
தேசீயப் போராட்ட வீரரும், பிரபல எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும், தமிழிசை இயக்கத்தில் பெரும் பங்கு வகித்தவருமான பேராசிரியர் கல்கி (பிறப்பு: 9-9-1899 மறைவு: 5-12-1954) மாயவரம் அருகே உள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ராமசாமி ஐயர் – தையல்நாயகி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
1924ல் ருக்மிணி என்பவரை மணந்தார். ஒரு புதல்வர் – ராஜேந்திரன். ஒரு புதல்வி – ஆனந்தி. இருவரும் தந்தை வழியில் மிளிர்ந்த எழுத்தாளர்களே.
கல்கி மாணவப் பருவத்தில் முதன் முதலாக ராஜாஜியைச் (தோற்றம்: 10-12-1878 மறைவு: 25-12-1972) சந்தித்தார். அவரிடம் ஏற்பட்ட ஈர்ப்பால் அவரைப் பற்றி நிறைய விசாரித்து அவரை நன்கு அறிந்து கொண்டார்.
பின்னால் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு வருட சிறை வாசத்தில் பெற்ற அனுபவம், திருச்செங்கோடு ஆசிரமத்தில் ராஜாஜியின் சேவை ஆகியவற்றைப் பார்த்து அவருடைய சிஷ்யராகவே ஆனார். இந்த அபூர்வமான பந்தத்தை அவர் பூர்வஜன்ம பந்தம் என்று பின்னால் எடுத்துரைத்தார்.
திருச்செங்கோடு ஆசிரமத்தில் ராஜாஜி ஆரம்பித்த விமோசனம் பத்திரிகையின் பொறுப்பை ஏற்றார் கல்கி. பின்னர் 1923ல் நவசக்தி இதழில் பணியாற்றினார். அதன் பின்னர் 1931ல் திரு எஸ்.எஸ்.வாசன் நடத்திய ஆனந்தவிகடனில் துணை ஆசிரியர் பதவியை வகித்தார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரம் காட்டினார் கல்கி. அரசை எதிர்க்கும் இந்த இயக்கம் திரு வாசனுக்கு சங்கடத்தைத் தந்தது.
விகடனிலிருந்து வெளியேறிய கல்கி திரு, சதாசிவம் உதவியுடன் கல்கி பத்திரிகையை 1941ல் ஆரம்பித்தார். கல்கியின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அரசியல் கட்டுரைகள் உள்ளிட்டவை பல்லாயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்தன.
கல்கி வார இதழ் ராஜாஜியின் முழு ஆசீர்வாதத்தைப் பெற்றது.
டி.கே.சி. அ.சீனிவாசராகவன், மீ.ப.சோமு, பி.ஶ்ரீ., நீதிபதி மகாராஜன் உள்ளிட்டோர் தங்கள் படைப்புகளை கல்கிக்கு அனுப்ப அது மக்கள் ஆதரவை வெகுவாகப் பெற்றது.
ராஜாஜி தனது அரசியல் கருத்துக்களையும், சமூகம் மேம்படுவதற்கான கருத்துக்களையும், ஆன்மீக இதிஹாஸ பொக்கிஷங்களையும், உயரிய ஆன்மீகக் கருத்துக்களையும் கல்கி இதழின் வாயிலாகத் தெரிவித்து வந்தார்.
சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து போன்ற காலத்தை வென்ற ராஜாஜியின் படைப்புகள் கல்கி வார இதழில் தொடராக வந்தன.
ஆயிரமாயிரம் பேர் அதைப் படித்து ஊக்கம் பெற்றனர்.
ராஜாஜியின் மறைவுக்குப் பின்னரும் அவரது கருத்துக்களும், சிறப்பான சிந்தனைகளும் தொடர்ந்து கல்கி இதழில் வெளியாகிக் கொண்டே இருந்தன.
ராஜாஜி வாழ்க்கை வரலாறு கல்கியில் தொடராக வெளி வந்தது. ஶ்ரீமதி லக்ஷ்மி தேவதாஸ் காந்தி ‘சில நினைவுகள்’ என்ற தலைப்பில் சுவையான தனது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
கல்கியில் அவ்வப்பொழுது பல்வேறு தலைப்புகளில் வெளிவந்த. அவரது சிந்தனைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவை.
