சிறுகதை: அன்பே கடவுள்!

ஒரு பெண் எப்படி ஒரு ஏழை பெண்மணிக்கும் அவரது மகனுக்கும் உதவுவது மூலம் தன் கணவனுக்கும் குழந்தைக்கும் இறை நம்பிக்கையை வர வைக்கிறார் என்பது கதை...
சிறுகதை
சிறுகதை Gemini image
விக்னேஷ் நீ.ரா.கு

விக்னேஷ் நீ.ரா.கு. - சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒப்பந்த பணிபுரியும் விக்னேஷ், சிறுவயதிலிருந்தே பத்திரிகைகள், கதைப் புத்தகங்கள் மற்றும் நாவல்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டியவர். இந்த ஆர்வம், சொந்தக் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுத அவரைத் தூண்டியது. 'அன்பே கடவுள்' என்ற சிறுகதை மூலம் விக்னேஷ் அவர்களை கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் கல்கி குழுமம் பெருமை கொள்கிறது.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

ஒரு நெரிசல் மிகுந்த சாலை; முழுவதும் சூரியன் உதிக்காத காலை வேளை. அங்கே சிவப்பு நிறச் சிக்னல் விழுந்தபோது, கதிரவன் வேகமாகச் சென்று கொண்டிருந்த தன்னுடைய காரை “இப்ச்!” எனச் சட்டென நிறுத்தினான்.

இதைப் பார்த்த துர்கா, “நம்ம கம்பெனி பக்கத்துலதானே இருக்கு, மெதுவா போங்க,” எனக் கூறுகிறாள்.

அதற்குக் கதிரவன், “நம்ம ஆபீஸ் பக்கத்துலதான் இருக்கு; ஆனா, பையனைச் சீக்கிரமா ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போகணும், அதை நீ மறந்துட்டியா?” என ஆக்ரோஷமாகக் கேட்கிறான்.

கதிரவன் அந்த ஊரில் முதன்மையான (நம்பர் ஒன்) கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் நிறுவனர்; மிகவும் திறமைசாலி. எந்நேரமும் தொழில் சிந்தனையே அவனுக்கு இருந்துகொண்டே இருக்கும். அதனால், குறுகிய காலத்தில் பல தொழில்களைச் செய்யும் தொழிலதிபராக உயர்ந்தவன்.

தன்னுடைய மனைவிக்காக, 'கதிரவன் கார்மெண்ட்ஸ்' என முற்றிலும் பெண்களைக் கொண்டு இயங்கும் துணி நெய்யும் நிறுவனத்தை ஆரம்பித்துக் கொடுத்தான். தற்போது அவனுடைய மனைவி துர்கா, அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறாள்; மிகவும் அன்பானவள்.

தொழிலில் ஏற்பட்ட சிறிய கவனக்குறையால், தற்போது அவனுடைய 'கதிரவன் கன்ஸ்ட்ரக்ஷன்' நிறுவனம் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. இதனால் சில நாட்களாகக் கதிரவன் அதீத மன அமைதி இல்லாமல் இருக்கிறான் என்பது மனைவி துர்காவிற்குத் தெரியும். இருந்தாலும், கணவனின் இந்த நிலையை மாற்றத் தினமும் முயற்சி செய்கிறாள். அவர்களுடைய பத்து வயது மகன் உதய், தற்போது அந்த நகரத்தின் மிகச்சிறந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான். அவன் பள்ளிக்குச் சென்றதும் அவனை விட்டுவிட்டு, அதற்குப் பிறகுதான் இவர்கள் இருவரும் தங்களுடைய நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டும்.

அப்போது காருக்கு அருகே வந்த பெண்மணி ஒருத்தி, தன்னுடைய கைகளில் நிறைய பாசிகள் மற்றும் மணிகளை வைத்து விற்றுக்கொண்டிருந்தாள். அவள் அருகே ஒரு சிறுவன், அதாவது அவளுடைய மகன் நின்று கொண்டிருந்தான். போக்குவரத்து மிகுந்த இச்சாலைகளில் நின்று கொண்டிருக்கும் வாகனங்களில் வருவோரிடம் பாசிகளை விற்று அவள் வாழ்ந்து வருகிறாள். அவள் கதிரவனிடம் பாசி மாலைகளைக் காட்டி, “ஐயா சாமி, ஏதாவது மாலை வாங்கிக்கோங்க,” எனக் கூறுகிறாள்.

