Mandela Day
Mandela Day

ஜூலை 18 - 'பன்னாட்டு நெல்சன் மண்டேலா நாள்' - மன்னிப்பு கேட்க மறுத்த மாவீரர் மண்டேலா!

Published on

மறைந்த தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாள், ‘பன்னாட்டு நெல்சன் மண்டேலா நாள்’ என்று கொண்டாடப்பட்டு வருகிறது. 

மோதல்களைத் தீர்ப்பதற்கும், இன உறவுகள், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் போராடி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நெல்சன் மண்டேலா பிறந்த நாளை, ‘பன்னாட்டு நெல்சன் மண்டேலா நாள்’ எனக் கொண்டாட, 192 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 2009 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாளன்று நிறைவேற்றப் பட்டது.  அந்தத் தீர்மானத்தில் இனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும், ஆண்-பெண் சமம் என்ற நிலை ஏற்படவும் மண்டேலா பாடுபட்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

யார் இந்த நெல்சன் மண்டேலா? என்பதோடு, அவரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகவும் தெரிந்து கொள்வோம், வாருங்கள்…!

தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில், 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் நாளில் பிறந்தவர் நெல்சன் மண்டேலா. பழங்குடி இன மக்கள் தலைவராக இருந்த இவரின் தந்தை சோசா என்பவருக்கான நான்கு மனைவிகளில், மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்த மண்டேலாவின் முழுப்பெயர் 'நெல்சன் ரோபிசலா மண்டேலா' (Nelson Rolihlahla Mandela). இருப்பினும், நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைக்கப்படுகிறார். 

1937ஆம் ஆண்டு அந்தக் குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவும் இருந்தார். இவரின் பெயரின் முன்னால் உள்ள 'நெல்சன்' இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரால் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாப்பிரிக்கப் பல்கலைக் கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். தங்கச் சுரங்கப் பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.

1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, "கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பயணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக, கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சுதேச மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என அறை கூவல் விடுத்து, கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றியும் கண்டார். 

1941 ஆம் ஆண்டு ஜோகானஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டம், சட்டக்கல்வி படித்தார். 1943 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1948 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, கறுப்பின மக்களுக்கெதிராக முறையற்ற நடவடிக்கைகளை எடுத்தது. மண்டேலாவும் அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காகச் சட்ட ஆலோசனைகளை வழங்கி வந்தனர்.

அப்போது, 'நோமதாம் சங்கர்' என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்த போது, 1958 ஆம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

கறுப்பர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக உருவான 'ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ்' என்ற கட்சியின் முதன்மைப் பொறுப்பான தலைவர் பதவிக்கு வந்த நெல்சன் மண்டேலா, இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப் போராட்டங்களை முன்னிருந்து நடத்தினார். இவர் தலைமையில், வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 ஆம் ஆண்டில், அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தார் என கைது செய்தது. ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு, அந்தக் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மேலும் பல போராட்டங்களை முன்னெடுத்துச் செய்து வந்தார். 

அதனால் எரிச்சலுற்ற வெள்ளைக்கார அரசு 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் நாளில்,  இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைதாகினார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவைப் போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் எவரும் கிடையாது. பல ஆண்டுகள் அவரைத் தனிமைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்த தென்னாப்பிரிக்க அரசாங்கம், அவரது மனைவியைச் சந்திப்பதற்குக் கூட அனுமதி மறுத்தது. 1988 ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்குச் சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி, மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன. 'மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்' என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

இதையும் படியுங்கள்:
ஜூலை 18: 'தமிழ்நாடு நாள் விழா'! 'சென்னை மாநிலம்', 'தமிழ்நாடு' ஆன கதை!
Mandela Day

தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன் வந்தார். அதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. பிரடெரிக் வில்லியம் டி கிளர்க், ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா பெப்ரவரி 11, 1990 அன்று விடுதலைச் செய்யப்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மண்டேலா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். விடுதலை பெற்ற போது, அவருக்கு வயது 71. மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலகத் தலைவர்கள் பலரும் வரவேற்றனர். அதன் பிறகு, அரசியல் களத்தில் இறங்கி, 1994 ஆம் ஆண்டு மே 10 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவரானார். தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் எனும் பெருமையையும் பெற்றார்.

உலக நாடுகள் பலவும் இவரது போராட்டத்தில் அடைந்த வெற்றியைப் பாராட்டிச் சிறப்பித்தன. இந்திய அரசு இவருக்கு, நேரு சமாதான விருது மற்றும் பாரத ரத்னா விருது என்று உயர்ந்த விருதுகளை வழங்கிச் சிறப்பித்தது. 1993 ஆம் ஆண்டில் இவருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.  

2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் நாளில், அவரது 95வது வயதில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார்.

இனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும் இருபத்தேழு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை வைக்கப்பட்ட இவரின் சேவையைப் போற்றும் வகையில் அமைந்த ‘பன்னாட்டு நெல்சன் மண்டேலா நாள்’ அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய நன்னாள்தான் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.

logo
Kalki Online
kalkionline.com