
ராஜாஜியின் அழைப்பு:
மூதறிஞர் ராஜாஜியிடமிருந்து 'கல்கி' ஆசிரியர் கி.ராஜேந்திரனுக்கு அழைப்பு வந்தது. உடனே சென்று அவரைச் சந்தித்த 'கல்கி' ஆசிரியரிடம் அர்த்தமுள்ள இந்து மதம் கட்டுரையைக் காண்பித்த அவர், “இது போன்றவை நமது பத்திரிகையில் அல்லவா வரவேண்டும்...” என்றார்.
அவர் குறிப்பால் உணர்த்தியதை உடனே புரிந்து கொண்ட ஆசிரியர் கண்ணதாசனைச் சந்திக்க, கண்ணதாசன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.
விளைவு – வாரந்தோறும் 'கல்கி'யின் கடைசிப் பக்கத்தில் கண்ணதாசன் தோற்றமளிக்கலானார்.
வித விதமான தோற்றம்!
மக்கள் பரவசமடைந்தனர்.
1976ல் 'கல்கி'யை வாங்குவோர் அனைவரும் முதல் பக்கமாகத் தேர்ந்தெடுத்தது கடைசிப் பக்கத்தை!
அதில் தன் எண்ணங்களைக் கொட்டித் தீர்த்தார் கவிஞர்.
இளைஞனுக்கு எச்சரிக்கை!
“இன்றைய இளைஞனுக்கு என்னுடைய வாழ்க்கை ஓர் எச்சரிக்கை! பழைய பண்பாடுகளை அவன் மறந்து விடக்கூடாது. புகை, மது போன்ற கொடிய பழக்கங்களைப் பழகிக் கொள்ளக் கூடாது.”
இப்படி வரிசையாக அற்புதமான அறிவுரைகளை தன் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் வழங்கினார்.
எழுபது ஆண்டுகள் மட்டுமே இறைவனிடம் கேட்ட கவிஞர்!
‘கிருஷ்ணகாந்தன் பதிகம்’ என்ற தலைப்பில் அவர் தனது கவிதையை அழகுறப் பதிவு செய்தார் இப்படி:
சீராடும் நாற்பதும் நீரோடிப் போனபின்
சிந்தையில் வந்து நின்றாய்
சென்றகா லங்களை எண்ணிஎன் கண்ணிலே
சிறுமழை வீழ வைத்தாய்
காராரு மேனியாய ஐம்பதில் உன்னையான்
கண்டனன் காதல் நாதா!
கனிவுடைய வயதிலொரு எழுபது கொடுத்தென்னைக்
காத்தருள் கிருஷ்ண காந்தா!
என்று கண்ணனிடம் பணிவுடன் வேண்டினார்.
ஆனால் கண்ணனோ அவரை அதிகமாக நேசித்து விரைவில் தன் பக்கம் அழைத்துக் கொண்டான் – 54 வயதிலேயே! (தோற்றம்:24-6-1927 மறைவு: 17-10-1981)
ஏறாதே! ஏறினால் இறங்காதே!
பகவத்கீதை ஸ்லோகத்தை ஒரு கட்டுரையின் ஆரம்பத்தில் வைத்து விளக்கி விட்டு அவர் அறிவுரை வழங்கினார் இப்படி:
“ஏறாதே, ஏறினால் இறங்காதே! வீடு கட்டிப் பிரமாதமாக ‘கிரக பிரவேசம்’ நடத்தாதே; நடத்தி, அதை விற்கின்ற நிலைமைக்கு வராதே. புதுத் தொழிலில் இறங்கிப் பழைய தொழிலை இழக்காதே. சமநிலையில் ஓடும் நதியைப் போல ஜாக்கிரதையாக இரு. விழுந்தால் விதை போல விழு; எழுந்தால் மரம் போல எழு.”
என்ன அற்புதமான ஒரு அறிவுரை! இது போல எளிய சொற்களால் பெரிய உண்மைகளை வாரம் தோறும் வழங்கலானார் அவர்.
சாரமிருக்குதம்மா!