அவற்றில் சில கருத்துக்கள்:
ஆக்ரா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சொற்பொழிவில் அவர் கூறியது:
இளைஞர்கள் நாம் அன்றாட வாழ்வில் அதிகமாகக் காண முடியாத வீரம், விடாமுயற்சி ஆகியவற்றைப் படித்து ஊட்டம் பெற வேண்டும்.
திருவள்ளுவரும் நம்மாழ்வாரும் என்ற கட்டுரை வசந்தம் இதழில் பிரசுரமானது. 35ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது கல்கி அதை மீண்டும் பிரசுரம் செய்தது.
“மனனக மலமற மலர்மிசை எழுதரு மனனுயர் வளவிலன்” என்று ஆழ்வார் ஆரம்பத்தில் பாடும் போது “மலர்மிசை ஏகினான்” என்று வள்ளுவனார் பாடியது நினைவுக்கு வருகிறது.
நவசக்தியில் வெளியான கவிதை ஒன்றை கல்கி மீண்டும் பிரசுரம் செய்தது:
மதுவைத் தருவது பாவம் என்ற கருத்தை ‘அழகுமல்ல புகழுமல்ல’ என்ற கவிதையாக தமிழக அரசுக்குத் தருகிறார் ராஜாஜி.
அந்தக் கவிதையின் கடைசி வரிகள்:
“கவலைக்கு மருந்திது பயமின்றி
அருந்தென்று தருவது பாபமாச்சே
நண்பனாகச் சொல்லுகிறேன்
நல்லதுக்குச் சொல்லுகிறேன்
பாபத்தைச் செய்யாதே!”
ராமகிருஷ்ண உபநிஷதத்தை அழகுறத் தமிழில் அளித்தார் ராஜாஜி.
அதிலிருந்து கல்கியில் பிரசுரமான ஒரு உபதேசம் இது:
கம்பத்தைப் பிடித்துக் கொண்டு பையன் கிறுகிறுவென்று சுழன்று சுற்றுகிறான். எத்தனை வேகமாகச் சுழன்றாலும் கம்பத்தைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு சுழல்கிறான்.
அதைப் போல் பகவானைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு உலக வாழ்க்கையில் சுழலுங்கள்
மீ.ப. சோமு அவர்கள் எழுதிய ரவிசந்திரிகை நூலுக்கு முன்னுரையில் ராஜாஜி அவர்கள் குறிப்பிட்டது:
“தொடர்கதைகளை எனக்கு இப்போது படிக்க முடிகிறதில்லை. நான் ‘ரவிசந்திரிகை’யைப் படிக்கவில்லை. ஏன் படிக்க வேண்டும்? எழுதிய ஆசிரியரைப் (சோமு) படித்து விட்டேன். அவருக்கும் நூலுக்கும் என் ஆசிகள் – சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.
கடைசியில் கல்கி இதழில் வெளியான” ராஜாஜி வாழ்க்கை வரலாறு” தொடரில் தன் தாயார் சிங்காரம்மாவிடம் அவர் கற்றுக் கொண்ட ஒரு பாடத்தைப் பற்றிச் சொன்னதைப் பார்க்கலாம்:
“தாயார் சிங்காரம்மா அவனுக்குக் கூறிய கதைகள் வேடிக்கையாகவும் இருந்தன; போதனைகளாகவும் அமைந்தன.... அவற்றில் ஒன்று .... எதன் மீது ஏற வேண்டுமோ அத்துடன் ஒட்டினாற் போல் ஏணியை வைக்கக் கூடாது.’ஸ்திரமான ஒரு கோணத்தில் வைக்க வேண்டும்.”
தாயாரின் கூற்று படி, ஸ்திரமான ஒரு கோணத்தில் தனக்கென்று அமைத்துக் கொண்ட பாணியில் ஏணியை வைத்து உயரத்தில் ஏறி அதில் மற்றவரையும் ஏற வைத்த மூதறிஞர் ராஜாஜியையும் மறக்க முடியாது; அவரது போதனைகளை இடைவிடாமல் வழங்கி வந்த
வழங்கி வரும் கல்கி வார இதழையும் மறக்க முடியாது; கல்கியை நிறுவிய மாபெரும் மனிதரான கல்கியையும் மறக்க முடியாது!
என்ன சரிதானே! நண்பர்களே!!