கவிஞர் கண்ணதாசன்: காலத்தை வென்ற காவிய வரிகளின் பின்னணியும் சுவாரசிய உண்மைகளும்!

காலத்தால் அழியாத கண்ணதாசன் பாடல்களின் ரகசியங்களும், இலக்கிய நயமும், இதுவரை அறியாத பின்னணி தகவல்களும்!
Kannadasan | கவிஞர் கண்ணதாசன்
Kannadasan | கவிஞர் கண்ணதாசன்Img Credit: Chris Nallaratnam

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on
Kalki Strip
Kalki Strip

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் 1927 ஆம் ஆண்டு, ஜூன் 24 ஆம் தேதி பிறந்தார். அவர் எம்மை விட்டு தனது 54 வயதில் பிரிந்திராவிட்டால், தனது 100வது பிறந்தநாளை கொண்டாடியிருப்பார்.

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். "சேரமான் காதலி” என்ற சரித்திர நாவலுக்கு 1980ல் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

கண்ணதாசன் அழகு தமிழை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தவர்.

அவர் திரையிசைப் பாடல்களில் அலங்கார வார்த்தைகளை அள்ளித்தெளித்தாலும் அவற்றை பாமரனும் புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்க வேண்டும் என்பதில் கண்ணாயிருப்பார்.

கண்ணதாசன் - எம்.எஸ்.வி.
கண்ணதாசன் - எம்.எஸ்.வி.

இதற்கு தெய்வமகன் திரைப்படப் பாடல் பதிவின்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் சான்று. M.S. விஸ்வநாதன் இசைக்கு பாடல் எழுதி முடித்து விட்டார் கவிஞர். தயாரிப்பாளர், இயக்குநர் A.C. திருலோகச்சந்தர் உட்பட எல்லோருக்கும் மிகத் திருப்தி. இப்படிப் போனது பல்லவி:

“தாமரை உயரம்

தண்ணீர் அளவு

உள்ளத்தளவே உலகளவு

காவிரி ஆறு

கரைபுரண்டாலும்

காக்கைக்கு தேவை

மூக்களவு”

அப்போது தேநீர் பரிமாறிக் கொண்டு வந்தான் ஸ்டூடியோ பையன். அவனிடம் தேனீரை வாங்கிக்கொண்டு “பையா, இப்ப நீ பாட்ட கேட்டாயில்ல…. பாட்டு எப்படி இருக்கு?” என்று கேட்டு வைத்தார் கவிஞர்.

“எனக்கு ஒண்ணும் புரியல்லீங்க - காக்கா, தண்ணி, மூக்குன்னு என்னென்னவோ வருகுது….” என்றான் பையன்.

கவிஞரின் முகம் வாட…

“விசு, மீண்டும் ஒரு டியூன் போடு” என்றார் MSVயிடம்.

விசு: “ஏன், பாட்டு நல்லாத்தானே இருக்குது. அவன் கிடக்கிறான்… சின்னப்பயல். இதையே வச்சிப்போம்.”

கவிஞர்: “விசு, இவனுங்க போல ஆளுங்களுக்குத்தானே நாம பாட்டு எழுதறம். அப்போ அவனுக்கு புரியல்லண்ணா நாம பாட்டு எழுதி என்ன பயன்?”

கவிஞரின் நிலைப்பாட்டை மாற்ற முடியுமா என்ன?

புதிய மெட்டு போடப்பட, கவிஞரின் புதிய வார்த்தைகள் வந்து வரிகளை நிரப்பிற்று! அந்தப் பாடல்தான்: "கேட்டதும் கொடுப்பவனே..."

சங்ககால இலக்கிய வர்ணனைகளை லாவகமாக திரைப் பாடல்களில் புகுத்தி மாயம் செய்தவர் கவிஞர்.

திருக்குறளின் இன்பத்துப் பால் - 1094: குறிப்பறிதலில் இப்படி சில வரிகள் வரும்:

“யான்நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்.”

விளக்கம்: நான் பார்க்கும் நேரம் நிலத்தை பார்த்தவள் பார்க்காத நேரத்தில் என்னை பார்த்து மெல்ல சிரிக்கிறாள்.

