ஜோக்கர்கள்!

நகைச்சுவை என்பது வெறும் சிரிப்பு மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் ஆரோக்கியத்தையும், மனவலிமையையும் காட்டும் கண்ணாடி என்பதை கீழுள்ள வரிகள் வழிமொழியச் செய்கின்றன.
ஜோக்கர்கள்
ஜோக்கர்கள்Image Credit- AI Image
Updated on

1929ஆம் வருஷம் அமரர் கல்கி அவர்கள் ஆனந்த விகடன் வருட அனுபந்த கட்டுரையில் இப்படியாக எழுதியிருந்தார்....

“பாரத நாடு சிறப்புடன் விளங்கிய காலத்தில் நமது முன்னோர் நகைச்சுவை உணர்வு அதிகமுள்ளவர்களாயிருந்தனர் என்பதற்குப் போதிய சான்றுகள் இருக்கின்றன… ராஜ சபைகளில் நகையூட்டுவதற்கென்றே விகடகவிகள், விதூஷகர்கள் முதலியோர் இருந்தார்கள்.. பிற்காலத்தில் தேசம் பராதீனமடைந்து தாழ்வுற்றபோது மக்களின் நகைச்சுவையும் வீழ்த்தப்பட்டதாகத் தோன்றுகிறது..(ஒருக்கால் நகைச்சுவையை இழந்ததே தேசத்தின் வீழ்ச்சிக்கும் காரணமாயிருக்கலாமோ..?”)

அந்தக் கட்டுரையில் மகாகவி பாரதியாரின் நகைச்சுவை உணர்வை குயில் பாட்டு வரிகளைச் சொல்லி “வானரர் போலாவாரோ..வாலுக்குப் போவதெங்கே” என்ற வரிகள் படித்து கொல்லெனச் சிரித்ததாக எழுதினார்.

எழுத்துலகில் மிகவும் கடினமானதொரு விஷயம் எதுவென்றால் முதலில் வருவது தொடர்கதை எழுதுவதுதான். அதுவும் சரித்திரக்கதை... மிகக்கடினம்.

அதையும் விடக் கடினமான ஒன்று இருக்கிறதா எனக் கேட்டால் அது ஜோக் எழுதுவது தான். அதிக பட்சம் இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களில் ஒரு செய்தி சொல்ல வேண்டும். முக்கியமாக அதைப் படித்தால் சிரிப்பு நிச்சயம் வர வேண்டும்.

இதையும் படியுங்கள்:
Interview: மெலட்டூர் பாகவத மேளா - கலைமாமணி எஸ்.குமார் அவர்களுடன் ஒரு பிரத்தியேக சந்திப்பு!
ஜோக்கர்கள்

இந்த விகடத்துணுக்குகள் தமிழில் பத்திரிக்கைகள் வந்த காலத்தில் இருந்தே பிரசுரமாகின. இந்த ஜோக்காளர்கள் அனேகர்… பிரபலமானவர்கள் லிஸ்ட்டே மிகப் பெரிது என்றால் மொத்த லிஸ்ட் மணல் எண்ணிக்கை நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட பெரிது.

உ.ராஜாஜி, வெ.சீதாராமன், சுதர்ஸன், அம்பை தேவா, கீழை அ.கதிர்வேல், படுதலம் சுகுமாரன், கரடிகுளம் பாரதி, அஜீத், பர்வீன் யூனுஸ்… சாரதிடேச்சு… தீபிகாசாரதி, நல்லாலம் காசிதாசன்.. லிஸ்ட் மிகப் பெரியது.

சீர்காழி.வி.ரேவதி இதில் நாற்பதாயிரத்துக்கு மேல் எழுதி லிம்கா கின்னஸில் இடம் பிடித்தவர் (அமரர் கல்கி அவர்களின் உறவினரும் கூட)

இந்த ஜோக்காளர்கள் ஒரு காலத்தில் தபால் கார்டுகள், இன்லண்ட் லெட்டர்களில் எழுதினார்கள். இப்போது எல்லாமே ஆன்லைன் தான்.

பத்திரிக்கை நடத்துபவர்களுக்கு பெரிய சவாலே ஒரு நகைச்சுவையை பிரசுரிக்கு முன் அது ஏற்கனவே வெளியான ஒன்றா என ஆராய்வதே.

உண்மையில் இந்த டிபார்ட்மெண்ட் பார்க்கும் நபரை பாராட்டியே ஆக வேண்டும்.. அவருடைய ஞாபக சக்தி மற்றும் ஆய்வு திறமைக்கு.

