

Tamil short story
சென்னை.
கணேஷ் வீடு. இன்று ஆபீசுக்கு போகப் பிடிக்காமல் லீவ் போட்டுவிட்டார். காலை டிபன் சாப்பிட்டுவிட்டு, ஹாலில் வந்து உட்கார்ந்தார். ஏதோ மனம் தவித்தது; ஏன் என்று தெரியவில்லை. சோபாவில் உட்கார்ந்து, எதிரே சுவரில் இருந்த போட்டோவைப் பார்த்தார். ஆம், அது தனது நண்பர் செல்வம். ஒருவர் மீது ஒருவர் கை போட்டு எடுத்த படம்.
செல்வமும் கணேஷும் முதல் வகுப்பில் இருந்து கல்லூரி வரை ஒன்றாகப் படித்தவர்கள். இவர்கள் நட்பு வித்தியாசமானது. இருவருக்கும் ஒரே இடத்திலேயே வேலை கிடைத்தது. வருடக்கணக்காக நண்பர்களாக இருந்தவர்கள், ஒருவர் மீது ஒருவர் அளவற்ற நேசம் கொண்டிருந்தார்கள்.
கணேஷுக்கு மொபைல் போன் பிடிக்காது; எனவே அவர் இன்றுவரை மொபைல் வாங்கவில்லை. கடிதப் போக்குவரத்துதான் அவருக்குப் பிடிக்கும்.
மூன்று வருடங்களுக்கு முன் அவருக்கு ஒரு தந்தி வந்தது. அதில், "செல்வம் இறந்துவிட்டார்" என்ற செய்தி இருந்தது. கணேஷ் துடிதுடித்துப் போய்விட்டார். உடனே அமெரிக்காவிற்குப் கிளம்பினார்.
ஆம், செல்வம் சென்னையில் இருந்தபோது ஓர் இளம்பெண்ணைக் காதலித்தார். மிக நெருக்கமான காதல்; மூன்று வருடங்கள் காதலித்தார்கள். சென்னையில் அவர்கள் சுற்றித் திரியாத இடமே இல்லை. திடீரென செல்வத்தின் வாழ்வில் சுனாமி வந்தது. அவரது காதலியை ஒரு பெரும் பணக்காரருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். "காதலுக்குக் கண்ணில்லை" என்று யார் சொன்னது? காதலுக்கு நிச்சயமாகக் கண் உண்டு!
செல்வம் இடிந்துபோய்விட்டார். குடிக்க ஆரம்பித்தார். அவருக்குச் சென்னையே பிடிக்கவில்லை; எங்கு சென்றாலும் அவள் ஞாபகமாகவே இருந்தது. வேறு வழியில்லாமல் அவர் அமெரிக்கா கிளம்பிவிட்டார். அவர் படும் கஷ்டம் கணேஷுக்குப் புரிந்தது. "அவர் வெளிநாடு செல்வதுதான் நல்லது" என கணேஷ் நினைத்தார்.
அமெரிக்கா கிளம்பிய செல்வத்தை கணேஷ் வழிஅனுப்பி வைத்தார். "இந்தக் காதல் இல்லை என்றால் வேறொரு காதல் வரும்" என்று சொல்லிச் சமாதானம் செய்தார்.
இருந்தாலும், செல்வம் தற்கொலை செய்துகொண்டது கணேஷைப் பெரிதும் பாதித்தது. செல்வத்தின் இறுதிச் சடங்கிற்கு கணேஷ் போயிருந்தார். அங்கு அவர் வாய்விட்டு அழுது துடித்தார். இவை எல்லாம் கடந்த காலம்.
இன்று ஆபீசுக்கு லீவ் போட்டுவிட்டு வீட்டில் செல்வம் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, வாசலில் பெல் அடித்தது. போய் கதவைத் திறந்தார். ஒரு கூரியர் வந்திருந்தது. "யார் அனுப்பி இருப்பார்கள்?" என்று கூடச் சிந்திக்காமல் பிரித்துப் பார்த்தார்.
ஷாக்...! பேரதிர்ச்சி...!
ஆம், இந்தக் கடிதம் செல்வம் சாவதற்கு ஒரு வாரம் முன்பு எழுதி அனுப்பியது. "அடக் கடவுளே! இது என்ன சோதனை?" அந்தக் கூரியர் மூன்று மாதங்களுக்குப் பிறகு வந்துள்ளது. "சரி, படிப்போம்" என கடிதத்தைப் பிரித்தார்.
