

அந்தக் காவல் நிலையமே அல்லோகலப்பட்டது! இரண்டு, மூன்று நாட்களாகவே அங்குள்ள போலீஸ் ஆபீசர்கள் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் சரி செய்து வைத்திருந்தனர்! அவர் வந்ததும் ஃபைலைக் கேட்பாரா? துப்பாக்கி வேண்டுமென்பாரா? லத்திகள் ஐந்தாறு ரெடியா என்பாரா? எதைக் கேட்பார்? என்று அவர்களே ஒரு விவாத மேடை வைத்து, முடிவாக எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருப்பது என்று முடிவு செய்து அதன்படியே எல்லாவற்றையும் ரெடி செய்து விட்டனர்.
கொடூரமாக ஒரு பருவப் பெண் கொலை செய்யப்பட்டதையும், கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திண்டாடுவதையும், பத்திரிகைகள் பத்திபத்தியாக எழுதி ஓய்ந்து விட்டன! சேனல்கள் ஒவ்வொரு நாளும் அதனைத் தங்கள் திரைகளில் காட்டி, காவல் துறையின் கையாலாகாத்தனமா?என்று கேள்விகளை எழுப்பி, அது சம்பந்தமான கலந்துரையாடல்களைத் தங்கள் சேனல்களில் பிரபலப்படுத்திக் கொண்டிருந்தன!
கைதான எட்டுப் பேரில் யார் கொலையாளி என்பதை உறுதிப்படுத்த முடியாமல் அவர்கள் சோர்ந்து போய் விட்டனர். என்னென்னவோ டெஸ்டுகள் செய்தும், இவன்தான் கொலையாளி என்று அவர்களால் இறுதியாக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் அந்தப் பகுதியின் காவல்துறை உயரதிகாரி தமிழகக் காவல்துறையின் உதவியைக் கோரினார்! தமிழகக் காவல் துறையும் உடனடியாக ஒத்துக் கொண்டு, ஒருவரை அனுப்பவும் செய்தது.
ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து போலீசுக்கு அடுத்தபடியாக உயர் இடத்தில் இருந்தது தமிழ் நாட்டுப் போலீசல்லவா! அந்த லெகசி திரும்புவதாக நினைத்துத் தமிழக உயர் போலீஸ் அதிகாரி சந்தோஷப்பட்டே, ஒருவரை அனுப்ப ஒத்துக் கொண்டார்!அன்புக்கரசன் காரை விட்டு இறங்கியதும் அந்த நிலையத்தில் உள்ளோருடன் உயர் அதிகாரிகளும் சேர்ந்து வரவேற்றனர்.
வயதான இரு போலீஸ்காரர்கள், "நம்ம வயசில இருப்பாருன்னு பார்த்தா… இப்படி நாற்பது வயசுக்காரரா இருக்காரே! அனுபவம் கொறைஞ்ச இவரால கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடியுமா? ம்..! ம்..! பார்க்கலாம்!" என்றபடி மற்றவர்களுடன் சேர்ந்து அன்புக்கரசனிடம் கை குலுக்கினர்.
இன்ஸ்பெக்டர், “சார்! இவர்களுடைய பழைய ரெகார்ட்ஸ், லோடு செய்யப்பட்ட பிஸ்டல்கள், தயார் செய்யப்பட்ட லத்திகள் எல்லாம் ரெடியா இருக்கு சார்! அந்த ரூம்ல தான் அந்த எட்டு பேரும் இருக்காங்க! நீங்க விசாரணையை ஆரம்பிக்கலாம்!” என்றவர், ”வேறு ஏதும் தேவையான்னும் சொல்லுங்க! நொடில ரெடி பண்ணிடலாம்!” என்று மேலும் கூற, அன்புக்கரசனோ மெல்லச் சிரித்தபடி, ”அந்த எட்டு பேர்ல எத்தனை பேர் ஸ்மோக் பண்ணுவாங்க? ஸ்மோக்கர் யாராவது இருக்காங்களா? அந்த விபரம் உங்ககிட்ட இருக்கில்ல…” என்றதும், ”எல்லோரும் புகை பிடிப்பாங்கன்னுதான் நெனக்கிறேன்! இதோ..! ஒரு நிமிஷத்தில வெரிஃபை பண்ணிச் சொல்லிடறேன்!” சொல்லிவிட்டு, எஸ்.ஐ. மற்றும் காவலர் இருவர் பின்தொடர உள்ளே சென்றார்.
திரும்பி வந்தவர், ”சார்! எல்லோரும் ஸ்மோக் பண்ணுவாங்களாம் சார்!” என்றார்.
“ஓகே! குட்! நம்ம ஜாப் ஈசிதான்!” என்றபடி உள்ளே சென்றார் அன்புக்கரசன்!
எல்லோரும் ஆவலுடன் என்ன செய்து, எப்படிக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கப் போகிறார் என்று காத்திருந்தனர். குற்றவாளிகளும் உண்மையை வரவழைக்க, சித்திரவதைகள் எதையும் செய்வாரோ என்று பயந்திருந்தனர்.
சிரித்தபடி, தன் ப்ரீஃப் கேசைத் திறந்து, உயர் ரக சிகரெட் பாக்கட்டை எடுத்தவர். ஒவ்வொருவரும் தனக்கு எதிரில் தனித்தனியாக வந்து அமர்ந்து, ஒரு சிகரெட்டை எடுத்துப்பற்ற வைத்தபடி என்னிடம் சில நிமிடங்கள் பேசிச் செல்லலாம் என்றார். காவல் துறையினர் மட்டுமல்லாது குற்றஞ்சுமத்தப்பட்டு அங்கு உட்கார்ந்திருந்த எட்டுப் பேருங்கூட ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர். ஓர் அரை மணி நேரம் சென்றிருக்கும். அன்புக்கரசன் சரியான கொலையாளியை அடையாளங் கண்டு இன்ஸ்பெக்டரிடம் சொல்ல, இன்ஸ்பெக்டரோ ஆச்சரியத்துடன் அன்புக்கரசன் காட்டிய ஆளை உரிய விதத்தில் விசாரிக்க, அவனும் குற்றத்தை ஒத்துக் கொண்டான்!
கார் ஏர்போர்ட் நோக்கிச் செல்கையில், உடன் வழியனுப்ப வந்த இன்ஸ்பெக்டர், “எப்படி சார் கண்டு பிடிச்சீங்க?” என்று ஆச்சரியத்துடன் கேட்க, ”ரொம்ப சிம்பிள் சார்! குற்றவாளி சிகரெட்டை எடுப்பது, பற்ற வைப்பது எல்லாவற்றையும் உற்று நோக்க வேண்டும். கைகளில், விரல்களில் அவனையும் மீறி நடுக்கம் இருக்கும். கண்களில் பயம் இருக்கும். இவற்றைச் சரியாகக் கவனித்துக் கணித்தால் போதும்!”
அன்புக்கரசன் ஏர்போர்ட்டில் இறங்கியதும் அவர்கள் அடித்த சல்யூட்டில் அதிக மரியாதையும், பெருமிதமான நன்றியுணர்வும் இருந்ததை, அன்புக்கரசனால் உணர முடிந்தது! பாடி லாங்க்வேஜ் அறிந்த அன்புக்கரசனால் அதைக் கண்டுபிடுக்க முடியாதா என்ன?