சிறுகதை; தொலையாத காதல்!

 Tholaiyatha kadhal...
Kalki Tamil short stories
Published on

சிறுகதை; யோகி

"ஒரு பேனா தொலைஞ்சதுக்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம்?" என்று கேலியாய்க் கேட்டாள் வசந்தி, நான் எதுவும் பதில் சொல்லவில்லை. சொல்லப் பிடிக்கவில்லை. அந்த பேனாவை கேலி செய்வது என்பது எனது நேற்றைய காதலையே கேலி செய்வதுபோல்.

அந்த பேனா, காதல் சின்னம். அதைப்பற்றி இவளுக்கு என்ன தெரியும்? அதன் மேன்மையைச் சொன்னாலும் இவளுக்கு விளங்குமா?

அந்த பேனாவைத் தவிர்த்து - நான் வேறு எந்த பேனாவையும் உபயோகிக்கவே மாட்டேன். அந்த பேனாவோடு இருப்பது என்பது என் ஈஸ்வரியோடு இருப்பது மாதிரி.

இரண்டு வருஷத்திற்கு முன் என் பிறந்த தினத்திற்குப் பரிசாக அளித்தாள். "இதில்தான் இனி நீங்க கதை எழுதணும். இந்த என் பேனாவால் நீங்க எழுதும்போது நானே எழுதற மாதிரி எனக்குத் தோன்றும்" என்று சிரித்தாள்.

அவளை இழந்துவிட்ட பின்னாலும், அவள் இறந்துவிட்ட பின்னாலும் - இந்த பேனாவால் அவள் என்னோடு இருப்பதாகவே நான் உணர்கிறேன். மை ஊற்றும் பேனா அது. பிங்க கலர்... பிங்க் கலரில் பேனாவைப் பார்ப்பது அரிது. அந்த பேனாவைப் பார்க்கும் எவரும், "எங்க சார் இந்த பேனா வாங்கினீங்க?'' என்று கேட்டு அந்த பேனாவால் ஒரு வார்த்தையாவது எழுத விரும்புவர். இல்லை குறைந்தபட்சம் அந்த பேனாவை தொடவாவது விரும்புவர். நான் அதற்கு அனுமதியேன். ஈஸ்வரி சொன்னாள் "இந்த பேனாவை வாங்க, செலக்ட் பண்ண நாலஞ்சு கடையாவது அலைஞ்சு இருப்பேன்" என்று.

இது என் காதல் பரிசு. எனக்கு மாத்திரமே உரித்தான காதல் பரிசு. அந்த பேனா தொலைந்தது என பாதி ஜீவனே போனமாதிரி உள்ளது.

ப்போது என் மனைவிகூட அந்த பேனாவை தொட்டால் எனக்கு கோபம் வரும். அவள் பரிகாசம் பண்ணுவாள். "என்னங்க... கேவலம் ஒரு பேனாவை தொட்டதுக்காக இத்தனை கூச்சல் போடுறீங்க. அந்த பேனாவை தொடாதேனா, தொடலை."

அவள் என் பேனாவைத் தொடக்கூடாது என்பதற்காக அவள் எழுதுவதற்காக வேறு ஒரு பேனா வாங்கிக் கொடுத்துவிட்டேன். அவள் எழுதுவதற்கென்று பெரிதாய் ஒன்றும் இல்லை. பத்திரிகையில் வரும் குறுக்கெழுத்துப் போட்டி, ரேடியோ, டீ.வி.யில் வரும் அபத்தமான போட்டிகளில் கலந்துகொள்வாள்.

என் பேனாவை நான் தினசரி லேசான ஈரத்துணியில் துடைத்து எப்போதும் பளபளவென்று வைத்து இருப்பேன். இரண்டு வருஷம் ஆகியும் இன்றும் புதுப்பேனாவைப் போல்தான் வைத்து இருந்தேன். எதுவரை இந்த பேனாவை இப்படியே பாதுகாப்பேன்?

