புற்றுநோய் - 'மக்களாலும் வெல்லப்பட வேண்டிய ஒரு போர்’; வெல்வோம்!

பிப்ரவரி 4: உலகப் புற்றுநோய் நாள்!
World Cancer Day
World Cancer Day
Published on

உலகளாவிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் நாளன்று, ‘உலகப் புற்றுநோய் நாள்’ (World Cancer Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில், பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் என்ற அமைப்பினால் ‘உலகப் புற்றுநோய் நாள்’ தொடங்கப்பட்டது. புற்றுநோய் இறப்பு வீதத்தையும், புற்றுநோய்த் தாக்கத்தையும் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கமாக இருக்கிறது. இந்நாளில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நோய்த் தடுப்பு முறைகள் மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புதல் ஆகியவை கடைப்பிடிக்கப்படுகிறது.

புற்றுநோய் ஒரு பெரிய குடும்ப நோய்களை உள்ளடக்கியது. இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின், அவை கேடுதரும் கட்டிகள் அல்லது புற்று நோய் எனப்படும். இவை புத்திழையப் பெருக்கத்தின் (Neoplasm) ஒரு பிரிவாகும்.

எல்லாப் புற்றுநோய்க் கட்டிகளிலும் ஆறு முக்கியமான இயல்புகள் காணப்படும். அவை:

  1. உயிரணு வளர்ச்சிக்கும், உயிரணுப் பிரிவுக்கும் தேவையான சரியான, ஒழுங்கான சமிக்ஞைகள் இல்லாதிருக்கும்.

  2. முரண்பாடான சமிக்ஞைகள் வழங்கப்பட்டாலும், உயிரணுக்களில் தொடர்ந்த வளர்ச்சியும், பிரிவும் நிகழும்.

  3. உயிரணுக்களின் வாழ்வுக்காலம் முடிந்ததும், இயல்பாக நிகழ வேண்டிய திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பு, அதாவது உயிரணு தன்மடிவு தவிர்க்கப்படும்.

  4. கட்டுப்பாடற்ற எண்ணிக்கையில் உயிரணுப்பிரிவு நிகழும்.

  5. புதிதாக அளவற்ற எண்ணிக்கையில் உயிரணுக்கள் தோன்றி உருவாகும் புத்திழையத்திற்குக் குருதிக் கலன்கள் இணைக்கப்படும்.

  6. புத்திழையமானது அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, வேறு இடங்களுக்குப் பரவும் மாற்றிடம் புகல் நிகழும்.

சாதாரண உயிரணுக்களிலிருந்து, காணக்கூடிய திணிவாகிப், பின்னர் புற்றுநோயாக தீவிர நிலைக்கு விருத்தியடைவது, பல படிகளில் முன்னேறிச் சென்று கேடுதரும் கட்டியாகும் நிகழ்வாகும்.

ஒரு உறுப்பிலிருந்து, இன்னொரு உறுப்புக்குப் பரவும் வல்லமை கொண்ட, அசாதாரணமான, கட்டுப்பாடற்ற உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பைக் காட்டும், ஒன்றுக்கொன்று தொடர்புடைய நோய்களின் பொதுவான பெயர் புற்றுநோய் எனப்படுகின்றது. உடலின் எந்த உறுப்பிலும் தோன்றலாம்.

மனித உடலில் நூற்றுக்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. எந்த வயதினரையும் இந்நோய் தாக்கக்கூடும். இன வேறுபாடின்றியும், இட வேறுபாடின்றியும் உலகின் அனைத்து மக்களையும் தாக்கும். பொதுவாக மனித உடலின் எந்தப் பகுதியில் அல்லது உறுப்பில் புற்றுநோய் ஏற்படுகிறதோ, அதனைக்கொண்டே புற்றுநோய் விபரிக்கப்படும். ஆனாலும், சில உடல் உறுப்புகள், ஒன்றுக்கு மேற்பட்ட இழையங்களைக் கொண்டிருப்பதனால், துல்லியமாகப் புரிந்துகொள்ளக் கூடிய வகையில், குறிப்பிட்ட புற்றுநோய் உயிரணுக்கள், எந்த வகை உயிரணுவில் இருந்து உருவாகியதோ, அதனைப் பொறுத்து புற்றுநோய் மேலதிகமாக வகைப்படுத்தப்படும்.

புற்றுநோயின் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை. கட்டி தோன்றும் நிலை அல்லது புண்ணாகும் நிலையிலேயே உணர்குறிகள் மற்றும் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். என்ன வகைப் புற்றுநோய்?, எந்த இடத்தில் அமைந்துள்ளது? என்பதைப் பொறுத்து இந்த அறிகுறிகள் மாறுபடும். சில அறிகுறிகள் குறிப்பிடத்தக்கவையாக அல்லது திட்டவட்டமானவையாக இருக்கும். ஆனால், பல அறிகுறிகள், வேறு நோய்களிலும் தோன்றக்கூடியனவாக இருக்கும். அதனால், இது வேறு நோய் நிலைகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு.