பத்திரிக்கை வாசிப்பவர்கள் எதைப் படித்தாலும் படிக்காவிட்டாலும் இந்த மிகச் சிறிய ஜோக்கை தவறாது படிப்பார்கள்.. உண்மையில் சமையலுக்கு உப்பு, காபிக்கு சர்க்கரை போலவே ஜோக்குகளும்.

சிம்புதேவன், பாஸ்கி போன்றவர்கள் ஒரு காலத்தில் ஜோக்காளர்கள்.

ஒரு ஜோக் பெரிய விபரீதத்தில் முடிந்த கதையும் உண்டு. மந்திரிகளைப் பற்றி விமரிசித்து ஒரு ஜோக் வர, அதைப் படித்த முதல்வர் எம் ஜி ஆர் வெகுண்டார்.. எழுதிய ஆளைப் பிடித்து உள்ளே போடச் சொன்னார் காவல் துறையிடம். அவர்கள் பிரசுரித்த பத்திரிக்கை ஆசிரியரிடம் எழுத்தாளர் விலாசம் கேட்க… “எழுதியவர் சாதாரணமான ஒரு ஆள்.. அவர் வேண்டாம்.. பிரசுரித்த என் மீது வேண்டுமானால் நடவடிக்கை எடுங்கள்”, என்றார். கைது செய்து சிறையிலும் அடைத்தார்கள்.. ஒரு வாரம் கழித்து வெளியே வந்தார் ஆசிரியர்… ஜாமீனில்.

ஜோக்கர்கள் கோமாளி, பஃபூன்கள், விகடகவி, க்ளௌவுன், விதூஷகன் என்ற பெயர்களைத் தாங்கியவர்கள். அரச சபைகளில் அவர்களுக்கு என்று ஒரு பதவி உண்டு அது Jesters. விகடன் அல்லது விகடகவி.

இதில் பெண்களும் இருந்தார்கள் அவர்களுக்கு Jestress எனப் பெயர்.

இந்த விகடகவிகள் என்ன கூத்தடித்தாலும் தண்டனை கிடையாது. அவையின் கலகலப்புக்கு காரண கர்த்தாக்கள். மன்னரின் மன அழுத்தம் நீங்க உதவுவதால் அவர்கள் மிக முக்கியமானவர்களாய்க் கருதப்பட்டார்கள்.

யாரை வேண்டுமானாலும் மிமிக்ரி செய்வார்கள். ஆடுவார்கள், பாடுவார்கள் கதை சொல்வார்கள்.

ஜோக்குகளுக்கு படம் வரைவதே ஒரு தனி கலை.. அதில் விற்பன்னர்கள் ஆர் கே லக்ஷ்மண், கோபுலு, ராஜு ஆகியோர்.

எல்லோராலும் ஜோக்குகளுக்குப் படம் வரைய முடியாது. ஒரு ஜோக் மிகச் சிறிய வார்த்தை தொகுப்பு. அதில் கணவன் மனைவி காமெடி என்றால் முக பாவங்கள் சிரிப்புக்கு மெருகு கூட்டும் விதமாய் இருக்கணும். மனைவியின் அதிகாரத் தொனி கணவனின் அப்பாவியான பாவம் முக்கியம்.

கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கு அது அத்துபடியான விஷயம்.

சிரஞ்சீவியான ஜோக் சப்ஜெக்ட்டுகள், பிச்சைக்காரன் பிச்சை இடும் பெண், வெள்ளைக் கொடி காட்டும் அரசர், பதுங்கு குழி, ஜவுளிக்கடையில் புடவை வாங்கும் அம்மணி… டாக்டர் பேஷண்ட், ஞாபகமறதி.

ஹோட்டலில் சாப்பிட்டு பணம் தராவிட்டால் மாவாட்டுவது என அந்தக் காலத்தில் ஒன்று உண்டு. அதுவும் ஜோக் சப்ஜெக்டில் ஒன்று.

சுஜாதா அவர்கள் ஆசிரியராக ஆக்டிங் செய்த காலத்தில் அவருக்குப் பிடித்த ஜோக் என இதை சொன்னார். அதற்கு ஒரு முன்னுரை சொல்லி .. “பொதுவாக உடல் குறைபாடு வைத்து நகைச்சுவை உண்டாக்குவது தவறு..அதில் எனக்கு உடன்பாடு இல்லை.. இருப்பினும் இது எனக்குப் பிடித்தது.

கோர்ட்டில் வழக்கு விசாரணை.. சாட்சிகள் மூவர் கூண்டில் வரிசையாக நிற்க ஜட்ஜ் கேள்விகளைக் கேட்பார்.

அவருக்கு சிறிது மாறு கண்..

