June 20: World Refugee Day - உலக அகதி நாள் - அகதிகள் உள்ளடக்கப்பட்ட ஓர் உலகம் காண்போம்!

World Refugee Day
World Refugee Day
Published on

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 2000 ஆம் ஆண்டுச் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் விதமாக, ஜூன் 20 ஆம் நாள் ‘உலக அகதிகள் நாள்’ (World Refugee Day) என்று அறிவிக்கப்பட்டது. ஆப்பிரிக்க அகதிகள் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஜூன் 20 ஆம் நாளையே ஐக்கிய நாடுகள் அவையும் உலக அகதிகள் நாளாக அறிவித்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வீடுகளை இழந்த மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவுவதற்காக, 1950 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் முகமையாக (UN Refugee Agency), ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (United Nations High Commissioner for Refugees - UNHCR) எனும் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால்,நிறுவப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) தற்போது 135 நாடுகளில் செயல்படுகிறது. மோதல்கள் மற்றும் துன்புறுத்தல் காரணமாகத் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியக் கட்டாயத்தில் உள்ள மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மற்றும் அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய அமைப்பாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. வலுக்கட்டாயமாக இடம் பெயர்ந்த சமூகங்கள் மற்றும் நாடற்ற மக்களைப் பாதுகாப்பதற்கான பன்னாட்டு நடவடிக்கையை இந்த அமைப்பு வழி நடத்துகிறது.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் வெளியிட்டிருக்கும் 2023 ஆம் ஆண்டின் இறுதி வரையிலானப் புள்ளிவிவரங்கள்:

  • துன்புறுத்தல், மோதல், வன்முறை, மனித உரிமை மீறல்கள் அல்லது பொது ஒழுங்கைக் கடுமையாகச் சீர்குலைக்கும் நிகழ்வுகளின் விளைவாக, 2023 ஆம் ஆண்டின் இறுதி வரை, உலகளவில் 117.3 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

  • இவர்களில் உள்நாட்டிலேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு 68.3 மில்லியன் பேர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

  • 37.6 மில்லியன் பேர்கள் அகதிகளாக உள்ளனர்.

  • 6.9 மில்லியன் பேர் புகலிடக் கோரிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

  • பன்னாட்டுப் பாதுகாப்பு தேவைப்படும் நபர்களாக 5.8 மில்லியன் பேர்கள் இருக்கின்றனர்

  • ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் (UNHCR) கீழிருக்கும் நாடுகளிலுள்ள அனைத்து அகதிகளிலும் 73% அகதிகள் பன்னாட்டுப் பாதுகாப்பு தேவைப்படுபவர்களாக இருக்கின்றனர்.

  • அவர்களில், ஆப்கானிஸ்தான் 6.4 மில்லியன், சிரிய அரபுக் குடியரசு 6.4 மில்லியன், வெனிசுலா 6.1 மில்லியன், உக்ரைன் 6.0 மில்லியன், தெற்குச் சூடான் 2.3 மில்லியன் என்று ஐந்து நாடுகளில் இருந்து வந்தவர்கள் அதிக அளவில் இருக்கின்றனர்.

  • உலக அகதிகளில் 5 ல் 2 பேருக்கு பன்னாட்டுப் பாதுகாப்பு தேவைப்படும் நிலையில், ஈரான் இஸ்லாமியக் குடியரசு 3.8 மில்லியன், துருக்கி 3.3 மில்லியன், கொலம்பியா 2.9 மில்லியன், ஜெர்மனி 2.6 மில்லியன், பாகிஸ்தான் 2.0 மில்லியன் என்று ஐந்து நாடுகள், அவர்களை வரவேற்று பாதுகாப்பை வழங்கியிருக்கின்றன.

  • 2023 ஆம் ஆண்டின் இறுதி வரையில், வலுக்கட்டாயமாக இடம் பெயர்ந்த 117.3 மில்லியன் மக்களில், 47 மில்லியன் (40 சதவீதம்) பேர் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக இருக்கின்றனர்.

  • 2018 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு இடையில், ஆண்டுக்குச் சராசரியாக 3,39,000 குழந்தைகள் என்று மொத்தம் 2 மில்லியன் குழந்தைகள் அகதிகளாகப் பிறந்துள்ளனர்.