இவ்வரிகள் வாழ்கை படகு திரைப்படத்தில் இடம்பெற்ற "நேற்று வரை நீ யாரோ" பாடலின் அழகான வரிகளில் மீள் உருப் பெற்றன:

“உன்னை நான் பார்க்கும் போது

மண்ணை நீ பார்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது

என்னை நீ பார்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன?

நிலவென்ன தேய்ந்தா போகும்

புன்னகை புரிந்தால் என்ன ?

பூமுகம் சிவந்தா போகும்?”

இது போல் இன்னொரு உதாரணம்:

"தோள் கண்டார் தோளே கண்டார்" என்பது கம்பராமாயணத்தில் வரும் மிகச் சிறந்த, பிரசித்தி பெற்ற பாடலாகும். ஸ்ரீராமன் மிதிலை வீதியில் நடந்து வரும்போது, அவனது அழகில் மயங்கிய பெண்கள் அவனது மொத்த அழகையும் ரசிக்க முடியாமல், பார்த்த உறுப்பிலேயே (தோள், கை, கால்) மனதைப் பறிகொடுத்து நின்ற நிலையை கம்பர் விவரிக்கிறார்.

இதையே கவிஞர் இதயக் கமலம் திரைப்படத்தில் “தோள் கண்டேன், தோளே கண்டேன், தோளில் இரு கிளிகள் கண்டேன்” பாடலில் புகுத்தினார்.

இதையும் படியுங்கள்:

இரவில் நெடுநேரம் விழித்திருந்தால் இதழில் இருக்கும் சிவப்பு விழிக்கு இடம்மாறி விடும். விழியில் இருக்கும் வெண்மை நிறம் இதழுக்கு இடம் பெயர்ந்து விடும். இதைத்தான் கலிங்கத்துப் பரணி எனும் காவியம் “வாயின் சிவப்பை விழி வாங்க மலர்கண் வெளுப்பை வாய் வாங்க, தோயக் கலவி அமுதளிப்பீர் தூங்க கபாடம் திறமினோ” என்கிறது.

இக் காவிய வரிகளை அன்னை இல்லம் (1963) படத்தில் மிக மிக அழகாக கையாண்டிருப்பார் கவிஞர்.

அப்படத்தில் வரும் ‘மடிமீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்’ என்ற பாடலில்

“வாயின் சிவப்பு விழியிலே,

மலர்க்கண் வெளுப்பு இதழிலே,

காயும் நிலவில் மழையிலே

காலம் நடக்கும் உறவிலே”

என்று வார்த்தை ஜாலம் செய்திருப்பார்!

மெய்யியல் நூலான திருமூலரின் 'திருமந்திரத்தில்' (பாடல் 2290) வரும் மிக ஆழமான தத்துவப் பாடல் இது:

“மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை”

இது இதன் நேரடிப் பொருள்: மரத்தால் செய்யப்பட்ட யானையைப் பார்க்கும்போது, அதன் வடிவம் யானையை மட்டுமே காட்டுவதால் மரம் மறைந்துவிடுகிறது; ஆனால் மரத்தின் மீது கவனம் செலுத்தினால் யானை மறைந்து மரம் மட்டுமே தெரிகிறது.

இத்தத்துவத்தை 'பார்த்தால் பசி தீரும்' படப்பாடலில் இப்படிச் சொன்னார் கவிஞர்:

“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது

சிலை என்றால் வெறும் சிலை தான்”

இதே கருப்பொருளுடன் இன்னொரு பாடல்:

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை

என்னென்று நான் சொல்லலாகுமா?

பட்டினத்தார் பாடிய மிகப்பிரபலமான திருவிடைமருதூர் மும்மணிக்கோவை பாடலில் இடம்பெற்றுள்ளது இந்த வரிகள்:

"அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழியம் பொழுகமெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மியிருகைத்தலை மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டேபற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே"

இப்பாடலின் அர்த்தத்தை உரித்து 'பாதகாணிக்கை' படத்தில் வந்த வரிகளுக்கு போர்வையாக்கினார் கவிஞர்:

“வீடுவரை உறவு / வீதிவரை மனைவி / காடுவரை பிள்ளை/ கடைசிவரை யாரோ?”

