இரண்டோ மூன்று நாட்கள் இருந்த பிறகு வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். தற்காலத்தில் இந்த அறுவைச் சிகிச்சை மிகவும் அதிகமாகவும் எளிதாகும் செய்யப்படுவதால் பிரச்சனைகள் எதுவும் ஏற்படுவதில்லை. (ஒரு ஆர்த்தோ என்னிடம் சொன்னது - பெங்களூர் டிராபிக்கில் கார் ஓட்டுவதை விட இது சுலபம்!)
ஹாஸ்பிடலில் இருக்கும் வரை வலி நிவாரணி ஐவி மூலம் செலுத்தப்படுவதால் வலி அதிகம் தெரியாது. ஆனால் வீட்டிற்கு வந்த பிறகு வலி பொறுத்துக் கொள்வது சிறிது கடினம்தான். வலிக்கான மருந்துகள் சாப்பிட்டு கூட வலி தெரியும். ஆனால் சில மாதங்களில் வலியேயில்லாமல் நன்றாக சுலபமாக நடமாட முடியும் என்ற நேர்மறை எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
அடுத்தது மிக முக்கியமானது சரியான பிசியோதெரபிஸ்ட்டிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பிசியோதெரபிஸ்ட் சரியான நபராக இருந்தால் விரைவிலேயே நடக்க மடக்க ஏறி இறங்க என்று பயிற்சி அளித்து விடுவார். ஆகவே மிக கவனமாக நல்ல அனுபவ சாலியான பிசியோதெரபிஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர் சொல்லித் தரும் பயிற்சிகளைக் கண்டிப்பாக விடாமல் தினமும் செய்து பழக வேண்டும் - சற்றுச் சிரமமாக இருந்தாலும்.
முதல் இரண்டு மாத காலங்கள் ஏண்டா இதை செய்து கொண்டோம் என்ற எண்ணம் உருவாவதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் அதைக் கடந்து சென்றால் வாழ்க்கை இனிக்கும். உற்சாகமாக பயணங்கள் மேற்கொள்ள முடியும்.