இதையும் படியுங்கள்:
திருப்பதி சென்றால் ஒரு திருப்பம் நேரும்... அப்படியா?
 Tholaiyatha kadhal...

ஈஸ்வரியின் நினைவு தொலையும் வரையா? அவளுடன் இருந்த நாட்கள் ரம்மியமானவை. ஆனாலும் அவள் கோரமாய் இறந்தது எத்தனை துரதிருஷ்டமான ஒன்று!

கல்யாணம் பண்ணிக்கொள்ள இருவரும் முடிவு பண்ணி இருந்தோம். தேதி மட்டும்தான் முடிவு பண்ண வேண்டி இருந்தது. அவள் வீட்டில் எங்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்கள். என் வீட்டில் மறுப்பு. அவள் வீட்டார் முன்னிலையில் திருமணம் செய்ய முடிவு பண்ணியாயிற்று.

ன்று ஷாப்பிங் போய்விட்டு மெயின் ரோட்டைக் கடந்தபோது அசுர வேகத்தில் வந்த லாரி அவளை மோதித் தள்ளிவிட்டுப் போனது. அந்த நொடியே உயிர்நீத்தாள். எத்தனை மென்மையானவள். அந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி விட்டாள். வாழ்க்கையே வெறுமையாய் இருந்தது.

அவள் தந்த பொருட்கள் ஏதேனும் - அவளின் நினைவாய் வைத்துக்கொள்ள இருக்கிறதா என்று தேடினேன். எதுவும் இல்லை - இந்த பேனாவைத் தவிர... இந்த பேனாகூட அவள் இருந்தவரை நான் உபயோகித்ததே இல்லை. அப்போது இந்த பேனாவின் மகோன்னதம் எனக்கு விளங்கவில்லை.

அவள் இறந்த பின்னால் இந்தச் சின்னஞ்சிறு பேனாவைக்கொண்டு நான் ஆறுதல் அடைகிறேன். சில சமயம்தான் கற்பனை செய்வேன். இந்த சின்ன பேனாவிற்கு கைகால் முளைத்து அப்படியே ஈஸ்வரியின் வடிவம் பெறுவதை...

ப்படியோ பெற்றோரின் வற்புறுத்தலால் வசந்தியை மணம் முடித்துக்கொண்டேன். வசந்தியை மணம் செய்துகொண்ட பின்னரும் முழுமையாய் இவளுடன் இல்லறம் நடத்த முடியவில்லை. ஈஸ்வரியின் நினைவால் இவளுடன் ஒழுக்கமான வாழ்க்கை வாழமுடியவில்லை. ஈஸ்வரியுடன் நடக்க வேண்டிய என் தாம்பத்ய வாழ்க்கை எவளுடனோ - அது எனக்கு வேதனை அளிக்கிறது.

அதற்காக இவளை நான் புண்படுத்துவதில்லை.

காணாமற்போன பேனாவைப் பற்றி இவள் எப்போதாவது கேலி பேச்சு பேசுவதுண்டு. அப்போது நான் இவளை வார்த்தைகளால் புண்படுத்துவேன். ஒருமுறை அந்த பேனாவிற்காக இவளை அடித்துகூட விட்டேன்!

அன்றொரு நாள்... சட்டைப்பையில் என் பேனாவை சொருகி வைத்து இருந்தேன். துவைப்பதற்கு சட்டென்று சட்டையை எடுத்தாள். பேனா கீழே விழுந்துவிட்டது. விழுந்த வேகத்தில் இங்க் சிதறியது. பேனாவின் மூடி கழண்டுகொண்டது.

இதையும் படியுங்கள்:
நெவாடா முக்கோணம் - மர்மங்கள் முடியவில்லை!
 Tholaiyatha kadhal...

