
கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவது சமீப காலமாகக் கூடி வருவது ஏன்?
இப்போது நடந்துள்ள ஒரு கட்சிக்கூட்டத்தில் ஒரு நடிகரைப் பார்க்க பொது வெளியில் நிகழ்ந்த கூட்டத்தில் எப்படி இவ்விபத்து ஏற்பட்டது?
அரசியல் தாண்டி சமூகமாக நாம் எங்கே தவறு இழைக்கிறோம் என்று உற்று நோக்குவது மேலும் இவை நிகழாமல் தடுக்கவும், முன்னேறவும் வழி வகுக்கக் கூடும்!
முன்பெல்லாம் கூட்ட நெரிசல் சமயம் சார்ந்த நிகழ்வுகளில் நடக்கும். இந்தியாவில் ஹிந்து சடங்குகளில் கும்பமேளா, மகாமகம் மற்றும் புனித இடங்களில் ஒரே சமயத்தில் குறிப்பிட்ட நாட்களில் மக்கள் கூடும் போது ஏற்படும். முஸ்லிம் தொழுகை இடமான மெக்காவிலும் இத்தகைய துயர சம்பவங்கள் நடந்துள்ளன. ஆன்மீக கூடுதல்களில் பெரும்பாலும் வயதானவர்கள் நகரமுடியாமல் சிக்கித் தவித்து மரணத்தில் முடிவது துயரமானது. இயற்கை பேரிடர்களில் விபத்துகளில் பலரின் உயிரிழப்பு நேர்வதும் சோகத்தை ஏற்படுத்தும்.
சமீப காலங்களில் இயல்பாக நடந்தேற வேண்டிய கேளிக்கை வெற்றிக்கொண்டாட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களில் ஏற்படுவது ஏன், எப்படி? பெங்களூரில் நடந்த IPL கோப்பையை வென்ற பெங்களூர் அணிக்கு நடந்த பாராட்டு விழாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அது ஒரு விளையாட்டு அரங்கம் அதன் கொள்ளளவைத் தாண்டி பல ஆயிரம் பேர்கள் கூடும்போது வெற்றிக்களிப்பில் சற்றே குதூகலம் கூடும் போது நிகழ்ந்தது. இப்போது ஒரு நடிகரின் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த இரண்டு சம்பவங்களிலும் சிறுவர்களும், இளைஞர்களும் பெண்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டோ, சினிமாவோ மக்கள் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்திக்கொண்ட வழிமுறைகள். அவற்றில் நாம் பார்வையாளர்கள் மட்டுமே. கண்டு களித்து சற்றே பேசி சிலாகித்துக் கடந்து செல்ல வேண்டிய நிகழ்வுகள். இவற்றை மோகமும் வெறியும் கொண்டு அணுகவேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?
புதிய கண்டுபிடிப்புகள், முன்பு கணிப்பொறியும் இப்போது AIயும் நம் வேலைகளை வாழ்வைப் பறித்துவிடும் என்று கவலைப்படும் நாம், இந்த கலாச்சார சீரழிவான போக்கில் உயிர்களை இழப்பதை எப்படி சீரணிக்கிறோம் அல்லது தீவிரம் உணராமல் இருக்கிறோம்?
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இளைஞர்களாக இருந்தாலும் பல மணி நேரம் முன்பே விழா அல்லது நிகழ்வு நடக்கும் இடத்தில் கூடத்தொடங்கியதும், நிகழ்வின் போது நெருங்கி முந்திசெல்லும் போது, நெரிசல் ஏற்பட்தால் நடந்த சோகச்சம்பவங்கள்.
ஒரு பொழுது போக்குக்கு இவ்வளவு நேரமும் வெறியும் கொள்ள வேண்டிய அவசியம் தான் என்ன? நமது வாழ்வில் அவை ஏற்படுத்த போகும் மேன்மையோ பயனோ என்ன? யாருக்காக எதற்காக இந்த தேவையற்ற தியாகம் அல்லது விரயம்? இழப்பீடுகளோ வருத்தம் மற்றும் கண்டனம் தெரிவிப்பதோ இழந்த உயிர்களையும் துயரத்தையும் ஈடுகட்டுமா?
இதனை வளர்ந்த, படித்த சமூகம் சிந்திக்க வேண்டாமா? அப்படி மணிக்கணக்கில் காத்திருந்து நெரிசலில் சிக்கி நாம் நெருங்கி பார்த்தல் மற்றும் தொட்டுவிடுதலில் நாம் எப்படி மேம்பட்டு நிற்கப்போகிறோம்? என்ன கதி மோட்சம் இதில் நமக்கு கிட்டிவிட போகிறது?
சமீபத்தில் மலைப்பிரதேச சுற்றலா சென்ற போது கார் ஓட்டுனர் ஒரு தகவல் சொன்னார். முன்பெல்லாம் சீசன் மற்றும் நீண்ட விடுமுறை காலங்களில் தான் இங்கெல்லாம் கூட்டம் வரும். கோவிட் தொற்றுக்கு பிறகு சனி ஞாயிறுகளில் கூட சீசன் இல்லாத போதும் கூட்டமும் நெரிசலும் ஏற்படுகிறது என்றார்.
மக்கள் எதைவிட்டோ எப்படியாவது தப்பித்து செல்ல எத்தனிக்கிறார்களா? இருப்பதற்குள் அனுபவித்து விட பிரயாசை படுகிறார்களா? எதனையும் நேரம் காலம் என்று காரணம் காட்டி ஒத்திப்போடாமல் அவ்வப்போதுதே அனுபவித்து விட துடிக்கிறார்களா?
வாழ்க்கை அவ்வளவு நிச்சயமற்றதும், இப்போதே வாழ்ந்து விட வேண்டும் என்கிற துடிப்பையும் இந்த பெருந்தொற்று கற்றுகொடுத்து சென்று விட்டதா?
இந்த மோகம் என்ற சாபத்திலிருந்து மீள என்ன வழி? எப்போது நிகழும் இந்த சாபவிமோசனம்?
மற்றவர்களின் பெருமைக்காகவோ அல்லது சமூக வலைத்தள மோகங்களில் நம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கோ இப்படிப்பட்ட நிகழ்வுகள் அவசியம் அற்றது.
இவை கேளிக்கைகள் தான் இவற்றுக்கு வாழ்வில் மிக குறுகிய நேரமும் காலமும் கவனத்தை செலுத்தினால் போதும் என்கிற மனநிலை வளர்வது மிகவும் அவசியம். அதனை மீறி நாம் செல்ல வேண்டிய வாழ வேண்டிய வாழ்வும் நோக்கமும் நிறைய உள்ளன என்ற தெளிவு பிறக்கவேண்டும். எங்களது மூச்சை நிறுத்தாமல் இந்த மோகத்தை வீழ்த்திவிடு பராசக்தியே!