யாருக்காக... இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்..?

Funeral function
Funeral function
Published on
Kalki Strip
Kalki Strip

உங்கள் இறுதி ஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும், அடுத்த வேளை உணவை அயல் வீட்டுக்காரர் கொண்டுவந்திருப்பார். இல்லை என்றால் ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும்.

பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க...

படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்...

சாப்பிட்ட இலைகளையும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்...

ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.

மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள். எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்..

இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்.

தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..

கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..

அடுத்து வரும் நாட்களில் நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்...

உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்.

ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு, உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.

இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர்.

ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார்.

அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர்.

அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்.

ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்.

மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும், ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும், திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும், வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும்..

இதையும் படியுங்கள்:
மினி கதை: தொழில் தர்மம்
Funeral function

நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்.

இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.

கண்மூடித் திறக்கும் நொடியில், வருடங்கள் பல ஓடியிருக்கும்.

உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது. என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்.

உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய், அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்..

மறு பிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும்..

மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி, பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்.

இதையும் படியுங்கள்:
புத்தகத்தை வைத்துப் பணம் பெற்ற இளைஞன்! யார்? எங்கே? எதற்கு?
Funeral function

இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்..?

உங்கள் வாழ்க்கை , யாரையும் நீங்கள் திருப்தி படுத்த தேவையில்லை, யாரும் உங்களை திருப்தி படுத்தபோவதும் இல்லை.

*வாழுங்கள் உங்களுக்காகவும் வாழுங்கள்....*

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com