

"நான் யார்?" என்ற இந்தக் கேள்விக்கு விடை தேடிப் பயணிக்கிறதா உங்கள் மனம்? உலகப் புகழ்பெற்ற கவிஞர் கலில் ஜிப்ரான் எழுதிய ‘தீர்க்கதரிசி’ (The Prophet) நூலை வாசிக்கும்போது எழுந்த தத்துவார்த்தப் பிரளயம்தான் இந்தக் கட்டுரை!
கனா கண்டேன்! அதில் கலில் ஜிப்ரனைக் கண்டேன் !!
நான் யார் தெரியுமா?
'நான்' நல்லவனும் இல்லை; கெட்டவனும் இல்லை; 'நான்' நானாக இருப்பதும் இல்லை; பிறராக இருப்பதும் இல்லை; என்னுடைய உண்மையான 'நான்' என்பது என்னுடைய இயல்பு.
நான் 'இயல்பாக' இருக்கும்போது தான் நான் 'நானாக' உணர்கிறேன்.
'நான்' என்பது என்னுடைய 'அறிவு'.
அது என்னுடைய இதயத்தில் இருக்கும்; என்னுடைய மனதில் இருக்கும்; என்னுடைய சிந்தனையில் இருக்கும்; என்னுடைய ஆத்மாவில் இருக்கும்; ஏன் என் விழிப்பற்ற உறக்க நிலையிலும் இருக்கும்.
அந்த 'இயக்கம்' தான் என்னை இந்த 'நானாக' உலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறது. அந்த 'நான்' காலப் போக்கில் பெயரிடப் பட்டு, படித்து, பட்டம் பெற்று, வேலை செய்து, பொறுப்பேற்று, குடும்பம் குழந்தைகள் என்று சமுதாயமாக மாற வேண்டி இருக்கிறது.
அந்த 'நானை' செயல் பட செய்வது என் அறிவு!
அந்த 'அறிவை' இதயம் இயக்கும்போது 'இரக்கம்' வருகிறது: மனதில் வயப்படும் போது 'காதல்', 'காமம்', 'களவு' பிறக்கிறது: ஆத்மாவுடன் சேர்ந்து பயணிக்கும் போது வாழ்வின் விழுமியங்கள் என்னுடைய 'நானுக்கு' புரிகிறது: ஆழ்நிலையில் இருந்து செயல்படும் போது 'நான்' இந்த உலகில் 'நிலையற்றவன்' என்று அறிகிறேன்.
அப்போது என் அறிவு என் 'நானிடம்' அடங்குகிறது; ஆணவம் அழிகிறது; அன்பு பிறக்கிறது; சகிப்புத்தன்மை வளர்கிறது; குடும்ப சமுதாயம் மலர்கிறது; பல 'நான்கள்' ஒன்று சேர்வதால் சமுதாயத்தில் தத்துவங்கள், ஆன்மீகம், அறிவியல், அரசியல் ஆகியவை பிறக்கின்றன.
மனிதன் அறிவுடன் செயல்படுவதை விட அவனுடைய சூழ்நிலைக்கு அடிமையாகி அந்த அடிமைத்தனத்தில் வளர்கிறான்.
அவனை கட்டுப்படுத்துவது அவனுடைய பிறப்பு, வளர்ப்பு மற்றும் சுற்றுப்புறம். இந்த பாகுபாடு விலங்குகளுக்கு இல்லை என்று சொல்ல எனக்கு புத்தி இல்லை. ஆனால் ஒன்று மற்றும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
யாரையும் பார்த்து "பன்னி பயலே" சென்று சொல்லி விடாதீர்கள்! 'பன்னிகள்' இந்த சமுதாயத்தில் நமக்காக கழிவுகளை அகற்றும் மாபெரும் கடமையை ஆற்ற படைக்கப்பட்ட இயற்கை நியதி. அதைக் குலைக்க நினைத்தால் அதுதான் உலகிற்கு நேரும் அநீதி!
இவ்வாறாக சொல்கிறேன் 'பன்னிகள்' இயற்கை ஊடாக பிறந்து, உண்டு வாழும் ஒரு உன்னத உயிர். அதனால் இயற்கை மலரத் தொடங்குகிறது. மாறாக 'நாம்' இயற்கையை களவாட பிறந்த அபாயகரமான புருஷர்கள்.
குடும்பம் என்பது நம் பிள்ளைகள் அல்ல; அவர்கள் நம்மில் இருந்து வருகிறார்கள்: ஆதாலால் 'நாம்' அவர்களை உருவாக்க நமக்கு உரிமையும் இல்லை; அவர்களுக்கு என்று இந்த பிரபஞ்சத்தில் ஒரு பங்கு இருக்கிறது; அதை ஆற்றி விட்டு போக அவர்களை அனுமதியுங்கள். எல்லாவற்றையும் நீங்களே பங்கு போட்டு அதிகாரம் செய்து அழித்து விடாதீர்கள்!
'அன்பு செய்யுங்கள்' அது செய்யப்பட வேண்டும். உதாரணத்திற்கு இயற்கை சுரண்டல்களால் இப்போது உலகமே 'தீப்பற்றி' எரிகிறது. பூமி 'வெப்ப மண்டலமாக' மாறுகிறது.
வீட்டுக்கு மரம் வளர்ப்பது உங்கள் கடமை அல்ல! அது தான் உங்கள் பிறப்பின் அடித்தளம்! இந்த ஆட்டத்தை இப்போது ஆரம்பியுங்கள். களிப்பதற்கு காலம் இல்லை இது!
இன்பமும், துன்பமும் வாழ்வில் இரு பக்கங்கள்- நாணயத்தில் இருப்பது போல. அவற்றை அனுபவிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையானது உங்களுக்கு கை கூடும்.
இறப்பு வாழ்வின் ஒரு தொடர்ச்சி; அது எதிர்கொள்ள வேண்டி இருக்கும்; ஆதலால் வாழும்போதே இறந்து விடாதீர்கள்; காலம் கரைய தான் செய்யும்; அப்போதுதான் அதற்கு 'அழகு'.
உங்கள் அழுகையை நிறுத்துங்கள்!
இப்படியாக என் சிந்தனை ஆனது கலில் ஜிப்ரனுடைய 'தீர்க்கதரிசி' (Kahlil Gibran) (The Prophet) என்கிற சிறிய நூலை படிக்கும் போது பிரளயமாக எழுந்து என்னை மிரட்டியது.
இந்த சிதறல்கள் உங்களுக்கு பல வெடிப்புகளை ஏற்படுத்தி இருக்குமாயின் அவற்றை என்னுடன் பகிருங்கள்.
புத்தகங்கள் என் வாழ்வின் உடைய 'உயிர் நாடி'. ஏனென்றால் அதன்மூலம் மதம், இனம், மொழி, அறிவியல், தத்துவம், ஆன்மீகம், இடம், வாழ்வியல், அரசியல் ஆகியவற்றை அறிகின்றேன்.
அது என்னை மனிதனாக மாற்றுகிறது. மனிதனாக செயல்பட தூண்டுகிறது.