
ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்கா? கொண்டு வாங்க! மருத்துவமனைக்கு போவதற்கு முன்பு உதவி செய்யலாம்.
இதை நம்மில் அநேகர் கேட்டதுண்டு. ஆனால், பலருக்கு விபரமாகத் தெரியாது.
ஃபர்ஸ்ட் எய்ட் (முதலுதவி) என்பது என்ன.?
நோய் அல்லது காயத்திற்கு உடனடியாக கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும். முதல் உதவி என்பது உதவி மட்டுமல்ல, உயிரைக்காக்கும் செயல். சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை, முதலுதவியை ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட நபர்க்கு அளிக்கவேண்டும். இது மருத்துவத்துறையில் திறமை வாய்ந்த, அல்லது பயிற்சி பெற்ற ஒரு நபரால் அளிப்பது தேவை.
சில சமயங்களில், கட்டுப்படுத்தக்கூடிய நோய்கள் மற்றும் சிறிய காயங்களுக்கு முதலுதவி அளித்த பிறகு மருத்துவத் தலையீடு தேவையில்லாமலே போகலாம். சில நேரங்களில், உயிரினைக் காப்பாற்றுகிற திறன்களையும் உள்ளடக்கியது. குறைந்த உபகரணங்களைக்கொண்டே செயல்படுத்த முடியும்.
முதலுதவியை, விலங்குகளுக்கும் கொடுக்கலாமென்றாலும், பொதுவாக மனிதர் களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது.
ஃபர்ஸ்ட் எய்ட் பற்றிய விபரம் தெரிந்த எந்த ஒரு நபரானாலும், சமூகமானாலும் பலருக்கும் உதவியாக இருக்கும். விபத்து அல்லது ஏதேனும் துன்பகரமான சூழ்நிலையில், காயம் அடைந்த நபர்களை பாதுகாக்க தேவையான உதவி வரும்வரை தக்கவைக்க இது உதவும்.
ஃபர்ஸ்ட் எய்ட் பெட்டி தரமான ப்ளாஸ்டிக்கில் செய்ததாகவும், சற்றே பெரிய அளவிலும் இருப்பது அவசியம். முக்கியமாக அதனுள் இருக்க வேண்டியவைகள்…
1) காட்டன் ரோல்; காயங்களுக்கு கட்டுப்போடும் ஃபேண்டேஜ் துணி; ப்ளாஸ்டர்; சிறிய கத்தரிக்கோல் மற்றும் கத்தி.
2) காயங்களின் மீது தடவ ஆன்டிஸெப்டிக் க்ரீம், டெட்டால், பவுடர், வலி நிவாரணமளிக்கும் மாத்திரைகள்
3) தெர்மாமீட்டர், சிறிய மற்றும் பெரிய ஊசிகள், ஸேஃப்டி பின்கள்
4) மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, டார்ச் லைட்
5) ஆம்புலன்ஸ், அருகாமையிலிருக்கும் மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், ரத்த வங்கி, குடும்ப மருத்துவர் போன்றவைகளை உடனடியாகத் தொடர்புகொள்ள தேவைப்படும் தொலைபேசி எண்கள் அடங்கிய சிறு டைரி.
முக்கியமான விஷயம் என்னவென்றால்!
மேற்கூறியவைகளை அடிக்கடி செக் செய்ய வேண்டும். ஏனெனில், சிலவற்றின் கால அளவு, உபயோகிக்காம லேயே எக்ஸ்பயரி ஆகியிருக்கும். அவற்றை அப்புறப்படுத்தி, புதியதை வாங்கி வைத்தல் வேண்டும். மேலும், முதலுதவி செய்தபின், மருத்துவரிடம் சென்று காட்டுவது அவசியம்.
சமயத்திற்கு கை கொடுக்கும் ஃபர்ஸ்ட் எய்ட் பெட்டியை வீட்டிலுள்ளோர் அனைவரின் பார்வையில் படும் படியாகவும், சிறு குழந்தைகள் கைகளுக்கு எட்டாத வகையிலும் பாதுகாப்பாக வைக்கவேண்டும். சொந்த வாகனங்களிலும், இது இருப்பது தேவை. டூர் செல்கையிலும் எடுத்து செல்லலாம்.
எத்தனையோ தேவையற்ற பொருட்களை வீட்டினுள் வைத்திருக்கும் நாம், நமக்கு மிகவும் உபயோகப் படக்கூடிய ஃபர்ஸ்ட் எய்ட் பெட்டியையும் வைத்துக்கொள்வது சாலச் சிறந்ததாகும். இரவு நேரத்தில் முக்கியமாக கைகொடுக்கும். அத்துடன் முதலுதவி பயிற்சியையும் அறிந்திருப்பது பலன் தரும்.