சப்தம் கேட்டுத் திரும்பிய நான் - பேனாவின் நிலையைப் பார்த்து அதிர்ந்துபோனேன். அடிபட்டுக் கிடக்கும் சிறு குழந்தையைத் தூக்குவதைப்போல் மென்மையாய் பேனாவை எடுத்தேன். இங்க் சிதறி பிங்க் நிற பேனா அலங்கோலமாய், தன் அழகை தொலைத்துவிட்டு இருந்தது. எனக்குக் கோபம் வந்துவிட்டது.

'உனக்கு வர வர பொறுப்பே இல்லை பேனாவை இப்படித்தான் கீழே போடுறதா..." என்று அவள் முதுகில் அறைந்தேன். பேனாவுடன் பையில் இருந்த பணமும் சிதறி விழுந்தது. அதற்காக நான் வருந்தவில்லை. நான் பேனாவிற்காக அவளை அடித்தது அவளை அதிர்ச்சியடையச் செய்துவிட்டது.

இரண்டு நாள் என்னிடம் அவள் பேசவில்லை. எனக்கு அதுவேறு இம்சையாய் இருந்தது. நான் அவளை அடிக்கும் அளவிற்கு அவள் எந்தத் தவறும் செய்யவில்லையே. அப்படியே தவறு செய்து இருந்தாலும் அவளை அடிக்க எந்த உரிமையும் எனக்கு இல்லையே.

ஈஸ்வரி சொல்வாள். "நமக்காக, நம் தேவைக்காக பிறரை நாம் புண்படுத்தவோ, இம்சிக்கவோகூடாது. எப்போதும் நாம் கோபத்திலும் சரி, இன்பத்திலும் சரி, ஒரே மாதிரிதான் நேசிக்கணும்" என்று. உடனே வசந்தியை சமாதானப்படுத்தினேன்.

"ஒரு பேனா கீழே விழுந்ததுக்கு என்னை அடிக்கிறதா" என்று கேட்டு அவள் என் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஊரில் இருந்து வசந்தியின் அம்மா இரண்டு நாள் கழித்து வந்து இருந்தபோது வசந்தி சொன்னாள்: "அம்மா இவருக்கு கிறுக்குத்தான் பிடிச்சு இருக்கு. ஒரு பேனா கீழே விழுந்ததற்கு என்னை அடிக்கிறார், தீயும் அப்பாவும் இவரோட உத்தியோகத்தைப் பார்த்து ஏமாந்துட்டீங்க. இவர் ஒரு நல்ல கணவரா இல்லேம்மா, ஒரு அன்பான பேச்சு, ஒரு அனுசரணையான குணம் எதுவும் இல்லை" என்றாள். எனக்கு சுரீர் என்றது. உண்மைதான். நான் என்னை மாற்றிக்கொள்ள இயலாதா..

பேனா தொலைந்து மூன்றுநாட்கள் ஆகிவிட்டன. கிடைத்தபாடில்லை, 'பேனா / தொலைந்ததில் இருந்து நான் சரியாகச் சாப்பிடுவதில்லை' என்று வசந்தி வருத்தப்பட்டாள். உண்மைதான். என் மூளை முழுக்க பேனாவின் நினைவுதான். எங்கு தொலைந்து 'இருக்கும்? பஸ்ஸில்தான் தொலைந்து இருக்க வேண்டும். பஸ்ஸில் தேடவா முடியும். மூன்று நாட்கள் ஆகிவிட்டன. எவராவது பார்த்து 'இருந்தால் - அதை எடுத்துக்கொண்டு போய் இருப்பார்கள். சிறுவர்கள் கையில் சிக்கி இருந்தால் அக்குவேறு, ஆணிவேறாகக் கழட்டி ஆராய்ச்சி செய்து இருப்பார்கள்.

வழக்கமாய்ப் போகும் பஸ்தானே. கண்டக்டரிடம் கேட்டால் என்ன... கண்டக்டர் வழக்கமாய் அதே ரூட்டில் வருபவர்தான். கேட்டேன். சிரித்தார். "ஹி... ஹி..." என்று. "ஏங்க அவனவன் பஸ்ல எதை எதையோ தொலைச்சிட்டு கிடைக்காம திண்டாடுறான். நீங்க தம்மாத்துண்டு பேனாவைக் கேட்கறீங்க..."

