மதுரத்வனி வழங்கிய 'அழியாத ரேகைகள்' நிகழ்ச்சி: பத்திரிகை ஆசிரியராக 50 ஆண்டு காலப் பயணம்... இவரது வெற்றிக்குப் பின்னால்...

அழியாத ரேகைகள்: கல்கி ராஜேந்திரன் பற்றி திருமதி கே. பாரதியின் சிறப்புரையிலிருந்து ...
அழியாத ரேகைகள் நிகழ்ச்சியில்...
கல்கி கி. ராஜேந்திரன்
Published on
Kalki Strip
Kalki Strip

ல எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் , பத்திரிகையாளர்களையும், ஓவியர்களையும் ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு வாய்ப்புத் தந்து, மக்களுக்கு பத்திரிகைகள் படிக்கும் ஆர்வத்தை வளர்த்த பத்திரிகை உலகின் முன்னோடிகள் பற்றிய நிகழ்ச்சி 'அழியாத ரேகைகள்'.

ஒவ்வொரு மாதமும் மதுரத்வனி அமைப்பு நடத்தும் இந்த நிகழ்ச்சி, சென்னை மைலாப்பூர் ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியரின் வாழ்க்கை, பத்திரிகைப் பணியில் அவர்கள் சந்தித்த சவால்கள், வெற்றிகள், என்று நினைவு கூறும் நிகழ்ச்சி.

பிரபல பத்திரிகையாளர்களான திரு. மாலன் மற்றும் திரு.வி.எஸ்வி. ரமணன் இருவரும் ஒருங்கிணைக்கும் நிகழ்வு இது.

அந்த வரிசையில் இந்த மாதம் முதல் தேதியன்று கல்கி அவர்களின் மகனும் கல்கி பத்திரிகையின் நெடுநாள் ஆசிரியராக திகழ்ந்தவருமான திரு. ராஜேந்திரன் அவர்களைப் போற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹம்சினி பாடிய கல்கி அவர்கள் எழுதிய பூங்குயில் கூவும் என்ற பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது.

அரங்கின் உரிமையாளர் ஆர்கே. ராமகிருஷ்ணன் அவர்கள், மதுரத்வனியின் நிகழ்ச்சிகள் குறித்து அறிவிப்புகள் செய்தார்.

பின்னர் மாலன் அவர்களின் அறிமுக உரையைத் தொடர்ந்து கே. பாரதி அவர்கள், கல்கி ராஜேந்திரன் பற்றி சிறப்புரை வழங்கினார்.

அவரது உரையிலிருந்து….

"ராஜாஜி, டிகேசி, கல்கி போன்றோர் தொடர்புடன் ராஜேந்திரன் அவர்களது இளமைப்பருவம் மிகவும் சுவாரசியமாக இருந்தது.

டிகேசி அவர்கள் கம்பராமாயணம் சொல்லித்தருவார்.

கிரிக்கெட் விளையாடும்போது ராஜாஜியும் பந்து போடுவார்.

அப்பாவுடன் கல்கி கார்டன் சென்றால் அங்கே திருமதி. எம்.எஸ் அவர்கள் பாடல் பயிற்சி செய்து கொண்டிருப்பார்.

வீட்டில் அக்கா ஆனந்தியின் நடனப் பயிற்சி. அம்மாவும் பெரிய ஆளுமை.

அழியாத ரேகைகள் நிகழ்ச்சியில்...
திருமதி. கே. பாரதி , பத்திரிகையாளர்திரு. மாலன்

ராஜாஜி, டிகேசி, கல்கி இவர்களின் காரசாரமான அரசியல் விவாதங்கள்...

இவ்வாறு, கலை இலக்கியம், அரசியல் போன்றவற்றில் தேர்ந்த பல ஜாம்பவான்களோடு, இவரது இளமைப் பருவம் அமைந்தது.

அவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலையில் வளர்ந்தவர்.

கணக்குப் பார்த்து செலவிடுவதில் வல்லவர்.

ஒருமுறை பணம் வைத்திருந்த டிராயரைப் பூட்டாமல் இவர் சென்றுவிட, அப்பா கல்கிக்கு கோபம்.

ஏன் தெரியுமா?

“யாரையோ பணம் திருடத் தூண்டிவிட்டாயே “ என்று..

நல்ல மதிப்பீடுகளைச் சொல்லிக் கொடுத்து வளர்த்த கல்கி, இவர் பிஃபார்ம் படிக்கும்போது காலமானார்.

திரு சதாசிவம் கல்கி ஆசிரியரானார்.

அங்கே உதவியாளராகச் சேர்ந்தார் ராஜேந்திரன். கிஷ்ணமுர்த்தியின் மகன் என்பதால் அவருக்கு பத்திரிகையாளராக நேரடி பணி உடனே கிடைத்துவிடவில்லை பல வேலைகளையும் செய்தார். குறிப்பாக வெளியூர் பயணங்களில் ராஜாஜிக்குத் துணையாகப் போக வேண்டும்.

ராஜாஜி கண்டிப்பானவர். அவருக்குத் துணை என்பது சவால். அதெல்லாம் பின்னாளில் நல்ல அனுபவங்களைத் தந்தது.

பின்னர் சதாசிவத்தின் மகள் விஜயாவை மணந்து கொண்டார் ராஜேந்திரன்.

கல்கிப் பத்திரிகையில் சிறு தவறு கூட வராதபடி கவனமாக சதாசிவம் ராஜேந்திரன் இருவருமாக பார்த்துக் கொண்டார்கள்.