"என் நண்பா...! என் உயிர்த் தோழனே...! இந்தக் கடிதம் உனக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆமாம், நான் அதிகம் குடிக்கிறேன். ஆனாலும் அதுவும் உதவவில்லை. என் சோகம் என் உள்மனதில் படர்ந்துள்ளது. உனக்குத் தெரியும் நான் அவளை எப்படி நேசித்தேன் என்று. இப்போது நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். ஆம், எதுவும் என் பிரச்னையைத் தீர்க்கவில்லை. எனவே, நான் என் உயிரை விடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். வேறு வழியில்லை; நன்கு யோசித்து எடுத்த முடிவு இது. நான் 30 தூக்க மாத்திரைகள் வாங்கிவிட்டேன். இன்னும் சில தினங்கள்தான்... என் காதல் தோற்றது, ஆனால் என் நட்பு வெற்றியடைந்தது. கடைசியாக உன்னைப் பார்க்க ஆசை. தயவுசெய்து வா. உன்னிடம் அழுது புரள வேண்டும் என்பது என் கடைசி ஆசை.
நான் யாருக்கும் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. என் முடிவு உறுதியானது. ஆனால், நம் நட்பு பிரிந்துவிடுமே என்பதுதான் என் ஒரே கவலை. 5 வயதில் தொடங்கிய நட்பு, இன்று 30 ஆகியும் சற்றும் குறையவில்லை. நீ நிச்சயமாக வருவாய் என்று தெரியும். உன்னைக் காண ஆவலாக இருக்கிறேன். தோழா...! உன்னிடம் அதிகம் பேச வேண்டியுள்ளது. உடனே புறப்பட்டு வா. எனது கடைசி ஆசை இது மட்டுமே. இது நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஹே கணே...! உன்னைப் பார்த்துவிட்டுத்தான் சாக விரும்புகிறேன். இது உண்மை, சத்தியம். உன்னைக் காணத் துடிக்கிறேன். இதுதான் நான் எழுதும் கடைசி கடிதம் என்று எனக்கு நன்கு தெரியும். புறப்பட்டு வா... மற்றவை நேரில்...இப்படிக்கு, உன் ஆருயிர் தோழன், செல்வம்."
கணேஷ் கடிதம் எழுதிய தேதியைப் பார்த்தான். சாவதற்கு ஒரு வாரம் முன் எழுதப்பட்டது.
"கடவுளே! இது என்ன சோதனை? பொறுப்பில்லாமல் கூரியர் நிறுவனம் நடந்து கொண்டுள்ளது. கடிதம் அனுப்பி மூன்று மாதங்கள் கழித்துத் தந்துள்ளனர்!" கணேஷ் ஆத்திரத்தில் கூரியர் நிறுவனத்தைக் கண்டபடி திட்டினான்.
"ஓ"வென்று அழ ஆரம்பித்தான் கணேஷ். தான் அங்கு போயிருந்தால் செல்வத்தைக் காப்பாற்றி இருக்க முடியுமே என்று நினைத்தான். ஒரு கடிதம் ஒரு உயிரைக் காப்பாற்ற உதவவில்லை. தான் அங்கே சென்றிருந்தால் நிச்சயமாகச் செல்வம் தற்கொலை செய்திருக்க மாட்டான் என நூறு சதவீதம் நம்பினான். ஏனெனில், கணேஷ் சொல்வதை செல்வம் எப்போதும் மறுக்க மாட்டான். அவ்வளவு சிநேகம், அவ்வளவு பிரியம்!
"ச்சே...! என் நண்பன் உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே..." என்று மனம் நொந்தான். இன்று விடுமுறை எடுத்தது நல்லதாகப் போயிற்று.
"செல்வம்... செல்வம்..." என்று கதறியபடி கட்டிலில் புரண்டு அழுதான். கூரியர் செய்த தவறு ஓர் உயிரைக் குடித்துவிட்டது. யாருக்கும் இப்படி நடக்கக் கூடாது! சுவரில் இருந்த இருவரது புகைப்படத்தையும் எடுத்துத் தூக்கிக் கட்டியணைத்து அழுதான். எல்லாம் முடிந்துவிட்டது. தன் நண்பனின் உயிரைக் காப்பாற்ற முடியாத வேதனை அவன் மனதை உடைத்துவிட்டது.
எல்லாம் அந்தச் செத்துப் போன கடிதத்தால்...!