ஜூலை 18: 'தமிழ்நாடு நாள் விழா'! 'சென்னை மாநிலம்', 'தமிழ்நாடு' ஆன கதை!

Tamil Nadu Day
Tamil Nadu Day
Published on

இந்திய விடுதலைக்குப் பிறகு மொழி வழியில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், அதை இந்திய ஒன்றிய அரசு ஏற்க மறுத்து வந்தது. ஆனால், இக்கோரிக்கை முதலில் ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது. கலவரங்களும் ஏற்பட்டன. இதனால் இந்திய ஒன்றிய அரசு வேறு வழியின்றி, 1956 ஆம் ஆண்டு, நவம்பர் 1 ஆம் நாளில் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது. அதன்படி, சென்னை மாநிலத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் நிறுவப்பட்டன. சென்னை மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளும், திருவிதாங்கூரின் தமிழ்ப்பகுதிகளும் இணைக்கப்பட்டு சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டது. 

மொழிவழியாக பிரிக்கப்பட்ட மாநிலங்களில் மாநிலம் உருவான நாளை அந்தந்த மாநிலங்கள் அரசு விழாவாகவும், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் அரசு விடுமுறை நாளாகவும் அறிவித்துக் கொண்டாடி வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அப்படியொரு விழா, அரசு சார்பில் கொண்டாடப்படாமலும், மாநிலத்தின் பழைய பெயரான சென்னை மாநிலம் என்ற பெயரும் தொடர்ந்து வந்தது. சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப்பெயரிடக் கோரி தனி நபராக சங்கரலிங்கனார் எனும் முதியவர் 76 நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு இறந்தார். 

சென்னை மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்து முதல்வராக அறிஞர் அண்ணா பொறுப்பேற்ற பிறகு, 1968 ஆம் ஆண்டு, ஜூலை 18 ஆம் நாளில், சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு எனப் பெயர் மாற்ற சென்னை மாநிலச் சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.

Tamil Nadu Day
Tamil Nadu Day

இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14, தைப் பொங்கல் நாள் முதல், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அமைந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. பல தமிழ் அமைப்புகள் நவம்பர் முதல் நாளன்று விழாவாகக் கொண்டாடி வந்தன. குறிப்பாக நா.அருணாச்சலம் அவர்களால் உருவாக்கப்பட்ட சான்றோர் பேரவை அமைப்பால், ‘தமிழ்நாடு மாநிலம் அமைந்த பெருவிழா’ என்ற பெயராலும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியால், ‘தமிழகப் பெருவிழா’ என்ற பெயராலும் இந்த விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாக்களின் போது, இந்த விழாவைத் தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

இதையும் படியுங்கள்:
ஜூலை 18 - 'பன்னாட்டு நெல்சன் மண்டேலா நாள்' - மன்னிப்பு கேட்க மறுத்த மாவீரர் மண்டேலா!
Tamil Nadu Day

இந்த நெடுநாள் கோரிக்கையானது, தமிழ்நாடு அரசால் ஏற்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் 25 ஆம் நாளில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ரூபாய் 10 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2019 ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளில், “தமிழ்நாடு நாள்” (Tamilnadu Day), அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இந்தத் தமிழ்நாட்டு நாளுக்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் 2021 இல் புதியதாக பொறுபேற்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18 அன்று ‘தமிழ்நாடு நாள் விழா’ கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு, தற்போது ஜூலை 18 ஆம் நாளில் ‘தமிழ்நாடு நாள் விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை ஏற்காத சில அமைப்புகள், நவம்பர் 1 ஆம் நாளிலேயே, ‘தமிழ்நாடு நாள் விழா’வைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன என்பது வேறு விஷயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com