இதையும் படியுங்கள்:
என்னது, ரூ.50 கோடியா? நாயின் விலையை கேட்டா தலைய சுத்துது!
 Tholaiyatha kadhal...

நான் எத்தனை சீரியஸாய் கேட்டதை இவர் ஹாஸ்ய உணர்வோடு எடுத்துக்கொண்டு நகைக்கிறார். தம்மாத்துண்டு பேனாவா அது... காதல் சின்னம்... போடா உனக்கென்ன தெரியும் என்று முணுமுணுத்தவாறு நடந்தேன்.

என்னவோ தெரியவில்லை. ஒரு மனிதனின் இறப்பைப் போன்று அந்த பேனாவின் தொலைதல் என்னை இம்சிக்கிறது. ஈஸ்வரியின் நினைவாய் - எஞ்சி இருந்த ஒரு நினைவுச் சின்னத்தையும் தொலைத்துவிட்டேனே. எத்தனை அஜாக்கிரதையாய் இருந்து இருக்கிறேன். இரண்டு நாளாய் வசந்தியின் பேனாவில்தான் எழுதுகிறேன். என்னவோ திருப்தி இல்லாமல் எழுதுவதுபோல எழுதுகிறேன்.

அதோடு வசந்தியைத் திட்டுகிறேன். ''பேனாவா வைச்சு இருக்கே? நிப் வளைஞ்சு இருக்கு. உன் மூஞ்சி மாதிரி.''

''நீங்க வாங்கிக் கொடுத்த பேனாதானே. அப்படித்தான் இருக்கும்" என்று வசந்தி சிரித்தாள்.

றுநாள் ஆபீஸிலிருந்து திரும்பியபோது. அந்த பேனா தொலைந்த என் பிங்க் நிற பேனா டேபிள் மேல் இருந்தது. ஆனந்தக் கூச்சலிட்டேன். வசந்தி சமையற்கட்டில் இருந்து வந்தாள். “எங்க இருந்தது வசந்தி இந்த பேனா!" என்று பேனாவிற்கு முத்தமிட்டேன்.

நான் பேனாவிற்கு முத்தமிடுவதைப் பார்த்து வசந்தி நாணினாள். அவளுக்குக்கூட நான் இத்தனை நேசத்துடன் முத்தம் கொடுத்து இருக்க மாட்டேன்.

வசந்தி எதுவும் சொல்லாமல் சிரித்தாள். "என்ன சிரிக்கிறே?"

"இது தொலைஞ்ச பேனா இல்ல... அதே மாதிரி இருக்கும் புது பேனா."

"இல்ல... பொய் சொல்றே... அதே பேனாதான். நீ எடுத்து ஒளிச்சு வைச்சிட்டு என்னை நோகடிச்சு இருக்கே?"

"அய்யோ இல்லேங்க... புதுப் பேனாங்க. இதோ பாக்ஸைப் பாருங்க. புது பேனாதான். ஒரு பேனாவிற்காக நீங்க இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணினதைப் பார்த்ததும் அதே மாதிரி பேனா வாங்கிட முடிவு பண்ணி- வாங்கப் போனேன். இந்த கலரில் பேனா கிடைக்கலை.அப்புறம் அலைஞ்சு, திரிஞ்ச ஒருவழியா வாங்கிட்டேன். என் பரிசு, உங்களுக்கு."

எனக்கு சுரீர் என்றது. ஈஸ்வரியைப் போன்றே இவளும் அலைந்து திரிந்துதான் இந்த பேனா வாங்கி இருக்கிறாள். என் அமைதிக்காக, என் நிம்மதிக்காக...

ஒருகணம் எனக்கு வசந்தியே ஈஸ்வரியாக தெரிவது போலிருந்தது.

பின்குறிப்பு:-

கல்கி 19.01.1997 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com