
ஆனைப் பாப்பானை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. ஆராட்டுக்காக அழைத்து வரப்பட்ட யானை அது!
கிட்டத்தட்ட ரெண்டு நாட்களுக்கும் மேலாக நடத்திவரப்பட்ட ஜீவன் அது. மண்ணார்காடு வழியில் வந்தால் போக்குவரத்துப் பிரச்சனை அவ்வளவாக இருக்காது என்று அழைத்து வந்தான் ஆனைப் பாப்பான் அப்புக்குக் குட்டன்.
வரும் வழியில் யானை மீது ஏறாமால், மலை நாட்டில் நடத்திக் கூட்டி வந்தான். அவன் அன்பை அது புரிந்து கொண்டது. வரும் வழியில் அவன் போட்டிருந்த புளூ கலர் ஹவாய் செப்பல் அதிக தூரம் நடந்ததால் வார் அறுந்து போக, அவன் வழியிலிருந்த செருப்புக் கடையொன்றில் நிறுத்தி, செருப்புக்கான வாரை மட்டும் வாங்கினான்.
முழுச் செருப்பாய் வாங்க அவனிடம் முதல் இல்லை, மூன்று பட்டன்கள் செருகிக் கொள்ள மூன்றையும் இணைத்து ‘ஒய்’ மாதிரி இருந்தது அந்த ஹவாய்ச் செப்பல் மேல் வார்!
அதை மாட்டிக் கொண்டி, யானையை கூட்டிக்கொண்டு, தானும் நடந்தான். மண்ரோட்டில் நடக்கலாம், காடு மேடுகளில் கூட நடக்கலாம், ஆனால் ரயில்வே டிராக் மற்றும் தார்ச்சாலைகளில் நடக்க ஒத்துவராத ஒரு செருப்புதான் ஹவாய் செப்பல்.
அதிக தொலைவிலிருந்து யானையைக் கூட்டிவருவதால், அவன் விந்தி விந்தி நடக்க, கால் பெருவிரல், ஆள்காட்டிவிரலை இணைக்கும் கிரிஃப் பட்டன் அடிக்கடி கழன்று கொண்டது! இடுப்பு அறுனாக்கயிறில் (அரைஞான் கயிறுதான்) மாட்டியிருந்த பின்னூசியைக் (ஊக்கை) கழற்றி செருப்பின் பட்டனுக்கு வெளிப்புறமிருந்து கழன்று வராதமாதிரி மாட்டிக் கொண்டு நடந்தான்.
பத்து அடி நடப்பதற்குள் அது இப்போது விரிந்து கால்விரல்களைப் பதம் பார்த்து ரத்தம் கசிந்தது.
வலி பொறுக்க முடியாமல் முணங்கினான்.
யானை நின்றது. அவன் ஓய்வெடுக்கட்டும் என்று.
"ம்… நடக்கான்… நிக்கறது!" என்று மலையாளத்தில் ”நிக்காதே! நட" என அதட்டல் போட, அது பிளிறிக் கொண்டு நடை தொடர்ந்தது.
ஒருவழியாய் அம்பலம் வந்து சேர, ஊர்க்காரர்கள் வெட்டி வைத்திருந்த தென்னை மட்டைகளை யானைக்குத் தின்னக் கொடுத்தார்கள். திருவிழாவில் கரும்பு ஜுஸ் கடை போட்டிருந்தவர் கரும்புகள் ஐந்தாறைத் தின்னக் கொடுத்து ஆசி வாங்கிக் கொண்டார்.
அவனுக்குக் கோயில் சார்பாக பாக்கு மட்டைச் சாதம் தரப்பட்டது. யானைக் காலடியில் அமர்ந்து பிரித்துத் தின்ன, யானை அவனை ஈரவிழிப்பார்வை பார்த்தது.
"எந்தா.. ஊணு வேணோ?" கேட்டு ஒரு உருண்டை உருட்டி வாயுள் போட, அது தும்பிக்கை ஆட்டி சிலிர்த்தது. மட்டைச் சோறு காலியானது!
ஆராட்டு முடிந்து கொடுத்த காணிக்கை வாங்கித் திரும்புகையில் யானை காலடியில் கழற்றிப் போட்டிருந்த ஹாவாய் செப்பலை கோவிலில் செருப்பு திருடுவதையே தொழிலாய்ச் செய்யும் யாரோ திருடிப் போயிருக்க வெறுங்காலில் நடந்தான்.
கால் வலியும், வெயில் கடுப்பும் அவன் பாதத்தைப் பதம் பார்க்க, அவன் கேரளா பார்டர் விட்டால், கம்மி விலையில் சரக்கு சிக்காது, இங்கேன்னா கள்ளுக் குடிக்கலாம் என்று கள்ளைக் குடித்தான்! புளித்த கள் என்பதால் உமட்டி வரக் கொப்பளித்துக் கண்ணீர் சிந்தி வறுமைக்காக தன்னையே நொந்து கொண்டு கீழே சரியப்போனவனை, யானை உக்கார்ந்து முதுகில் ஏற்றிக் கொண்டு ஊர் நடுவே இருந்த ஒரு கடைமுன் நின்று கண்ணீர் விட்டது. அதற்குள் அவன் அதன் மேலேயே படுத்துத் தூங்கி கொண்டிருந்தான்.
நகர்ந்தால் எங்கே அவன் விழுந்து, அடிகிடி பட்டுவிடுவானோ என அந்த ஐந்தறிவு ஆறறிவின் தவறை மன்னித்து அமைதியாக அங்குசமில்லாமலேயே நங்கூரமில்லா கப்பலாய் நகராமல் தானும் கண்ணீர் சிந்த நின்றது.
செய்தியில் கள்ளுண்ட பாகனைப் பற்றி பரபரப்பாக பேசப்பட்டதே ஒழிய பாகனுக்காக கண்ணீர் சிந்திய களிரை யாரும் கண்டு கொள்ளவே இல்லை!