இதையும் படியுங்கள்:
மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவாம்! மன்னித்து விடுங்களேன்!
World Cancer Day

புற்றுநோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன:

  • மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்

  • புதிய மச்சம் அல்லது ஏற்கனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.

  • குணப்படாத புண்கள்.

  • கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.

  • மலம் மற்றும் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.

  • தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.

  • விவரிக்கமுடியாத விதத்தில் உடல் எடையில் மாற்றம்.

  • இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு

  • பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்து வலி

இதையும் படியுங்கள்:
புகை பிடிப்பதால் மட்டுமல்ல, பச்சைக் குத்துவதாலும் புற்றுநோய் உண்டாகும்!
World Cancer Day

புற்றுநோயை அறுவை சிகிச்சை, வேதிச்சிகிச்சை, கதிர் மருத்துவம், தடுப்பாற்றடக்கு மருத்துவம், ஒரு செல் நோய் எதிரணு மருத்துவம் அல்லது இதர முறைகளின் மூலம் சிகிச்சை அளிக்கலாம். புற்றுநோய் பாதித்த இடம், கட்டியின் தர வரிசை, புற்றுநோயின் நிலை, மற்றும் நோயாளியின் பொதுவான (செயல்திறன் நிலைமை) நிலை ஆகியவற்றை அறிந்துகொண்ட பின்னரே சிகிச்சை முறையைத் தேர்வுசெய்யலாம். பல சோதனை புற்றுநோய் சிகிச்சை முறைகள் மேம்பாடு அடைந்துள்ளன.

புற்றுநோயை முன்கூட்டியேக் கண்டறிதல் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் நோயாளிகளை நிர்வகித்தல் மூலம் புற்றுநோய் சுமையைக் குறைக்கலாம். புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான மிகவும் செலவு குறைந்த நீண்டகால உத்தியையும் தடுப்பு வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
அன்னாசி பழச்சாறு புற்றுநோய் செல்களை விரட்டுமா?
World Cancer Day

பின்வரும் முக்கிய ஆபத்து காரணிகளை மாற்றுவது அல்லது தவிர்ப்பது புற்றுநோயைத் தடுக்க உதவும்:

  • சிகரெட் மற்றும் புகையிலைப் பயன்பாட்டைத் தவிர்க்கவும்

  • ஆரோக்கியமான எடையைப் பராமரிக்கவும்

  • நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

  • தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்

  • மது பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்

  • பாதுகாப்பான உடலுறவைப் பயிற்சி செய்யுங்கள்

  • ஹெபடைடிஸ் பி மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) க்கு எதிராகத் தடுப்பூசி போடுங்கள்

  • புற ஊதாக் கதிர்வீச்சுக்கு வெளிப்பாட்டைக் குறைத்தல்

  • நகர்ப்புற காற்று மாசுபாடு மற்றும் வீட்டு உபயோக திட எரிபொருட்களால் ஏற்படும் உட்புற புகையைத் தவிர்த்தல்

  • வழக்கமான மருத்துவச் சிகிச்சை பெறுங்கள்

இதையும் படியுங்கள்:
இந்த சமையல் எண்ணெய்களால் புற்றுநோய் ஏற்படுதாம்… ஜாக்கிரதை மக்களே!
World Cancer Day

உலகப் புற்றுநோய் நாளில், உலகெங்கிலும் உள்ள அரசுகள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மற்றும் தனிநபர்களால் கடைப்பிடிக்கப்பட்டு, பல்வேறு நிகழ்வுகள் நடத்தப் பெறுகின்றன. இந்நிகழ்வுகளில், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் அதிகளவில் இடம் பெறுகின்றன. அண்மைய ஆண்டுகளில், ஆரஞ்சு மற்றும் நீல நிறங்களில் முக்கியமான அடையாளங்களை ஒளிரச் செய்தல், தங்களது தலைமுடியை மொட்டையடித்து, ஓரிடத்தில் ஒன்று கூடி, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுச் செய்திகளைப் பரப்புதல் என்று பல்வேறு புதிய வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்புக் கருத்துருவை உருவாக்கி, அந்தக் கருப்பொருளில் ‘உலகப் புற்றுநோய் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாக, ‘தனித்துவத்தால் ஒன்றுபட்டது’ எனும் கருப்பொருள் தரப்பட்டிருக்கிறது. இந்தக் கருப்பொருளின் நோக்கம், ‘புற்று நோய் என்பது சிகிச்சையால் மட்டுமல்ல, மக்களாலும் வெல்லப்பட வேண்டிய ஒரு போர்’ என்பதை மக்களுக்குச் சொல்வதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com