

அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரும் தேடும் இந்தத் திரை உலகத்தில், தங்களது அசாத்தியத் திறமையால் காலத்தைத் தாண்டி நிலைத்து நிற்கும் இரு ஆளுமைகளைப் பற்றியது இக்கட்டுரை:
ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடாவிட்டாலும், இவர்களின் ஒற்றைப் பாடல் எப்படி சரித்திரத்தில் இடம்பிடித்தது? இவர்களைத் தேடி வந்த அந்தத் திரை உலகக் "கொடுப்பினை"யின் ரகசியம் என்ன?
எதிர்பாராத அதிர்ஷடங்கள் சிலரை ஆட்கொள்கின்றபோது அவர்களைக் ‘கொடுத்து வைத்தவர்கள்’ என்பார்கள். நல்லது நடந்தால் கொடுப்பினை கொண்டவர்கள் என்றும், அவ்வாறு நடக்காதபோது, அவர்களைக் கொடுப்பினை அற்றவர்கள் என்றும் கூறுவது நடைமுறையில் உள்ள வழக்கமே. முன்னர் நாம் செய்த நன்மைகளால் நமக்கு ஏற்படும், நாம் எதிர்பார்க்காத நன்மைகளைக் கொடுப்பினை என்று அழைக்கலாம்.
ஓடி ஓடி உழைத்து ஓடாய்த் தேய்ந்தாலும் சிலரால் தங்கள் குறிக்கோளின் அருகில் கூடச் செல்ல முடிவதில்லை. ஆனால் பரமபத விளையாட்டில் ஏணியிலேயே ஏறும் வாய்ப்பைப் பெறும் சிலர் விரைவிலேயே உயரங்களைத் தொட்டு விடுகின்றனர். பலரோ பாம்பின் மீது பட்டு சறுக்கி விடுகின்றனர்.
ஒவ்வொரு துறையிலும் உதிரத்தை வியர்வையாக்கி உழைக்கும் பலபேர் இருந்தாலும் எல்லோராலும் வெற்றிக்கனியை அவ்வளவு எளிதில் ருசிக்க முடிவதில்லை. இன்றைய தினத்தில் மிக எளிதாகப் பேரும், புகழும், பணமும் தரும் ஒரு துறை, திரைப்படத் துறையாகும். அதனால்தான் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் என்று அனைவருமே ஒரு திரைப்படத்திலாவது முகத்தைக் காட்டிவிட முனைகிறார்கள்.
அவ்வளவு ஏன்? இந்நாளைய நம் தமிழக முதல்வர் முன்னாள் திரைப்படக் கதாநாயகர்தானே! இந்த சினிமா துறையில்தான் ஏகப்பட்ட பிரிவுகளும், அவற்றில் ஜாம்பவன்களாகிப் பிரகாசிக்கும் வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன. இயக்குனர் தொடங்கி, நடிகர், பாடகர், ஒளிப்பதிவாளர் என்றும், வெவ்வேறு துறைகளின் பயிற்சியாளர்கள் என்றும் பலரும் தங்கள் திறமைகளைக் காட்டும் ஓரிடமாக இது அமைந்துள்ளது.
இயக்குனர் நடிகராவதும், நடிகர் இயக்குனராவதும், பின்னணிப் பாடகர் நடிகராவதும், ஸ்டண்ட் நடிப்புப் பயிற்சியாளர் கதாநாயகராக நடிப்பதும் இந்தத் துறையிலேயே அதிகம். தங்கள் பன்முகத் திறமையைக் காட்ட சிறந்த துறை இதுவே. சிரிப்பு நடிகர் குணசித்திர நடிகராகிக் கதாநாயகராகப் பரிணமிப்பதும், கதாநாயகரே சிரிப்பில் கவனம் செலுத்தி ரசிகர்களை மகிழ்விப்பதும் இங்கு உண்டு.
அந்த விதத்தில் இத்துறை மூலம் கொடுப்பினை பெற்று, என்றும் நம் மனதில் நிழலாடும் இறவாப் புகழ் கொண்ட இருவரைப் பற்றி இங்கு காண்போமே. ஒருவர், தான் பாடிய பாடலால் நம் மனதைக் கவர்ந்த ஒரு பாடகர். இவர் நடிக்கவும் செய்தவர். மற்றொருவர் கவிஞர். இவர் எழுதிய பாடலொன்று என்றும் மறக்க முடியாதது!
1950 களில் தொடங்கி 1970 கள் வரை பல திரைப்படங்களில் இவர் பாடியிருந்தாலும், மொத்தமாகப் பாடிய பாடல்களின் எண்ணிக்கை கூடச் சரியாகத் தெரியவில்லை. அதுகுறித்த தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் சில பிரபலங்களைப் போல் இவர் ஆயிரக் கணக்கில் பாடல்கள் பாடியதாகத் தெரியவில்லை.
