மகளிர் தினத்தில் மறக்கக்கூடாத மனிதர்கள்: பெண் உரிமைக்காகப் போராடியா ஆண்கள்!

மார்ச் 8: சர்வதேச பெண்கள் தினம்!
International Womens day - Male reformers
International Womens day - Male reformersAI Image
Published on
Kalki Strip
Kalki Strip

பெண்கள் தற்போது உரிய கல்வி, சொத்துரிமை, உடல் ரீதியான சுயாட்சி மற்றும் வன்முறையற்ற வாழ்வுக்கான அடிப்படை மனித உரிமைகளை பெற்று சமூகத்தில் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். பெண்களுக்கான இந்த உரிமைகளை நிலைநிறுத்த போராடிய சில ஆண்கள் குறித்து சர்வதேச மகளிர் தினம் (மார்ச் 8) கொண்டாடப்படும் இந்த நாளில் தெரிந்து கொள்வோம்.

ராஜா ராம் மோகன் ராய் - Rajaram Mohan Roy: (22/05/1772 - 27/09/1833)

அன்றைய வங்க மாகாணத்தின் ராதா நகர் கிராமத்தில் பிறந்த ராஜா ராம்மோகன் ராய், இந்தியா சமூக சீர்திருத்தத்தின் முதன்மைக் குரலாக ஒலித்தவர். இந்தியாவில் ஒரு காலத்தில் மோசமான ஒரு சடங்கு நடைமுறையில் இருந்தது. சதி அதாவது கணவர் இறந்தவுடன் அவருடைய இறுதிச் சடங்கில் மனைவி தன்னுடைய உயிரையும் தியாகம் செய்து உடன்கட்டை ஏற வேண்டும். பெண்கள் உயிர் வாழ்வதற்கான உரிமையை கூட சமூகம் மறுத்தது. பல பெண்களும் கட்டாயப்படுத்தப்பட்டு தீயில் தள்ளப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித்தனமான உடன்கட்டை ஏறும் நடைமுறைக்கு எதிராக குரல் எழுப்பி இதனை ஒழித்தவர் தான் ராஜா ராம் மோகன் ராய்.

கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்கள், இந்தியர்களின் மத நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது என்று ‘சதி’யைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தனர். 'பிரம்ம சமாஜ்' என்ற அமைப்பை உருவாக்கி சதிக்கு எதிரான போராட்டம் நடத்திய ராம் மோகன் ராயின் பிரசாரம் அதனை அசைத்துப் பார்த்தது. இந்த முயற்சிகளின் பலனாக, பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங் பிரபு 1829-ஆம் ஆண்டு முதன்முதலாகச் ‘சதி’ பழக்கத்துக்குத் தடை விதித்தார்.

இதன் மூலம் பல பெண்களின் உயிரை காப்பாற்றியவர் ராய். இது தவிர இவர் பெண்களுக்கான சொத்துரிமை மற்றும் குழந்தை திருமணங்களையும் எதிர்த்து போராடினார். 'இந்திய மறுமலர்ச்சியின் தந்தை' என்று பல வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படும் ராஜா ராம் மோகன் ராய், 1833-ஆம் ஆண்டு, தனது 61-ஆம் வயதில் இங்கிலாந்தில் காலமான போது, அவர் உலகளவில் பிரபலமானவர் ஆனார்.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் - Bhimrao Ramji Ambedkar: (14/04/1891– 06/12/1956)

மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்து இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானவர். அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை, சமூக சீர்திருத்தவாதி மற்றும் தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தலைவர். சாதிய பாகுபாடுகளை எதிர்த்து, கல்வியின் மூலம் முன்னேறி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

பெண்களுக்கு என எந்த ஒரு உரிமையும் மறுக்கப்பட்ட காலத்தில் பெண்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர். பெண்களுக்கு சொத்தில் உரிமை, விவாகரத்து கோருவதற்கான உரிமை என பல்வேறு உரிமைகளையும் சட்டப்பூர்வமாக கொண்டு வந்து நடைமுறைப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

