செங்கையின் அன்னை கொளவாய் ஏரியின் கண்ணீர்... ஏன் இந்த அவலம்?

ஒரு அழகான நதிக்கரை நாகரிகம் எப்படி நகரமயமாக்கலால் சிதைந்து போகிறது என்பதை இந்த வரிகள் மிக ஆழமாகப் பதிவு செய்கின்றன.
chengalpattu Kolavai Lake
chengalpattu Kolavai Lakeimage credit-Wikipedia
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

அப்போதெல்லாம் செங்கல்பட்டுன்னு சொன்னா ஞாபகத்துக்கு பட்டுன்னு வருவது கொளவாய் ஏரி தான். ஒரு அறுபது வருடங்கள் முன்பு இந்த கொளவாய் ஏரி வங்காள விரிகுடா போல காட்சி அளித்தது என்றால் நம்பமாட்டீர்கள். தாமரையும். அல்லியும் பூத்து கண்களுக்கு விருந்தாய் இருக்கும். கொக்குகள், மீன்களுக்காக ஒற்றைக்காலில் தவம் கிடக்கும். வாத்துகள் தூக்கத்தில் தங்களை மறந்து மிதந்து கொண்டிருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய சிறிய படகுகளை நிறுத்தி மீனவர்கள் வலைகளை விரித்து மீன் வறுவலை சுவைப்பது போல் கனவு கண்டபடி கண்மூடி காத்திருப்பார்கள்.

அப்போதெல்லாம் செங்கல்பட்டுவாசிகள் சூரிய உதயத்தை காண மெரினா கடற்கரைக்கோ, எலியட் பீச்சுக்கோபோக வேண்டாம். செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு அதிகாலை வந்தாலே போதும்.

மணி ஐந்தரைக்கெல்லாம் கீழ்வானம் மிதக்கும், சிவப்பு கம்பளம் தண்ணீரின் மேல் விரிக்கும். சூரியன் வலது காலை எடுத்து வைக்கும்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; செங்கணான் ஏரி!
chengalpattu Kolavai Lake

வைரம் பதித்த தங்கத்தட்டினை போல ஜொலிக்கும். தன் பஞ்சவர்ண விரல்களால் சூரியனார் வானை அளப்பார். அப்போதைய இரண்டாம் பிளாட்பாரத்து பெஞ்சில் உட்கார்ந்திருந்தால் போதும். குளிர் காற்று முகத்தில் வந்து மெதுவாக வருடும்.

பரீட்சைக்கு தயார் செய்ய வேண்டுமென்றால் இரண்டாம் பிளாட்பார பெஞ்சில் போய் அமர்வேன். புத்தகம் கையிலே, கண்களோ ஏரி மேல், என்ற கணக்காய் ஏதோ நேரத்தை கழிப்பேன். பின்பு VLR ஸ்டாலில் காபியும் டிபனும் சாப்பிடுவேன். ரெயிலை பிடிப்பேன்.

அன்றைக்கு செங்கல்பட்டு டவுன் குடித்தது கொளவாய் ஏரி நீர். சும்மா வெல்லம் கரைத்தது போல இனிக்கும். செங்கல்பட்டு அருகே இருக்கும் சிறு ஒற்றை தெரு (அப்போது) கிராமம்தான் புலிப்பாக்கம். அங்கு என் சித்தி வசித்து வந்ததால் அடிக்கடி அங்கு போய் விடுவேன். இந்த வீட்டிற்கு புழக்கடையின் பின்புறம் தான் அன்று இருந்தது கொளவாய் கால்வாய்.

அதில்தான் ஸ்நானம், அதில் தான் துணி துவைப்பு. அப்போது போட்ட குளியலை இன்று வரை நான் போட்டதில்லை. அது ஒரு குளிர்பான குளியல்.

இப்போது இந்த ஏரி இருக்கும் அவல நிலையை நினைக்கையில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பாடத் தோன்றுகிறது. ஒருபுறம் பெருநகராகி கொண்டிருக்கிறது செங்கை. மறுபுறம் மகேந்திர சிட்டி ஊதி கொண்டிருக்கும் சங்கால் அவதிபட்டு கொண்டிருக்கிறது கொளவாய் ஏரி... இரு தலை கொள்ளி எறும்பு போல!

அன்று கொளவாயின் அக்கரையில் தெரிந்தது ஒரு குன்று. அதுதான் திருக்கழுகு குன்று. இன்று மகேந்திர சிட்டி கட்டிடங்கள் அதை மறைத்து கொண்டு கூட்டமாக நின்று பயமுறுத்துகின்றன. ரயில் நிலையம் விரிவாகி கொண்டு போகிறது. பிளாட்பாரம் 5, 6 என்று.

அன்று செங்கை மக்கள் ஆராதித்தனர் கொளவாய் ஏரியை அன்னையை போல. எனக்கு புரியவில்லை, இன்று இப்படி ஆக்கிவிட இந்த ஏரியை எப்படி ஆமோதித்தார்கள்?.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் ஏரி மாவட்டம்: நைனிடால் - ஒரு முழுமையான பயண வழிகாட்டி!
chengalpattu Kolavai Lake

பார்த்திருக்கிறேன் ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு ஏரிகளை, ஆனால் என் மனதில் முதலிடம் வகிப்பது இந்த கொளவாய் ஏரி தான்...

logo
Kalki Online
kalkionline.com