சமூகவியல் ஆய்வின்படி மனித குல வரலாற்றின் நதிக்கரை நாகரிகம் புதிய பரிணாமங்களை கொண்டு வந்தது. மலைக்குகைகளில் வாழ்ந்த மக்கள் ஆற்றங்கரைகளில் குடியேறியதும் நீர்வளம் உள்ள நிலங்களைப் பண்படுத்திப் பயிர் செய்தனர். அதுவரை கூட்டு வாழ்க்கை வாழ்ந்து வந்த மனித குலம் நிலங்களுக்கு வரப்பு கட்டித் தனி உடமையாக்கியது. பின்பு ஆடவர் பெண்களையும் தாலி கட்டித் தமது உடமையாக்கினர். அவள் தனக்கு மட்டும் பெற்று தரும் குழந்தைகளைத் தன் நிலம், நீச்சு, தோட்டம், துரவுக்கு வாரிசாக்கினர்.
இவ்வாறாக மருத நிலத்தில் திருமணம் மூலமாகக் குடும்பமும் சொத்துடைமையும் தோன்றின.
குலமகள், பொதுமகள்
மருதத் திணையில், ஒருவன் தன் நிலத்தின் அளவுக்கேற்ப, அதில் பாடுபட ஆட்கள் வேண்டுமென்ற காரணத்தால், பல பெண்களை மணந்தான். அவர்கள் குல மகளிர் எனப்பட்டனர். திருமணம் செய்து கொள்ளாமலும் குழந்தை பெறும் உரிமையைக் கொடுக்காமலும் 'பொதுமகள்' என்ற பெயரில் சிலரைப் பொதுப் பயன்பாட்டுக்கு வைத்திருந்தனர். இவர்கள் பொதுமகளிர் (concubines, prostitutes,) எனப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் போரின்போது பிற நாடுகளில் இருந்து பிற குலங்களில் இருந்து பிடித்துக் கொண்டு வரப்பட்ட கொண்டி மகளிர் ஆவர்.
யாரோடு எப்போது தங்க வேண்டும்
தொல்காப்பியத்துக்கு முன்பிருந்தே சான்றோர் ஒரு வரையறை வைத்திருந்தனர் என்பதை இந்நூலின் (நூற்பா 189) வாயிலாக ஆராயலாம்.
'பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்/
நீத்தகன்று உரையார் என்பனார் புலவர் /
பரத்தையிர் பிரிந்த காலையான/'
மாதவிலக்கான பின் பன்னிரு நாட்களும் கருத்தங்கும் காலம் (fertility days) என்பதால் அந்நாட்களில் ஒரு ஆண் தன் மனைவியை விட்டுப் பிரியக்கூடாது. பரத்தையின்பால் போகக்கூடாது. இவ்விதி குழந்தைப் பிறப்பிற்கும் மனித வளத்துக்கும் சமுதாயம் அளித்த சிறப்பை உணர்த்துகின்றது.
தொல்காப்பியத்தைத் தொடர்ந்து வந்த பல நூல்கள் இக்கருத்தை வலியுறுத்தின. ஆசாரக்கோவையின் 42வது பாடல்
'தீண்டாநாள் முந்நாளும் நோக்கார் நீராடிய பின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே பேரறிவாளர் துணிவு'.
பெண்கள் மாதவிலக்காகி இருக்கும் மூன்று நாட்களிலும் ஆண்கள் தன் மனைவியைப் பார்க்க மாட்டார்கள். அவள் மாதவிலக்கு முடிந்து நீராடிய பின்பு 12 நாட்களும் அவளை விட்டுப் பிரிய மாட்டார்கள், பிரியக்கூடாது. இச்சமுக விதி பெண்களுக்குத் தமது கணவர் மீது வெறுப்புக் கொள்ளாமல் ஊடல் கொள்ளச் செய்கின்றது.
ஒரு கணவன் பரத்தையினால் பிரிந்தாலும் அவன் நெஞ்சில் நிறைந்தவள் மனைவி மட்டுமே என்ற நம்பிக்கையை அவளுக்கு ஏற்படுத்துகிறது. மனைவியும் அவனைத் தவிர வேறொருவனை மறு ஜென்மத்தில் கணவனாக வரிப்பதும் கூட தன் கற்புக்கு களங்கம் என்று நம்புகின்றாள். பொழுதுபோக்குக்காக அவன் போயிருக்கலாம். ஆனால் அவனது இதயத்தில் குடியிருப்பவள் நானே என்ற மன உறுதியுடன் ஒருத்தி
'இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் என் கணவனை
யான் ஆகியள் நின் நெஞ்சு நேர்பவளே'
(குறுந்தொகை 49)
என்கிறாள். இந்தப் பிறவி போய் இன்னொரு பிறவி வந்தாலும் நீயே எனக்கு கணவன், நானே உன் நெஞ்சில் நிறைந்தவள், என்கின்றாள்
அவன் என்ன சொல்கிறான்?
பரத்தை வீட்டுக்குப் போய் வந்தவனும் மனைவி சொன்னதைத் தான் சொல்கிறான். உன் மனைவி கோபித்துக் கொள்ளப் போகிறாள் என்ற தோழனிடம் பெரும்சுழல் காற்று வீசினாலும் இடி இடித்தாலும் பூமியே கிடுகிடு என்று நடுங்கி நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அவள் என் நெஞ்சை விட்டு நீங்க மாட்டாள். அவளே என்றும் எனக்கு இனியவள் என்கிறான்.
கால் பொருது இடிப்பினும்
கதழ் உறை சிதறினும்
உரும் உடன்று எரியினும்
ஊறு பல தோன்றினும்
பெருநிலம் கிளறினும்
திருநல உருவின்
மாயா இயற்கை பாவையின்
போதல் ஒல்லாள்
என் நெஞ்சத்தாளே (நற்றிணை201)
ஆக சமூகத்தின் கண்ணாடியான இலக்கியம் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்தவில்லை. ஒருத்திக்கு ஒருவன் என்பதையே வலியுறுத்துகிறது. ஆனால் இந்தியக் குற்றவியல் சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்தி மறு தாரத் தடைச்சட்டத்தைப் பெண்களுக்கு ஆதரவாகக் கொண்டுள்ளது.