சாரமிருக்குதம்மா என்ற தலைப்பில் அவர் தந்த கவிதை:
தனிமை ஒரு தனிமை அதில் தத்துவங்கள் கோடி
இனிமை இது இனிமைஎன இன்னிசைகள் பாடி
பனிமலர்கள் மயில்களுடன் பந்துவிளை யாடி
கனிவகைகள் உண்ணவொரு காலம் வரு மோடி!
(காலம் வருமோடி - காலம் வரும் ஓடி! காலம் வருமோடி?)
“ஆள் அரவமற்றதொரு அற்புத இடத்தை நாள் முழுதும் தேடி மனம் நாடி அலைகின்றேன்” என்ற கவிஞரின் தனிமை இரக்கம் இது!
சம்ஸ்கிருதக் கவிதை
கடைசிப் பக்கத்தில் ஒரு சம்ஸ்கிருத கவிதையைக் கூட இயற்றி அனைவரையும் வியக்க வைத்தார்.
அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்
என்று ஆரம்பித்து 12வது வரியில்
கீத போதகம் ஶ்ரீ கிருஷ்ண மந்திரம்
என்று அற்புதமாக முடித்தார்.
கடைசிப் பக்கத்தில் கண்ணதாசன் செய்யாத விந்தை இல்லை;
'சிறிய சுயசரிதம்’ என்று எழுதினார்.
‘நானும் என் கவிதைகளும்’ என்று சுயமதிப்பீடு செய்து கொண்டார்.
கண்ணதாசனைப் பற்றி எப்படி மதிப்பீடு செய்வது?
அவர் மகாகவி பாரதியைப் பற்றி ‘மரணத்தை வென்ற மகாகவி’ என்று ஒரு கவிதையை இயற்றித் தமிழருக்கு அளித்தார்.
அதில் ஒரு பகுதி இது:
“சந்திரர் சூரியர் உள்ளவரையிலும்
சாவினை வென்றுவிட்டான் – ஒரு
சாத்திரப் பாட்டினில் பாரததேசத்தின்
தாய்மையை வார்த்து விட்டான்
இந்திரதேவரும் காலில்விழும்படி
என்னென்ன பாடிவிட்டான் – அவன்
இன்றுநடப்பதை அன்றுசொன்னான் புவி
ஏற்றமுரைத்து விட்டான்”
மகாகவி பாரதியைப் பற்றி கவியரசு கண்ணதாசன் பாடிய வரிகள் அவருக்கும் பொருத்தமாக அமைகிறது அல்லவா?
பல வாரங்கள் தொடர்ந்த கடைசிப் பக்கம் கடைசியாக ஒரு முடிவுக்கு வர வேண்டி இருந்தது! ஒரு பக்கம் போய் நாலைந்து பக்கம் வாராவாரம் தரும் ‘சேரமான் காதலி’யை அவர் ஆரம்பிக்க இருந்ததனால் கடைசிப் பக்கம் முடிவுற்றது.
விநாயகர் படம் போட்டு, 'அன்பார்ந்த நேயர்களுக்கு என்று 'கல்கி' ஆசிரியர் ஆரம்பித்தால், அதில் சுவையான செய்தி ஒன்று நிச்சயம் இருக்கும்.
சேரமான் காதலி ஆரம்பத்தைச் சொல்ல வந்த 'கல்கி' ஆசிரியர் கி.ராஜேந்திரன், கண்ணதாசனைப் பற்றி அற்புதமான ஒரு மதிப்பீட்டைத் தந்தார். அந்த மதிப்பீட்டில் கண்ணதாசனையும் கடைசிப்பக்கத்தையும் பற்றி விவரித்தவர் அபூர்வமாகத் தன்னைப் பற்றியும் கூறிக் கொண்டார் இப்படி:
“கண்ணதாசனின் கடைசிப் பக்கத்தில் பத்திரிகை ஆசிரியன் என்ற முறையில் என்னுடைய பெயரும் 'இம்பிரிண்டில்' வந்து கொண்டிருந்ததைப் பெருமையாகவே நான் கருதினேன்”!
கண்ணதாசனால் கல்கியும் பெருமை பெற்றது!
'கல்கி'யால் கண்ணதாசனும் பெருமை பெற்றார்!