
தண்ணீர் பிரச்னை உலகளவில் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில், உலகின் தண்ணீர் இல்லாத முதல் நகரமாக ஆப்கானிஸ்தானின் காபூல் மாறும் என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் 60 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். அதிகப்படியான நிலத்தடி நீர் பயன்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2030 ஆம் ஆண்டில், உலகில் தண்ணீர் இல்லாத முதல் நகரமாக காபூல் மாற உள்ளதாக மெர்சி கார்ப்ஸ் (Mercy Corps) என்ற நிறுவனத்தின் அறிக்கை எச்சரித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் காபூலின் நிலத்தடி நீர் மட்டம் 98 அடி வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆண்டுக்கு 44 மில்லியன் கன மீட்டர் (1,553 கன அடி) அளவுக்கு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கா படையெடுப்பின் போது, கிராமங்களில் இருந்த மக்கள் வசதியான நகரங்களுக்கு நகர்ந்தனர். இதன் காரணமாக காபூல் நகரங்களில் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்தது. இது காபூல் நகரங்களின் தண்ணீர்த் தேவையை அதிகரித்தது. மேலும், காபூலின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் நிலத்தடி ஆழ்துளை கிணறுகளில் கிட்டத்தட்ட பாதி ஏற்கனவே வறண்டு விட்டதாக யுனிசெஃப் அறிக்கை ஒன்று கூறுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் அங்கு மழைப்பொழிவும் கடுமையாகக் குறைந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தண்ணீர் இல்லாத நகராக மாறி, அதிக அளவிலான மக்கள் காபூலில் இருந்து இடம்பெயரும் நிலை ஏற்படும் என Mercy Corps எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள ஒரு தெருவில் சக்கர வண்டியில் தண்ணீர் கேன்களை சுமந்து செல்லும் ஆப்கானிய பெண்களில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தண்ணீர்ப் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் முதல் நவீன நகரமாக காபூல் மாறும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் ஏழு மில்லியன் மக்களைக் கொண்டுள்ள காபூல் மக்கள் இதை உலகம் அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டும் என விரும்புகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளில் விரைவான நகரமயமாக்கல் மற்றும் காலநிலை சீர்குலைவு காரணமாக காபூலின் நீர்நிலைகளுக்குள் நீர் மட்டம் அதிக அளவு குறைந்துள்ளதாக அரசு சாரா நிறுவனம் ஒன்றின் அறிக்கை தெரிவிக்கிறது .
இதற்கிடையில், காபூல் குடியிருப்பாளர்களின் குடிநீரின் முதன்மை ஆதாரமான நகரத்தின் கிட்டத்தட்ட பாதி ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. இந்தப் போக்குகள் தொடர்ந்தால், காபூலின் அனைத்து நீர்நிலைகளும் 2030 ஆம் ஆண்டிலேயே வறண்டுவிடும், இதனால் நகரத்தின் ஏழு மில்லியன் மக்களின் அன்றாட வாழ்க்கையே ஒரு பெரிய சவாலாக மாறிவிடலாம்.
"இந்த நெருக்கடியை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்திற்கு சர்வதேச கவனத்தை ஈர்க்க ஒரு உறுதியான முயற்சி இருக்க வேண்டும்," என்று மெர்சி கார்ப்ஸ் ஆப்கானிஸ்தான் நாட்டின் இயக்குனர் டேன் கரி கூறினார். "தண்ணீர் இல்லை என்றால் மக்கள் தங்கள் சமூகங்களை விட்டு வெளியேறுவார்கள், எனவே சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானின் நீர் தேவைகளை நிவர்த்தி செய்யாமல் இருப்பது ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அதிக இடம்பெயர்வு மற்றும் அதிக கஷ்டங்களை மட்டுமே ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
இந்த அறிக்கை நீர் மாசுபாட்டை மற்றொரு பரவலான சவாலாக எடுத்துக்காட்டுகிறது. காபூலின் நிலத்தடி நீரில் 80% வரை பாதுகாப்பற்றதாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் அதிக அளவு கழிவுநீர், உப்புத்தன்மை மற்றும் ஆர்சனிக் ஆகியவை உள்ளன. காபூலில் உள்ள மக்களுக்கு தண்ணீர் கிடைப்பது அன்றாடப் போராட்டமாக மாறிவிட்டது. சில குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் 30% வரை தண்ணீருக்காகச் செலவிடுகின்றன.
காபூலில் மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் இது ஓர் எச்சரிக்கை மணியாகும். இனியாவது நீர் வள ஆதாரங்களை பாதுகாக்கும் முனைப்பில் நாம் ஈடுபடுவோம். நலமுடன் வாழ்வோம்.