ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே இரவில் ஒரு கிராமத்தில் உள்ள மொத்த மக்களும் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் சென்ற பிறகு யாரும் அந்த கிராமத்தில் பல நூற்றாண்டுகளாக குடியேறவில்லை. அந்த கிராமத்தில் பேய், பிசாசு மற்றும் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த கிராமமே குறிப்பிட்ட மக்களின் சாபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த இடம் இப்போதும் மர்மம் மற்றும் திகில் நிறைந்த இடமாக உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் இந்தியாவின் வரலாற்றுக்கும், வளமான கலாச்சாரத்திற்கும் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது போல இந்த மாநிலம் எப்போதும் வித்தியாசமான ஆன்மீக அனுபவத்திற்கும் திகில் நிறைந்த இடங்களுக்கும் உங்களை கொண்டு செல்லும். ராஜஸ்தானுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ராஜஸ்தானின் கலாச்சாரம் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானது. இம் மாநிலத்தின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் குல்தாரா என்னும் மர்மமான கிராமத்தை பற்றி தான் பார்க்க உள்ளோம்.
13 ஆம் நூற்றாண்டில் குல்தாரா கிராமம் , நிர்வாகத் திறன் மற்றும் நீர் மேலாண்மையில் ஆற்றல் கொண்ட பாலிவால் பிராமணர்களால் நிறுவப்பட்டது. குல்தாரா கிராமத்தை சுற்றியுள்ள 84 கிராமங்கள் இவர்களின் கட்டுப்பாட்டில் செழிப்போடு இருந்தன. இந்த கிராமங்கள் செழிப்பிற்கு முக்கிய காரணம் பாலிவால் பிராமணர்களின் நீர் மேலாண்மை அறிவும் திறனும் தான். புதிதாக ஏரிகள், ஓடைகள், கிணறுகளை அமைத்து விவசாயத்தை மேம்படுத்தினார்கள். வறண்ட பாலைவன பூமியும் இவர்களின் திறமையால் விவசாயம் செழித்த பூமியானது.
ஜெய்சால்மர் அரசரின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த குல்தாரா கிராமம் செழிப்போடும் மகிழ்ச்சியோடும் இருந்தது. இங்குள்ள மக்கள் பொருளாதார ரீதியில் உயர்ந்தவர்களாகவும் தன்னிறைவு பெற்றவர்களாகவும் இருந்தனர். இவர்கள் தங்களை சுற்றி இருந்த 84 கிராம மக்களையும் செழிப்பொடும் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்க காரணமாக இருந்தனர். குல்தாரா கிராமம் 5000 மக்கள் தொகையோடு பெரிய கிராமமாக இருந்தது. இதனால் சுற்று பகுதிகளின் பொருளாதார மண்டலமாகவும் இருந்தது.
குல்தாராவின் மகிழ்ச்சியான நிலைக்கு பெரும் ஆபத்தாக புதிதாக நியமிக்கப் பட்ட திவான் சலாம் சிங் இருந்தான். சலாம் சிங்கிற்கு குல்தாரா கிராமப் பெண்ணின் மீது ஆசை வந்தது. அந்த பெண் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். சலாம் சிங்கிற்கு ஊர் பகுதியில் நல்ல பெயர் இல்லை. மக்கள் அவனை கண்டு அச்சத்தில் இருந்தார்கள்.
அந்த பெண் வீட்டார்கள் திருமணத்திற்கு சம்மதிக்காவிட்டால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று பயந்தனர். அன்று இரவே கிராம மக்கள் கூடி ஊரை விட்டு செல்வதாக முடிவு செய்தனர். 5000 கிராம மக்களும் ஒன்று கூடி பேசி ஒரே இரவில் ஊரை காலி செய்து சென்று விட்டனர். இன்று வரையிலும் அவர்கள் எங்கு சென்றனர் என்று தெரியவில்லை. அவர்கள் சென்ற பின் ஊரும் சுற்றுப் புறங்களும் வறண்டு பாலைவனமாகியது.
கிராமத்தை காலி செய்யும் போது "இந்த கிராமத்தில் ஒருபோதும் மக்கள் வசிக்க மாட்டார்கள்" என்று பிராமணர்கள் சாபம் விட்டனர். காலப்போக்கில் குல்தாராவைச் சுற்றியுள்ள கிராமங்களில் மீண்டும் மக்கள் குடியேறினர். ஆனாலும் குல்தாரா கிராமத்தில் குடியேற யாரும் விரும்பவில்லை.
கிராமத்தில் இடிபாடுகளில் உள்ள வினோதங்கள், சத்தங்கள், திகில் கதைகளை கேட்டு இந்த கிராமத்தில் இரவில் தங்க பலரும் அச்சப்படுகின்றனர். இப்போது இந்த கிராமம் இந்திய தொல்லியல் துறையின் கீழ் வருகிறது. தினமும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு வருகின்றனர். இந்த மர்மத்தை பற்றி சில திரைப்படங்களும் எடுத்துள்ளனர். இந்த கிராமத்தில் 6 மணிக்கு மேல் யாருக்கும் அனுமதி இல்லை.