அக்காலத்தில் பிரபல கதாநாயகியாகத் திகழ்ந்தவரைக் கரம் பிடித்த இவர், 2020 ல் கொரோனாவின் பிடியில் சிக்கி இறக்கும் வரை அவருடன் நிறைவாக வாழ்ந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பெண் குரலில் பாடி, சில படங்களிலும் நடித்த இவர் சின்னத்திரை சீரியல்களிலும் பங்கேற்றார்.
காதல்தான் இந்த உலகத்தின் அச்சாணி. காதலை மையமாகக் கொண்டே இந்த உலக இயக்கம் நடைபெறுகிறது.
காதலர்கள் தோற்கலாம்; ஆனால் காதல் ஒரு காலும் தோற்பதில்லை. தோற்றவர்களின் தெய்வீகக்காதல் சரித்திரமாகிச் சாகா இடம் பிடித்து விடுகிறது.
உண்மைக் காதல், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை; சாதி, மதம் பார்ப்பதில்லை; நாடு, நகரம் என்பதையெல்லாம் தாண்டி, ஆறு என்றும், ஊர் என்றும் பாராது ஓடிய நேபாள வெள்ளம் போன்றது அது! தனக்குக் கிடைக்காவிட்டாலும், தன் காதலி எங்காவது, எவருடனாவது, எப்படியேனும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்பதுதானே உண்மைக் காதலின் இலக்கணம்.
இவர் பாடிய அந்த ஒரு பாடலே வரலாற்றில் இவருக்கு வலுவான இடத்தைப் பெற்றுத் தந்து விட்டது. எம்.என்.ராஜம் அவர்களின் கணவர் ஏ.எல்.ராகவன்தான் கொடுப்பினை பெற்ற அந்தப் பாடகர்!
(1933-2020) ‘அங்கமுத்து தங்கமுத்து’, ’என்ன வேகம் நில்லு பாமா’, ’சீட்டுக்கட்டு ராஜா’ போன்ற பாடல்களின் மூலமும் இவர் பிரபலமானார் என்றாலும் கிரீடமாக ஜொலிக்கும் பாடல் இதுதான்!
“எங்கிருந்தாலும் வாழ்க!
உன் இதயம் அமைதியில் வாழ்க!
மஞ்சள் வளத்துடன் வாழ்க!
உன் மங்கலக் குங்குமம் வாழ்க!…
வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்!
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க!
தூய காதல் உள்ளவரை துயரம் நிறைந்த இவ்வுலகில் இந்தப் பாடலின் குரல் காற்றில் கலந்தே கிடக்கும்!
35 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கவிஞர் இவர்! (1936-1971)தெற்கே திருநெல்வேலியில் பிறந்து வடக்கிலுள்ள சென்னையைத் தொட்டவர்.
‘தண்ணிலவு தேனிறைக்க…’ (படித்தால் மட்டும் போதுமா?) ’சித்திரப் பூ விழி வாசலிலே’ (இதயத்தில் நீ) போன்ற பாடல்களின் சொந்தக்காரர்! ஆனாலும் மணி மகுடமாக அமைந்தது இந்தப் பாடல்தான்!
“பொறப்பதும் போறதும் இயற்கை
சிலர் புகழ்வதும் இகழ்வதும் செயற்கை
பறப்பதும் பாய்வதும் வேட்கை
பணிபுரிந்ததும் ஓய்வது வாழ்க்கை!…
தாயணிந்து மகிழ்ந்ததுவும் ஒரு கயிறு
என்னைத் தாலாட்ட வந்ததுவும் ஒரு கயிறு
தென்னை பனை ஏறிடவும் ஒரு கயிறு
இன்று தூக்கிலிட வருவதும் ஒரு கயிறு!…”
அந்தக் கவிஞர் திரு மாயவநாதன்தான்! ஆயிரக் கணக்கில் அவர் பாடல்கள் எழுதவில்லை. ஆனாலும், ஆத்திரத்தில் அறிவு தடுமாறி நாம் செய்கின்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தூக்கு மேடைக்குச் செல்லும் ஒருவனின் கடைசி நேர மன நிலையையும், உயிரையே எடுக்க வரும் தூக்குக் கயிற்றின் வரலாற்றையும் நம் கண்ணே படமாகக் கொண்டு வந்து பாடம் சொல்கிறார். தூக்குக் கயிறு கலாச்சாரம் வாழும் வரை, இந்தப் பாடலைத் தூக்கிலேற்றி விட முடியாதே!
ம்! எதற்கும் கொடுப்பினை வேண்டும்!