  • 2023 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.1 மில்லியன் அகதிகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பினர். அதே நேரத்தில், 1,58,700 பேர் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் உதவியுடனும், பிற அமைப்புகள் உதவியுடனும் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

  • குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உலகின் முக்கால்வாசி அகதிகள் மற்றும் பன்னாட்டுப் பாதுகாப்பு தேவைப்படும் மக்கள் உள்ளனர்.

  • குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் மொத்தத்தில் 21 சதவீதத்திற்குத் தஞ்சம் அளித்திருக்கின்றன.

  • 95 நாடுகளில் வசிக்கும் சுமார் 4.4 மில்லியன் நாடற்ற மக்கள் பற்றிய தரவு 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தெரிவிக்கப்பட்டது. உண்மையான உலகளாவிய எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

  • 69 சதவீத அகதிகள் மற்றும் பன்னாட்டுப் பாதுகாப்பு தேவைப்படும் பிற மக்கள் அவர்கள் பிறந்த நாடுகளின் அண்டை நாடுகளுக்குச் சென்று வசித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போர்கள், அரசியல், சமூகச் சூழல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள், உலக அகதிகள் நாளில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப் பெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்:
கவிதை - மனிதம் புத்தகம் அவ்வளவுதான்!
World Refugee Day

உலக அகதிகள் நாள் கொண்டாடப்படுவதற்கான சில முக்கியமானக் காரணங்களை அறிந்து கொள்ளலாம்.

விழிப்புணர்வை ஏற்படுத்துதல்:

அகதிகளின் அவலநிலை, பாதுகாப்பு மற்றும் உதவிக்கான அவசரத் தேவை குறித்து உலகளாவிய கவனத்தைக் கொண்டு வருகிறது.

ஒற்றுமையை ஊக்குவித்தல்:

அகதிகளுடன் ஒற்றுமை மற்றும் பச்சாதாப உணர்வை இந்த நாள் வளர்க்கிறது, அவர்களை ஆதரிக்கவும், வரவேற்கவும் சமூகங்களை ஊக்குவிக்கிறது.

உரிமைகளுக்காக வாதிடுதல்:

இது அகதிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக வாதிடுகிறது, நியாயமான சிகிச்சை மற்றும் அத்தியாவசியச் சேவைகளுக்கான அணுகலை வலியுறுத்துகிறது.

பங்களிப்புகளை முன்னிலைப்படுத்துதல்:

அகதிகள் தங்களைக் காக்கும் நாடுகளுக்கும், சமூகங்களுக்கும் அளித்த நேர்மறையான பங்களிப்பை அங்கீகரிக்கிறது.

ஊக்கமளிக்கும் நடவடிக்கை:

அகதிகளுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கவும், நிலையான தீர்வுகளை நோக்கிச் செயல்படவும் அரசாங்கங்கள், அமைப்புகள் மற்றும் தனி நபர்களை ஊக்குவிக்கிறது.

விழிப்புணர்வை ஊக்குவித்தல், உரிமைகளுக்காக வாதிடுதல் மற்றும் உள்ளடக்கிய கொள்கைகளை ஊக்குவிப்பதன் மூலம், உலக அகதிகள் நாளானது அகதிகளுக்கு மிகவும் இரக்கமுள்ள மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க உதவுகிறது. மேலும் அவர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதையும் உறுதி செய்கிறது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) ஒவ்வோர் ஆண்டும் உலக அகதிகள் நாள் நிகழ்வுகளுக்கான கருப்பொருளையும் அறிவித்து வருகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான உலக அகதிகள் நாளின் கருப்பொருளாக "வீட்டிற்கு வெளியில் உள்ள நம்பிக்கை: அகதிகள் எப்போதும் உள்ளடக்கப்பட்ட ஓர் உலகம்" (Hope Away from Home: A World Where Refugees Are Always Included” எனும் கருப்பொருள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கருத்துருவானது, அகதிகளைச் சேர்ப்பது மற்றும் ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது, அவர்கள் வரவேற்கப்படுவதையும், சமூகங்களில் ஒருங்கிணைக்கப்படுவதையும் உறுதி செய்து, நம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அனுமதிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com