
ஒரு ஆணுக்கு எழுத்தறிவித்தால், அது அவனோடு போகும். தன்னுடைய வேலை, வருமானம் இவற்றுக்காகத் தான் கற்றதை அவன் பயன்படுத்திக்கொள்வான். தான் பெற்ற கல்வியால் அது தரும் வருமானத்தால் அவன் தன் பெற்றோரை, தன் மனைவியை, தன் குழந்தைகளைக் காப்பாற்ற முடியலாம். பொருளாதார ரீதியாகத் தன் குடும்பத்தாருக்கு நன்மை சேர்ப்பதிலேயே தம் நேரத்தைச் செலவிடுவதால், தன் பிள்ளைகள் எந்த வகுப்புப் படிக்கிறார்கள் என்பதே சில குடும்பங்களில் தந்தையருக்குத் தெரியவில்லை என்பதும் வேதனையான உண்மைதான்.
ஆனால், அதேசமயம், ஒரு பெண்ணுக்கு எழுத்தறிவித்தால், குடும்பத் தலைவியாகப் பொறுப்பேற்கும் அவள், தன் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. பணிக்குச் செல்லாத, குடும்பத்தை மட்டும் பராமரிக்கும் நிலையில் இருக்கும் அந்தத் தாய், தான் ஏற்கெனவே பள்ளி, கல்லூரி என சென்று பயின்றிருப்பதால், தன் குழந்தைகளின் தற்போதைய பாடத்திட்டத்தின் கீழ்வரும் பாடங்களையும் உடனிருந்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறாள்.
இதில் பெரிய நன்மை என்னவென்றால், அவளால் தன் குழந்தைகளின் பாடங்களை அவர்களுடைய ஆரம்ப கல்வி நாட்களிலிருந்தே உடனிருந்து கவனிக்க முடிகிறது, ஏன், அவளே அந்த வகுப்பு மாணவியாக வீட்டிலிருந்தபடியே மீண்டும் படிக்கவும் முடிகிறது! அதனாலேயே தன் குழந்தைகளுக்கு அவரவர் வகுப்புக்கு ஏற்றபடி பாடம் சொல்லித்தரவும் முடிகிறது.
இந்த உண்மையைப் பலகாலமாக உணராததால்தான் ‘பெண்பிள்ளைக்குப் படிப்பு எதற்கு?’ என்று அவர்களுடைய அறிவாற்றலை சமையலறையிலும், பிள்ளை பெற்றுக் கொடுப்பதிலும், வீட்டு வேலைகளைச் செய்வதிலுமாகத் தொலைத்தார்கள். ஆனால், இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால், அவர்களுடைய அறிவுத்திறன் வீணாகிவிடக் கூடாது என்பதையும், அதனால் அவர்களுக்கும் கல்வி அவசியம் என்பதையும் உணர்ந்தார்கள். அதனாலேயே பெண்களுக்கான தனி பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வேலைவாய்ப்புகள் என்று தோன்றின.
ஆனால் இந்த முன்னேற்றம் நகர்ப்புறத்தில்தான் பெருமளவில் காணப்பட்டது என்பதும் உண்மைதான். இந்தியாவைப் பொறுத்தவரை எல்லா மாநிலத்திலும், எல்லா கிராமங்களிலும் பெண்கள் கல்வியறிவு படைத்தவர்களாக விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் மத்திய அரசால் 'கற்கும் பாரதம்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் இலக்கை எட்டி தமிழகம் சாதனை படைத்திருப்பது பெருமைக்குரிய தகவலாகும்.
பெண்கள் எழுத்தறிவு பெற, 2009ம் ஆண்டு ‘வயது வந்தோருக்கான கல்வித் திட்டம்’ அமலானது. இந்தத் திட்டம் ‘கற்கும் பாரதம்’ என்ற பெயரில் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஐம்பது சதவிகிதத்திற்கும் குறைவாக எழுத்தறிவு பெற்ற பெண்களைக் கொண்ட சேலம், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் கண்டறியப்பட்டன. இம்மாநிலங்களில் 17.46 லட்சம் பெண்கள் எழுத்தறிவில்லாதவர்கள் எனத் தெரிய வந்தது.
‘கற்கும் பாரதம்’ திட்டப்படி 3152 மையங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில் 6304 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. 2011ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் 2,67,555 பெண்கள் எழுத்தறிவு பெற்றார்கள். சேலம் மாவட்டத்தில் எழுத்தறிவில்லாதவர்களாக இருந்த 3.53 லட்சம் என்ற எண்ணிக்கை, இப்போது 3.64 லட்சம் பெண்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் என்று மாறியிருப்பது இந்தத் திட்டத்தின் வெற்றி என்றே கூறலாம்.
எழுத்தறிவு பெற விரும்பும் பெண்களை மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, அவர்களுக்கு சமநிலை கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு தமிழ், கணிதம், சூழ்நிலையியல், கணினி அறிவியல் ஆகிய புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டம் மூலமாக விரைவில் அனைத்து இந்தியப் பெண்களுக்கும் எழுத்தறிவித்தல் பொதுவுடைமையாக்கப்படும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது. அதனால் இந்தியாவின் ஒவ்வொரு குடும்பமும் கல்வியறிவு கொண்ட பெண்களைக் கொண்டிருக்கும், அவர்களால் வீடும், நாடும் வளம் பெறும் என்ற நம்பிக்கை வலுப்பெறுகிறது.