தனது பாடல்களில் இயற்கை முரண்களுக்கு இடமளிப்பதில்லை அவர்.

தமிழில் காற்று வீசும் திசைக்கேற்ப அதற்கு பெயர் சூட்டினார்கள். வடக்கில் இருந்து வீசும் காற்றிற்கு வாடை என்றும் தெற்கில் இருந்து வீசும் காற்றிற்கு தென்றல் என்றும் கிழக்கு = கொண்டல், மேற்கு = கோடை.

கண்ணதாசன் பாடல் எழுதும் போது இதை மனதில் வைத்தே பாடல் வரிகளை எழுதினார். 'இரத்தத் திலகம்' படத்தில் இடம்பெற்ற "வாடைக் காற்றம்மா... வாடைக் காற்றம்மா" என்ற பாடல் இந்தியாவின் வடக்கில் வாழும் நாடோடி பெண் பாடுவதாக அமைந்துள்ளது.

'திருவருள் செல்வர்' படப்பாடல்: "பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்". பொதிகை மலை தென்பகுதியில் ஆனைமலைத்தொடாில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டங்களில் அமைந்துள்ளது. இப்படத்தில் பாண்டிய மன்னனின் துணைவி பாடுவதாய் இப்பாடல் அமைந்துள்ளது.

கவிஞரின் சாமர்த்தியமான தமிழ் புலமையை என்னவென்று சொல்வது!

கண்ணதாசன் - வாலி
கண்ணதாசன் - வாலி

கவிஞர் கண்ணதாசன் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த 46 திரைப்படங்களுக்கு பாடல்களை இயற்றியுள்ளார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி, கண்ணதாசன் ஆகிய மூவரில், கண்ணதாசன் எம்.ஜி.ஆரின் பல புகழ்பெற்ற வெற்றிப் படங்களுக்கு காலத்தால் அழியாத பாடல்களை எழுதியுள்ளார்.

கண்ணதாசன் - எம்.ஜி.ஆர்.
கண்ணதாசன் - எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் அவர்கள் தமது பிம்பத்தை மிக கவனமாக செதுக்கி மக்கள் முன் எப்படி தன்னை நிலைப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாய் இருப்பவர்.

இதையும் படியுங்கள்:
தமிழ் நெஞ்சங்களில் என்றும் வாழும் 'கவி ராட்சசன்': நா. முத்துக்குமாருக்கு 10ஆம் ஆண்டு புகழஞ்சலி!
Kannadasan | கவிஞர் கண்ணதாசன்

தாய்ப்பாசம், தந்தைக்கு மதிப்பு, குழந்தைகளுக்கு நற்போதனை போன்றவையும் இதில் அடங்கும். எனவே பாடல்களை எழுதிய மாத்திரத்தில் இசையமைத்து பாடிவிட முடியாது. பாடல் வரிகள் அவரின் அங்கீகாரம் பெற்ற பின்பே இசையமைப்பிற்கு செல்லும்.

'பணத்தோட்டம்' திரைப்படத்தில் இடம் பெற்ற "பேசுவது கிளியா….” பாடல். இப் பாடலை கவிஞர் எழுத, அது எம்.ஜி.ஆர் பார்வைக்கு வந்தது. படித்துப் பார்த்தார் அவர். "சேரனுக்கு உறவா" என்ற வரிகள் அவரின் மலையாள - கேரள பூர்வீகத்தை குறிப்பதாகும். அடுத்த வரிகள் "செந்தமிழர் நிலவா " என்பது எப்படி தமிழர்கள் அவரை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை குறிக்கிறது. கவிஞரின் குறும்பு MGRக்கு புரிந்தது. ஒரு புன்சிரிப்புடன் 'ஓகே' ஆனது பாடல்!

திரைக் கதைக்கு ஒத்ததாக மிக நுணுக்கமாக அதை ஆராய்ந்து வார்த்தைகளை அடுக்குவார் கவிஞர்.