மனோக்ஜி கார்செட்ஜி - Manockjee Cursetjee: (1808-1887)

19 ஆம் நூற்றாண்டின் ஒரு முக்கிய பார்சி மும்பை வணிகர், நீதிபதி மற்றும் பம்பாயின் ஷெரிப் ஆவார். இந்தியாவில் ராயல் ஆசிய சங்கம் மற்றும் ராயல் புவியியல் சங்கத்தின் உறுப்பினராக இருந்தவர். பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்துப் போராடியவர். 1859 ஆம் ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கான முதல் ஆங்கிலப் பள்ளியை தொடங்கினார்.

முதலில் மும்பையில் இருந்த தன்னுடைய வீட்டில் அவர் அலெக்ஸாண்ட்ரா பூர்வீக பெண்கள் ஆங்கில நிறுவனத்தை நிறுவியதன் மூலம் பெண்களுக்கான ஆங்கில பள்ளியை தொடங்கி மிகப்பெரிய புரட்சியை மேற்கொண்டார். வீட்டில் தொடங்கப்பட்ட பள்ளி பின்னாளில் பெண்களுக்கான மிகப்பெரிய கல்வி நிலையமாக மாறியது. பெண்களுக்கும் கல்வி கற்பதற்கு உரிமை உள்ளது என்பதை நிலைநிறுத்தியவர். பெண்கள் கல்விக்கு முன்னோடியாக இருந்த இவருக்கு மும்பையில் சிலை உள்ளது.

ஜோதிராவ் பூலே - Jyotirao Phule: (11/04/1827 - 28/11/1890)

இந்தியாவில் பெண்களுக்கான உரிமைகளை நிலை நாட்டியதில் முக்கிய பங்கு ஆற்றியவர் தான் ஜோதிராவ் பூலே. மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் பூ வியாபாரம் செய்து வந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர். அதனால் வந்த பெயர் தான் பூலே. தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த பெண்கள் பள்ளிக்கு சென்று கல்வி பெற அனுமதிக்கப் படாமல் இருந்த கால கட்டம் அது. அதனை எதிர்த்து போராட்டம் செய்தவர். தன்னுடைய மனைவிக்கு கல்வி கற்பிக்க தொடங்கினார், இதனால் தன்னுடைய சொந்த குடும்பத்தினராலேயே ஒதுக்கி வைக்கப்பட்டாலும் விடாமுயற்சியால் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த சிறுமிகளுக்கு என பள்ளியை தொடங்கி நடத்தினார். விதவை மறுமணத்தை ஆதரித்தார், பெண் சிசுக்கொலையை தடுக்க போராடினார்.

இதையும் படியுங்கள்:
மன்னர்கள் மட்டும்தானா? உலகை மிரட்டிய 5 பேரரசிகள்!
International Womens day - Male reformers

பெஹ்ராம்ஜி மலபாரி - Behramji Malabari: (18/05/1853 - 12/07/1912)

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு எழுத்தாளர், பெண் உரிமைகளுக்காகவும் குழந்தை திருமணத்திற்கு எதிராகவும் தொடர்ந்து போராடியவர். சமூக சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர் மற்றும் கவிஞர். தன்னுடைய எழுத்துக்கள் மூலம் விதவை மறுமணங்களை ஆதரித்தார். 1885 ஆம் ஆண்டு கணவர் வீட்டுக்கு திரும்ப வேண்டும் இல்லை என்றால் சிறைப்படுத்தப்படுவாய் என ஒரு பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து போராடி பெண்களுக்கு வாழும் உரிமை இருப்பதை நிலைநிறுத்தினார். 1891-ன் சம்மத வயதுச் சட்டத்தை (Age of Consent Act) கொண்டுவர முக்கியக் காரணமாக இருந்தவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com