மஹா பெரியவா ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைச் சந்தித்த மகாத்மா காந்தி!

பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்கள்!! (அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை ஒட்டி அவரை நினைவு கூறும் வகையில் எழுதப்பட்ட கட்டுரை)
மகாத்மா காந்தி | Mahatma Gandhi and Sri Chandrashekarendra Saraswathi Swamigal
மகாத்மா காந்தி | Mahatma Gandhi and Sri Chandrashekarendra Saraswathi Swamigal
பிருந்தா நடராஜன்

என் பெயர் பிருந்தா நடராஜன். நான் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஆனந்த விகடனின் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வு பெற்று விகடன் மாணவ பத்திரிகையாளராக 1987-88 வருடம் பணியாற்றினேன். கவிதைகள் கதைகள் மற்றும் நேர்காணல் போன்ற படைப்புகள் ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் பிரசுரமாகி உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுத ஆரம்பித்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கல்கியின் பணி போற்றத்தக்கது. மேலும் பல படைப்புகள் கல்கி குழுமத்திற்கு எழுதி அனுப்புவேன். கல்கியில் என்னுடைய படைப்புகள் பிரசுரம் ஆவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

அரசியல் போராட்டங்களைத் தாண்டி மகாத்மா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல வியக்கத்தக்க ரகசியங்கள் புதைந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் மஹா பெரியவாவுடன் அவர் நிகழ்த்திய ஒரு மணி நேர ஆன்மீக உரையாடல், துணி துவைக்கப் புத்தகம் படித்த சுவாரஸ்யம் மற்றும் தன் வாழ்க்கையையே ஒரு பரிசோதனைக் கூடமாக மாற்றிய அவரது எளிமையான மறுபக்கம் குறித்த சிலிர்க்க வைக்கும் உண்மைகளை இந்தக் கட்டுரையில் படித்து அறியுங்கள்!

அக்டோபர் 2 என்றாலே நம் நினைவுக்கு வருவது மகாத்மா காந்தியின் பிறந்த நாள். 1869-ம் ஆண்டு அக்டோபர் 2-ல் குஜராத்தின் போர்பந்தரில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தனது வாழ்க்கை முழுவதையும் உண்மை, எளிமை, சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக மாற்றியவர். அவருடைய அரசியல் போராட்டங்களைப் பற்றி நாம் அதிகம் அறிந்திருந்தாலும், அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள் இன்றும் நம்மை வியக்க வைக்கின்றன.

காந்தியடிகளின் வாழ்க்கையில் கதருக்கும் ராட்டைக்கும் தனி இடம் இருந்தது. தினமும் ராட்டை நூற்பதை அவர் ஒரு கடமையாகக் கருதினார். பயணத்திலும், சிறையிலும் ராட்டையை உடன் எடுத்துச் சென்றார்.

ஏழை மக்களுடன் தன்னை இணைத்துக் கொள்வதற்கான ஒரு வழியாகவும் இதைப் பார்த்தார். சுயசார்பு என்பது அரசியல் சுதந்திரத்திற்கு இணையானது என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தினார்.

காந்தியடிகளின் வாழ்க்கையில் மிகவும் சுவாரஸ்யமான ஓர் அத்தியாயம், காஞ்சி மஹா பெரியவாளுடனான சந்திப்பு. 1927-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி கேரளாவின் பாலக்காடு அருகிலுள்ள நெல்லிசேரியில் மஹா பெரியவாளை காந்தியடிகள் சந்தித்ததாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. அப்போது மஹா பெரியவா சமஸ்கிருதத்திலும், காந்தியடிகள் ஹிந்தியிலும் உரையாடியதாகக் கூறப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர் இல்லாமலேயே இருவரும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த தனிப்பட்ட சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகவும் பதிவுகள் குறிப்பிடுகின்றன.

சந்திப்பு முடிந்து வெளியே வந்த காந்தியடிகளிடம், அன்றைய மாலை உணவு நேரம் நெருங்கிவிட்டதை ராஜாஜி நினைவுபடுத்தியதாகவும், அதற்கு காந்தியடிகள் மஹா பெரியவாளுடன் நடைபெற்ற உரையாடலே அன்றைய மாலை உணவாக அமைந்துவிட்டதாகக் கூறியதாகவும் ஒரு பதிவு தெரிவிக்கிறது. மஹா பெரியவா அவருக்கு ஒரு பம்பளிமாசு பழத்தை ஆசீர்வாதத்துடன் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இருவரும் பேசிய முழு விஷயங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தியடிகளின் வாழ்க்கையில் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம், அவர் தன்னைத்தானே தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டவர்... உணவு முறையிலும் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டார்.. இங்கிலாந்தில் இருந்த போது சைவ உணவு குறித்து ஆர்வம் கொண்டு vegetarian society யிலும் இணைந்தார்.. சில காலங்களில் தேநீர், காஃபியைத் தவிர்த்து கோகோ அருந்தினார்..

மகாத்மா காந்தி | Gandhi and the Spinning Wheel
மகாத்மா காந்தி | Gandhi and the Spinning Wheel

உணவு என்பது சுவைக்காக மட்டும் அல்ல, உடலுக்கு தேவையான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டியது என்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டார்.. தனது எளிமையான வாழ்க்கைக்காக அவர் செய்த சிறிய மாற்றங்களும் ஆச்சரியமானவை.. சலவைக்காரருக்கு செலவிடும் பணத்தைக் குறைப்பதற்காக துணிகளைத் தானே துவைக்கக் கற்றுக் கொண்டார்..