ஜட்ஜ் முதலாம் ஆளிடம் “உன் பெயர் என்ன”

அதற்கு இரண்டாம் ஆள் பதில் சொன்னான் “ராமசாமி ங்க”

ஜட்ஜ் “உன்னை யாருய்யா பெயர் கேட்டா ? ”

மூன்றாம் ஆள் சொன்னான் “ஐயா..நான் வாயையே திறக்கலீங்களே”

இதையும் படியுங்கள்:
எழுத்துலக முன்னோடி அமரர் கல்கி – என் நினைவில் நிற்பவை!
ஜோக்கர்கள்

அமரர் கல்கி அவர்கள் தொடர்கதைகளில் நகைச்சுவையைத் தூவியே எழுதுவார்.. பொன்னியின் செல்வன் நாயகன் வந்தியத்தேவன் பேசும் போதெல்லாம் ஒரு கிண்டல், நையாண்டி, குதூகலமான ஒரு செய்தி இருக்கவே இருக்கும். ஆழ்வார்க்கடியானும் அவனும் பேசிக்கொள்ளும் அத்தியாயங்களில் சொல்லவே வேண்டாம்.

திரைப்படங்களில் நகைச்சுவை பகுதி எழுதவே தனி எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.. நகைச்சுவை பகுதி ஏ வீரப்பன். ..முக்கியமானவர். இவர் ஒரு குறு நடிகர்.. காமெடி ட்ராக் எழுதுவதில் வல்லவர்.

படம் எடுத்து முடிந்து வினியோகஸ்தர்களிடம் போட்டுக்காட்டுவார்கள் ப்ரொட்யூசர்கள். அனுபவமிக்க டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சொல்வார்கள்... படத்தில் காமெடி மிஸ்ஸிங்..ஃபெயிலியர் ஆகிடும்.. எனச் சொல்வார்கள். பின்னர் காமெடி படக்கதைக்கு ஒட்டாமலே சேர்க்கப்படும்.

இது போல் 1940களில் சினிமாக்களை வெளியிடுமுன் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களை அணுகி தனி காமெடி பகுதி உருவாக்கி பிறகு சேர்த்து வெளியிட்டு தப்பிப் பிழைத்த தயாரிப்பாளர்களும் அக்காலத்தில் நிறைய உண்டு.

சிரிப்பு நடிகர்கள் பெரிய பட்டாளம்.. ஆனால் அந்த அளவு நடிகைகள் மிகக் குறைவே.. குறைவாக இருந்தாலும் அவர்கள் கலக்கிவிட்டார்கள் சினிமா ஃபீல்டை..

முக்கியமானவர்கள் டி. ஏ. மதுரம், டி. பி. முத்துலட்சுமி, அங்கமுத்து, காந்திமதி, மனோரமா, சச்சு, மாதவி, கோவை சரளா, ரமாபிரபா, தேவதர்ஷினி.

சர்க்கஸ்களில் பபூன்கள் எனப்படும் ஜோக்கர்கள் காட்சி மாறு முன் காமெடிகள் செய்து மகிழ்விப்பார்கள். அந்த ஜோக்கர்கள் சாமானியப்பட்டவர்கள் அல்லர்.. சர்க்கஸில் எல்லா துறையிலும் வல்லவர்களாக இருப்பார்கள்.

படிக்கும் போது வகுப்பில் கடைசி பெஞ்ச்சுக்காரர்களில் ஓரிரண்டு காமெடியன்கள் இருப்பதால் வகுப்பு கலகலப்பாகப் போகும். பிற்காலத்தில் வளர்ந்து நிஜ வாழ்க்கை டென்ஷன் நிறைந்து வாழும் போது அந்த பசங்களின் காமெடிகள் மட்டும் எப்போதும் ஒரு தென்றலை வீசிச் செல்லும்.

ஒவ்வொரு ஆபீஸிலும் ஒரு ஜோக்கர் ஆசாமி இருப்பார். அரசியல் கட்சிகளிலும் ஒரு ஜோக்கர் எம். எல். ஏ. அல்லது அமைச்சர் இருப்பார்.. அவரால் சட்டசபையில் சிரிப்பலை பரவி டென்ஷன் குறையும் சபாநாயகருக்கு.

இதையும் படியுங்கள்:
தேச நலன் ஒன்றையே கொள்கையாகக் கொண்ட சமூகப் போராளி அமரர் கல்கி!
ஜோக்கர்கள்

இப்படி சிலர் இருப்பதால் தான் நிஜ வாழ்க்கையில் மன அழுத்தம், சோர்வு இல்லாமல் நம்மால் காலம் தள்ள முடிகிறது. எல்லோருமே வில்லன் கூடாரமாக இருந்தா எப்படி?

logo
Kalki Online
kalkionline.com