அதற்குக் கதிரவன், “அதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை,” என வெடுக்கென்று கூறுகிறான். அப்போது அந்தப் பெண்மணியின் மகன், “அம்மா, எனக்குப் பசிக்குது, ஏதாவது சாப்பிட வாங்கிக்கொடு,” எனக் கேட்கிறான். அந்தப் பெண்மணியோ, “இருடா, இன்னும் வியாபாரம் ஆகவில்லை; கையில் காசு இல்லை,” எனப் புலம்புகிறாள். இதைக் கவனித்த துர்கா அந்தப் பெண்மணியிடம், “இந்த பாசி மாலை மிகவும் அழகாக உள்ளது, என்ன விலை?” எனக் கேட்கிறாள். அதற்கு அந்தப் பெண்மணி, “ஒரு மாலை ஐம்பது ரூபாய்,” எனக் கூறுகிறாள். சட்டெனத் தன் பையில் இருந்த இருநூறு ரூபாயைக் கொடுத்து, நான்கு பாசி மாலைகளை துர்கா வாங்கிக் கொள்கிறாள். உடனே அந்தப் பெண்மணி, “ரொம்ப நன்றிம்மா,” எனக் கூறித் தன்னுடைய மகனை அங்கிருந்து வேகமாக அருகில் உள்ள உணவகத்திற்கு அழைத்துச் செல்கிறாள்.

“இது எதற்கு?” எனக் கதிரவன் கேட்க, அதற்கு துர்கா, “கோயில்ல சாமிக்கு ஒரு வேண்டுதலுக்காக நேர்ந்துகொண்டேன்,” எனச் சொல்கிறாள். இதைக் கேட்ட கதிரவன், “உனக்கு அதீத கடவுள் பக்தி இருந்தும், நம்ம கம்பெனி இப்போ இரண்டாம் இடத்துக்கு வந்துடுச்சு பாரு!” என விரக்தியாகக் கூறுகிறான்.

இதைக் கேட்ட துர்கா, “பக்தி எனக்கு மட்டும் இருந்தால் பத்தாது, உங்களுக்கும் வேண்டும்,” எனக் கூறுகிறாள். “எனக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லை,” எனக் கதிரவன் திட்டவட்டமாகக் கூறுகிறான்.

இதை உடனே கேட்ட துர்கா தன் மகன் உதய்யிடம், “நீயாவது வளர்ந்து என்னைப்போல இறை பக்தியுடன் இருக்க வேண்டும்,” எனக் கூறுகிறாள். இதைக் கேட்ட உதய், “எனக்கும் கடவுள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை,” எனக் கூறுகிறான். “ஏன்?” எனத் துர்கா கேட்க, அதற்கு, “கடவுள்னு ஒருவர் இருந்திருந்தால், இந்த ஆன்ட்டி ரோட்டில் நின்று பாசி விற்றுக் கொண்டிருக்க மாட்டாங்க; அவங்க பையன் ஸ்கூலுக்குப் போயிருப்பான்; நம்மைப்போல வசதியா இருந்திருப்பாங்க,” என மழலை மொழியில் கூற, அதைக் கேட்டுச் சட்டென அறைந்தது போல உணர்கிறாள் துர்கா.

அப்போது கதிரவன், “நல்லா கேட்டுக்கோ, நம்ம பையன் வளர்ந்தபிறகு என்னைப்போலக் கடவுள் மறுப்பாளனாக வருவான்,” எனச் சிரித்துக்கொண்டே சொல்கிறான். அவளோ வெட்கித் தலைகுனிகிறாள். அத்துடன் அன்றைய நாள் முடிந்தது.

அடுத்த சில நாட்கள் அந்தப் பெண்மணியையும் அவளுடைய மகனையும் அந்தப் போக்குவரத்துச் சிக்னல் அருகே காணவில்லை. அவர்கள் வேறு ஏதாவது சாலைக்குச் சென்றிருக்கலாம் எனக் கதிரவனும் உதயும் நினைக்கிறார்கள்.