தெய்வத்தின் குரல், சக்க்ரவர்த்தித் திருமகன் போன்ற ஆன்மீகத் தொடர்கள் வெளி வந்தன.

ராஜாஜியும் இதில் அக்கறை எடுத்துக் கொன்டார்.

ஒருமுறை தலையங்கத்தில் “மதுவிலக்கு ரத்து” என்று தவறுதலாக வந்து விட, ராஜாஜி,

“இரண்டு எதிர்மறைப் பொருள் சொற்கள் சேர்ந்தால், நேர்மறைப் பொருளை அல்லவா கொடுத்துவிடும் “ என்று திருத்தியிருக்கிறார்.

யார் எதைச் சொன்னாலும் அதை நல்லதனமாக எடுத்துக் கொள்ளும் இயல்பு கொண்டவர் ராஜேந்திரன்.

1970ம் ஆண்டு சதாசிவம் ஓய்வு பெற்ற பிறகு, ராஜேந்திரன் கல்கி ஆசிரியராகிறார். ஆசிரியராக ஐம்பது ஆண்டு காலப் பயணம்.

கல்கி கிஷ்ணமுர்த்தி அவர்கள் ஆசிரியராக இருந்தபோது சுதந்திரப் போராட்ட காலம் அந்தப் பின்னணியில் நிறைய கட்டுரைகளை மக்களுக்கு எழுச்சி ஏற்படும் விதமாக கல்கி எழுதினார்.

சுதந்திரப் பின்னணியில் அலை ஓசை நாவலையும் எழுதினார்.

ராஜேந்திரன் 1970 ஆசிரியராக பொறுப்பேற்றபோது, ஆன்மீகம், சமகால அரசியல் பின்னணியில் தொடர்கதைகள், பெண்களை தரக் குறைவாக எழுதாத போக்கு என்று கல்கியை தொடர்ந்து சிறப்பாகவே கொண்டு வந்தார்.

நடுவில் கல்கி பத்திரிகை நின்று ஒரு வருட காலம் தொய்வு ஏற்பட்டபோது அதிலிருந்து வெற்றிகரமாக மீட்டுக் கொண்டு வந்தவர் ராஜேந்திரன்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: உன் கண்ணில் நீர் வழிந்தால்..!
அழியாத ரேகைகள் நிகழ்ச்சியில்...

பொதுவாக கட்டுரைகள் எழுதுவது கடினம் என்று மாலன் தன் அறிமுக உரையில் குறிப்பிட்டதுபோல், கல்கி மற்றும் ராஜேந்திரன் எழுதிய கட்டுரைகள், சமுதாய மாற்றம் கொண்டு வரும் அளவுக்கு வலிமையாக இருந்தன.

ராஜேந்திரன் எழுதிய சாருலதா, சைக்கோ சாரநாதன், பொங்கி வரும் பெரு நிலவு தொடர்களும் ஆயிரக் கணக்கான வாசகசர்களைக் கவர்ந்தவை.

ஒரு முறை கல்கி இதழில் சிகரெட் விளம்பரம் ஒன்று இடம் பெற, அதைத் தவிர்த்திருக்கலாம் என்று ராஜாஜி கூறியிருக்கிறார். அதன் பிறகு சிகரெட் விளம்பரங்களே கல்கியில் வருவதில்லை.

அதேபோல பெண்களின் சித்திரங்களும் கண்ணியமாகவே வெளியிடப்பட்டு வந்துள்ளன.

சிறந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ராஜேந்திரன் அவர்களின் ஆலோசனையின் பேரில் கல்கியில் மாவட்ட மலர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிருபர்கள் சென்று, மக்களுடன் பேசி, அவர்களின் குறைகளைப் பேட்டி எடுத்து எழுதுவார்கள்.

அவை அரசின் கவனத்திற்கு வந்து, பல குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன.

ராஜேந்திரனின் சிறப்பான துணிச்சலான தலையங்கங்கள் புகழ் பெற்றவை.

இதையும் படியுங்கள்:
யாருக்காக... இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்..?
அழியாத ரேகைகள் நிகழ்ச்சியில்...

விலைவாசியைக் கட்டுப்படுத்தாமல் இலவசங்களை வாரி வழங்குவது தவறு என்று அரசுக்கு எச்சரிக்கை செய்தும், அணு ஆயுத சோதனை செய்யும் போக்கு சரியல்ல என்றும் துணிச்சலாக எழுதினார்.

கேள்வி பதில்கள், கட்டுரைகள், கதைகள் தொடர்கள் என்று எல்லாவற்றையும் சிறப்பாக, கல்கியின் பாரம்பரியம் மாறாமல் கொண்டு வந்தவர் ராஜேந்திரன்..."

என்று ராஜேந்திரனின் பணிகள், இயல்பு, வெற்றிகள் குறித்து பல சம்பவங்களையும் குறிப்பிட்டு, சுவாரசியமான சிறப்புரை வழங்கினார் பாரதி.

எம். ஃபில் ஆராய்ச்சிக்காக கல்கி இதழ்களைப் படித்ததையும், படிப்பில் சேரும் முன் சில மாதங்கள், கல்கி அலுவலகத்தில் வேலை பார்த்த அனுபவங்களையும் சுவைபடக் கூறினார்.

திருப்பூர் கிருஷ்ணன், சிவசங்கரி, இந்துமதி, வித்யா சுப்ரமணியம், திருப்புகழ் உள்ளிட்ட பல ஆளுமைகளும், கல்கி குடும்பத்தாரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அன்றைய 'அழியாத ரேகைகள்' அருமையான நிகழ்ச்சி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com