

சரியாக 6.05 காலை ...
தொலைபேசியில் அழைப்பு ....
அழைத்தது வங்கியில் இருந்து 10 வருடங்களுக்கு முன்பு மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
வணக்கம் சார் சொல்லுங்க!
"செல்வராஜீ ! நம்ப 'கார்த்திக்கு' வங்கியில் இருந்து கடிதம் வந்திருக்கிறது. அவன் வாங்கிய வீட்டுக் கடன் பத்திரத்தை அவனிடம் ஒப்படைக்கவும். மேலும் அதில் உள்ள நிலுவை தொகை எல்லாம் சரி செய்யப்பட்டு மேலும் ₹1.95 லட்சம் அவனுக்கு வரையோலையாக இன்று கொடுக்க உள்ளார்கள்."
"சார் ரொம்ப நன்றி ! நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க!"
"நான் என்ன செய்து விட்டேன் ! எல்லாம் அவன் செயல்."
"அவன் என்னை ஆட்டிவித்து செய்யச் சொன்னான்" என்று சொல்லி பேச ஆரம்பித்தார்.
"மேலிடத்தில் முறையிட்டேன். அவர்கள் கார்த்திக்கின் நடத்தை மற்றும் செயல்பாடுகள் திருப்தியாக இருந்ததால் இன்றே வங்கிக்கு வரச் சொல்லி கடன் விடுப்பு கடிதம் மற்றும் மூல பத்திரத்தை வாங்கிச் செல்லுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்..." என்று மேலும் விளக்கினார்.
"ஆட்டிவிப்பது 'அவனாக' இருந்தாலும், அதற்கு ஒரு மனம் வேண்டும்," என்று நான் அவரிடம் சொல்ல ....
கிச்சாவின் (கிருஷ்ணமூர்த்தி) உற்சாகம் என்னை பரவசப்படுத்தியது.
பிறருக்கு உதவி செய்யும்போது; அது நடந்து நல்லபடியாக நிறைவேறும் போது ஏற்படக்கூடிய அந்த 'ஆத்ம திருப்தியை' இன்று கிருஷ்ணமூர்த்தியும் அவர் மூலம் நானும் சேர்ந்து கொண்டோம்.
உண்மையில் செயல்படுவது தான் தர்மம் .
'உண்மை' தர்மத்தின் பக்கம் இருக்கும் போது 'காலமும், இடமும் ' ஒன்றாக கைகூடும்.
அந்த கர்மாவை ஏற்று நடத்திய கிருஷ்ணமூர்த்தி ஒரு கர்மவாதி.
ஒரு குற்றவாளி விடுதலை ஆகலாம்; ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது.
சந்தேகம் என்பது மனித இயல்பு. அது ஒரு நிர்வாகத்திடம் எப்போதும் இருக்க வேண்டும்.
இதை புரிந்து கொண்டு நிர்வாகத்திடம் பொறுமையாக, நிதானமாக பேசி தெளிவுபடுத்த நல்ல சிந்தனை கொண்ட லட்சியவாதி - கிட்சா மாதிரி ஆத்மாக்கள் எப்போதும் இந்த சமுதாயத்திற்கு தேவை.