Kannadasan - Sivaji Ganesan
Kannadasan - Sivaji Ganesan

அதற்கு ஒரு சிறந்த உதாரணம் இது: திருவருள் செல்வர் திரைப்படத்தில் வரும் ‘மன்னவன் வந்தானடி’ பாடல். ஒரு சோழ மன்னனின் ஆன்மீக மாற்றத்திற்கு முன் அவனது கலை ரசனையை விவரிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது இப்பாடல். படத்தின் தொடக்கத்தில், உலக இன்பங்களில் மூழ்கியிருக்கும் மன்னன் (சிவாஜி கணேசன்), கலைகளில் சிறந்த ஆடல் மகள் (பத்மினி) நடத்தும் நடன அரங்கிற்கு வருகை தருகிறான். மன்னனின் வருகையைக் கண்டு மகிழும் ஆடல் மங்கை, தோழியரிடம் பாடுவது போலவும், மன்னனைப் போற்றி வரவேற்பது போலவும் இக்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழகம்: உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் பிடித்த ரகசியம்!
Kannadasan | கவிஞர் கண்ணதாசன்

இப்படிப் போகிறது பாடல்: “மன்னவன் வந்தானடி தோழி; மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி”. அவள் ஆடல் மகள் என்பதால் தமது உறவை “நெஞ்சத்திலே இருந்து மஞ்சத்திலே அமர்ந்த” என்று போடாமல் வார்த்தைகளை மாற்றிவைத்த கவிஞரின் சாமர்த்தியமான தமிழ் புலமையை என்னவென்று சொல்வது!

கவிஞர் பாடல் எழுத உட்கார்ந்தால் பாடல் வரிகள் மடை திறந்த வெள்ளம் போல வந்து கொட்டும். எனவே இதை உடனே எழுதிக்கொள்ளும் பணியை செவ்வனே செய்தவர் அவர் உறவினர் திரு. பஞ்சு அருணாசலம் அவர்கள்.

‘காத்திருந்த கண்கள்’ படத்திற்கு பாடல் எழுத உட்கார்ந்தார்ந்து வரிகளை சொல்ல ஆரம்பித்தார் கவிஞர்: “ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே.” அதை உடனே எழுதிக் கொண்டார் பஞ்சு. கவிஞரும் உன்னிப்பாக கவனிக்காமல் படித்து ஓகே சொல்லி விட்டார். முழுப்பாடலும் எழுதப்பட்டு இசையமைப்பு, ரிக்காடிங் என்ற நிலைகளை தாண்டிப் போயிற்று. மறுநாள் பாடலை கேட்ட கவிஞருக்கு அதிர்ச்சி! அவர் சொன்னதோ: ‘ஒருத்தி மட்டும் கரையினிலே.’ ஆனால் பஞ்சு செய்த சிறு தவறால் பாடல் ‘ஒருத்தி மட்டும் தரையினிலே’ என்று பாடப்பட்டுவிட்டது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அல்லா அருள்; நல்லா நடக்கும்!
Kannadasan | கவிஞர் கண்ணதாசன்

இன்றைய காலத்தைப் போல் தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலம் அது. இத்தவறை திருத்துவதானால் மீண்டும் பாடி பாடல் பதிவு செய்ய வேண்டும். மேலதிக செலவு வேறு. எனவே இன்றும் இப்பாடலை கேட்டால் ‘ஒருத்தி மட்டும் தரையினிலே’ என்றே தவறாக இருப்பதை உணர்வீர்கள்.

காலங்கள் கடந்து கொண்டாடப்பட வேண்டிய மாபெரும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். அவர் எழுதிய வரிகள்தான் எத்தனை உண்மை:

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!

**********

பின்குறிப்பு: இக்கட்டுரையை எழுதுவதற்கு உசாத்துணையாய் அமைந்த பல கட்டுரைகளுக்கும் கவிஞரின் மூத்த புதல்வர் திரு. அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களின் Kannadhasan Productions காணோலிகளுக்கும் எனது நன்றிகள் - கிறிஸ்டி நல்லரெத்தினம்

logo
Kalki Online
kalkionline.com