அதற்காக துணி துவைக்கும் முறையைப் பற்றிய புத்தகத்தையே வாங்கிப் படித்தார்.. பின்னர் தனது மனைவிக்கும் அந்த முறையைக் கற்றுக் கொடுத்தார்.. இத்தகைய சிறிய செயல்களில் கூட சுயசார்பு, சிக்கனம், உழைப்பின் மதிப்பு ஆகியவற்றை அவர் கடைப்பிடித்தார்..

ராட்டையைச் சுழற்றுவதிலும் அவருக்கு இதே எண்ணம் தான் இருந்தது.. அது வெறும் நூல் தயாரிக்கும் கருவி அல்ல.. கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பையும் சுய மரியாதையையும் உருவாக்கும் கருவி என்று அவர் கருதினார்..

மேம்படுத்தப்பட்ட ராட்டையை உருவாக்குபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.. அந்த பரிசு பின்னரும் பெறப்படாமல் இருந்ததாக காந்தி அருங்காட்சியகப் பதிவு குறிப்பிடுகிறது..

இதையும் படியுங்கள்:
மகாத்மா காந்தியின் பிறப்பு முதல் இறப்பு வரை நடந்த போராட்டங்கள்!
மகாத்மா காந்தி | Mahatma Gandhi and Sri Chandrashekarendra Saraswathi Swamigal

காந்தியடிகளின் வாழ்க்கையில் நேரத்தைப் பயன்படுத்திய விதமும் குறிப்பிடத்தக்கது.. அவர் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை.. ஒரு முறை குஜராத் வித்யா பீடத்தில் உரையாற்ற செல்ல வேண்டி இருந்த போது அவருக்காக வந்த கார் தாமதமானது.. நேரம் தவறி விடக் கூடாது என்பதற்காக அங்கிருந்த பேராசிரியரின் சைக்கிளை வாங்கி தானே சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

அவருடைய கைக் கடிகாரம் நேரத்தைப் பார்ப்பதற்கான கருவியாக மட்டும் அல்லாமல் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் கருவியாகவும் இருந்தது.. தன்னுடைய வாழ்க்கையைத் தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டவராகவும் காந்தி விளங்கினார்... உணவு முறையிலும் பல பரிசோதனைகளை மேற்கொண்டார்.. இதனால் அவரது சுயசரிதைக்கே "என் சத்திய சோதனைகள்" என்ற பொருத்தமான பெயர் கிடைத்தது..

தென்னாப்பிரிக்காவில் அவர் உருவாக்கிய டால்ஸ்டாய் பண்ணையிலும் சுயசார்பு வாழ்க்கையை நடைமுறைப் படுத்தினார்.. அங்கு வீட்டு வேலை, விவசாயம், கட்டுமானப் பணிகள் போன்றவற்றுக்கு வேலைக்காரர்களை வைத்துக் கொள்ளாமல் குடியிருந்தவர்களே பணிகளைப் பகிர்ந்து செய்தனர்..

குழந்தைகளுக்கு பள்ளியும் நடத்தப் பட்டது.. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்ந்த அந்த இடம் காந்தியின் சமூகப் பரிசோதனைகளுக்கான முக்கியமான தளமாக அமைந்தது.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகள் மக்களை ஒன்றிணைத்த முக்கியத் தலைவராகத் திகழ்ந்தவர்.. சத்தியம் மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டு ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்..

1930 ஆம் ஆண்டு சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி நோக்கி மேற்கொண்ட உப்பு நடைப்பயணம், பிரிட்டிஷ் ஆட்சியின் உப்பு வரிக்கு எதிரான வரலாற்றுச் சத்தியாகிரகமாக அமைந்தது..1942 ல் தொடங்கிய "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மேலும் வலுப்படுத்தியது..

ஆயுதப் போராட்டத்திற்குப் பதிலாக மக்கள் சக்தியையும் அஹிம்சையையும் முன்னிறுத்திய அவரது அணுகுமுறை இந்திய சுதந்திர இயக்கத்தின் முக்கியமான பகுதியாக அமைந்தது..

இதையும் படியுங்கள்:
Mahatma Gandhi Quotes: காந்தி சொன்ன 15 வாழ்க்கைத் தத்துவங்கள்!
மகாத்மா காந்தி | Mahatma Gandhi and Sri Chandrashekarendra Saraswathi Swamigal

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை நினைவுகூரும்போது, அவருடைய அரசியல் போராட்டங்களை மட்டுமல்லாமல், எளிமையான வாழ்க்கை, சுயக்கட்டுப்பாடு, கதர் மீதான நம்பிக்கை மற்றும் மஹா பெரியவா ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுடனான இந்த அரிய சந்திப்பு போன்ற நிகழ்வுகளையும் நினைவுகூரலாம்.

மஹாளய பட்சத்தில் முன்னோர்களின் நல்வழியையும் உயர்ந்த சிந்தனைகளையும் நினைவுகூரும் வேளையில், காந்தியடிகளின் வாழ்க்கை நமக்கு உண்மை மற்றும் எளிமையின் மதிப்பை மீண்டும் உணர்த்துகிறது.

இந்த வரலாற்றுப் பதிவுகள் மூலம் வாசகர்கள் காந்தியடிகளின் மிக எளிய வாழ்க்கை முறை, ஆன்மீகப் பற்று மற்றும் சுயசார்புச் சிந்தனைகளைத் தங்கள் அன்றாட வாழ்வில் பின்பற்றி மனநிறைவையும் நிம்மதியையும் அடைய முடியும்.

logo
Kalki Online
kalkionline.com