ஆனால், சில நாட்கள் கழித்து, அதே போக்குவரத்துச் சிக்னல் அருகே அந்தப் பெண்மணி நேர்த்தியான உடையுடன், தன்னுடைய மகனை அருகில் இருக்கும் அரசுப் பள்ளியின் சீருடையுடன் பள்ளி வாசலில் நிற்க வைத்துக் கொண்டிருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். அதைப் பார்த்த உதய், “அம்மா! அப்பா! பாருங்க, அந்தப் பாசி வித்த ஆன்ட்டி இப்போ அவங்க பையனை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போறாங்க!” எனக் கத்துகிறான்.

இதைச் சிரித்துக்கொண்டே கேட்ட துர்கா, “இப்போதாவது நீங்கள் இருவரும் நம்புறீங்களா கடவுள் இருக்காருன்னு?” எனச் சொல்கிறாள். இதைக் கேட்ட கதிரவன், “நீ என்ன வேணுமானாலும் சொல்லு; இப்பவும் எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, எனக்குத் தொழில்தான் முக்கியம்,” எனச் சொல்கிறான். இதைக் கேட்ட உதய், “கடவுள் யாரும்மா? அவரு எப்படி இருப்பாரு?” எனக் கேட்கிறான்.

சிறுகதை
சிறுகதைGemini image

அதற்குத் துர்கா, “கடவுள் எல்லா இடத்துலயும் இருக்காருப்பா. அவரு உங்க அப்பாவுக்கு அவரோட தொழிலா இருக்காரு; உனக்கு நீ பள்ளியில் படிக்கும் படிப்பாக இருக்கிறார்; எனக்கு உங்கள் மீதும் நம்மைச் சுற்றி உள்ளவர்கள் மீதும் நான் வைத்துள்ள அன்பாக இருக்கிறார்,” எனப் மிகப்பெரிய விளக்கத்தைச் சொல்கிறாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: எதிர்முனையின் மௌனம்!
சிறுகதை

இதைப் பொறுமையாகக் கேட்ட உதய், “நீ சொல்வது சரிதான்மா; அந்தப் பாசி விற்ற பெண்ணின் பையனும் ஸ்கூல் போகிறான், இதை வைத்தே கடவுள் இருக்கிறார்னு நானும் நம்புறேன்,” என்று சொல்கிறான். அப்போது துர்கா கதிரவனிடம், “நீங்கள் பையனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு ஆபீஸ் போங்க; நான் இன்று கோயிலுக்குப் போக வேண்டும்,” என்று கூறிவிட்டு காரைவிட்டு இறங்கிச் செல்கிறாள். காரும் நகர்ந்து செல்கிறது.

பாசி விற்ற பெண்மணி துர்கா வருவதைப் பார்த்தவுடன், “அம்மா, மிக்க நன்றி! உங்களால்தான் இன்று என்னுடைய மகன் அரசுப் பள்ளியில் படிக்கிறான்; தினமும் காலையில் நல்ல உணவும் பள்ளியில் வழங்கப்படுகிறது. கணவனின் ஆதரவும் இல்லாமல், வருமானமும் இல்லாமல் பாசி மணிகள் விற்ற எனக்கு, உங்கள் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் சுத்தம் செய்யும் வேலைக்குச் சேர்த்து விட்டீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நன்றாக இருப்பீர்கள்,” எனக் கண்கலங்கக் கூறி முடிக்கிறாள்.

இதையும் படியுங்கள்:
திகில் சிறுகதை: பொம்மை!
சிறுகதை

அதற்குத் துர்கா, “சரி, நீ வேலைக்குப் புறப்படு; நான் கோயிலுக்குச் சென்றுவிட்டு கார்மெண்ட்ஸ் வருவேன்,” எனக் கூறிவிட்டு நகர்கிறாள்.

எப்படியோ, துர்கா தான் செய்த ஒரு நல்ல காரியத்தால், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போல அந்தப் பெண்மணி மற்றும் அவளுடைய மகனின் வாழ்க்கை சிறப்பாகிவிட்டது; தன் மகனும் இனி இறை பக்தியுடன் வளருவான் என்ற நம்பிக்கையும் அவளுக்கு வந்துவிட்டது. அப்போது கோயில் மணி அடிக்க, வேகமாக இறைவனின் சன்னிதி நோக்கி நகர்கிறாள் துர்கா.

(முற்றும்)