
1962 ஆம் ஆண்டு (International Theatre Institute) ஆல் தொடங்கப்பட்ட உலக நாடக தினம், உலகெங்கிலும் உள்ள நாடக அமைப்புகள், மற்றும் நாடக ஆர்வலர்களால் ஒவ்வொரு வருடமும் மார்ச் 27 ஆம் தேதி - நாடகம் என்ற கலை வடிவத்தின் மகத்துவம் மற்றும் முக்கியத்துவத்தை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.
நாடகக் காப்பியம் என்றழைக்கப்படும் சிலப்பதிகாரம் தமிழின் முதற் காப்பியம். இது இன்று திரைப்படமாக எடுக்கப்பட்டும், நாடக, நாட்டிய வடிவமாக நடத்தப்பெற்றும் உள்ளது.
ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் மத்தவிலாசம் என்னும் நாடக நூலை எழுதியுள்ளார். பதினோராம் நூற்றாண்டில் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் இராஜராஜேச்சுவர நாடகம் நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர்களால் கோவில்களில் நாடகங்கள் நடத்தப் பெற்றன.
குறவஞ்சி நாடகங்கள் நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில் தோன்றின.
பள்ளுவகை நாடகங்கள் உழவர்களின் வாழ்க்கையைச் சித்தரித்துள்ளன.
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகங்கள் தோன்றின.
பதினெட்டாம் நூற்றாண்டில் அருணாச்சலக் கவிராயரின் இராமநாடகம், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன.
இக்காலத்தில் தோன்றிய பெரும்பாலான நாடகங்கள் மகாபாரதம், இராமாயணம் முதலிய காவியங்களின் கதைக் கூறிலிருந்து படைக்கப்பட்டன. ஊர்களில் தெருக்கூத்து என்னும் நாடக வகை புராணக் கதைகளையே மையமாகக் கொண்டு இரவு முழுவதும் விடிய விடிய நடத்தப்பட்டன.
கிபி 19ஆம் நூற்றாண்டு அளவில் ‘தெருக்கூத்து’ என்ற நாடக வடிவம் தோற்றம் பெற்றது. தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் தமது 24 ஆம் வயதில் நாடகத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என்ற பட்டத்தினால் சிறப்பு பெற்றவர்.
‘தமிழ் நாடகத் தந்தை’ என அழைக்கப்பெற்ற பம்மல் சம்பந்த முதலியாரால் உரைநடை நாடகங்கள் தமிழ் நாடக மேடையில் அறிமுகம் செய்யப்பட்டன.
சங்கரதாஸ் முதல் இருபதாம் நூற்றாண்டு வரை நாடகக் கலைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த கலைஞர்களின் நினைவைப் போற்றும் வகையில் ‘தெருக்கூத்து முதல் தற்கால நாடகம் வரை’ என்ற தலைப்பில் சிறப்பானதொரு நிகழ்ச்சியை வடிவமைத்திருக்கிறார் கோமல் தியேட்டர் நிறுவனத்தின் தலைவர் தாரிணி கோமல். இந்நிகழ்ச்சியை சென்னை சபைகளின் கூட்டமைப்புடன் இணைந்து வழங்குகிறார்.
இதற்கான ஸ்கிரிப்டை மிகுந்த ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, கடந்த இரண்டு மாதங்களாக எழுதி, குரலில் பதிவு செய்து அதற்கான புகைப் படங்களைத் தேர்வு செய்து பங்கு பெறும் ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு காணொளியாக தயார் செய்திருக்கிறார் கோமல் தியேட்டர் நிறுவனத்தின் தலைவர் தாரிணி கோமல் அவர்கள்.
தற்போது தமிழ் நாடக மேடையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஜாம்பவான்களை ஒருங்கிணைத்து, அன்று மேடையில் அரங்கேறவிருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளைத் தொடுக்கும் மலர்மாலையாக இவரது வர்ணனை அமையும்.
அவரைச் சந்தித்தபோது :
“2020 ஆம் ஆண்டு உலக நாடக தினத்தை கொண்டாடும் நோக்கத்துடன் இரண்டு மூன்று குழுக்களைத் தொடர்பு கொண்டு ஒரு சிறப்பான நிகழ்ச்சி வழங்க முடிவு செய்தேன். கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் இதற்கான மேடை வழங்கவும் தயாரானார்கள். அத்தனை ஆயத்தங்களையும் செய்து முடித்து நிகழ்ச்சி அரங்கேறத் தயாராகும் வேளையில் மார்ச் 20 ஆம் தேதி லாக்டவுன் அறிவிப்பானது.
அதனைத் தொடர்ந்து வந்த வருடங்களில் பல்வேறு புதிய படைப்புகளில் கோமல் தியேட்டர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. அதன் பிறகு மீண்டும் இந்த ஆண்டு தான் உலக நாடக தினத்தன்று ஏதாவது சிறப்பாக செய்யலாமே என்ற எண்ணம் மீண்டும் தலைத்தூக்கியது. இந்த ஆண்டு அனைத்து நாடகக் குழுக்களும் இதில் பங்களிப்பு செய்தால் சிறப்பாக இருக்குமே என்று தோன்ற பிரபல நாடகக் குழுவினரைத் தொடர்பு கொண்டேன்.
கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சபையின் செயலர் சேகர் ராஜகோபால் அவர்களைத் தொடர்பு கொண்டபோது அவர் இந்த ஐடியாவை மிகவும் வரவேற்றார். இரண்டு நாட்கள் கழித்து பேசும் போது, இதை கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் மட்டும் தனியாக அல்ல சென்னை நகர சபையின் கூட்டமைப்பு (Federation of City Sabhas) சார்பில் அனைவரும் இணைந்து வழங்குவதாகக் கூறினார்.
கூடுதல் உற்சாகத்துடன், இன்று தமிழ் நாடக மேடையில் தனது அனுபவத்தால், சிறப்பான நாடகங்களால் ரசிகர்களை ஈர்த்து கொண்டிருக்கும் Y G மகேந்திரன், எஸ்வி சேகர், காத்தாடி ராமமூர்த்தி கிரேசி மாது பாலாஜி, குடந்தை மாலி, அகஸ்டோ, பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் குருகுலம், ரத்னம் கூத்தபிரான், டம்மீஸ் ஸ்ரீவத்சன் போன்ற பலரையும் தொடர்பு கொண்டு என் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்ட போது, அனைவரும் எந்த மறு யோசனையும் இன்றி உடனே தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர். அப்படி உருவானதுதான் இந்த நிகழ்ச்சி.
தமிழ் நாடகக் கலையின் பரிணாம வளர்ச்சி எனும் போது தெருக்கூத்து எனும் வடிவம் முதலில் வருகிறது. அக்கால கட்டங்களில் வள்ளித் திருமணம், சத்தியவான் சாவித்திரி ராமாயணம் மகாபாரதம் போன்ற புராண இதிகாச கதைகளே தெருக்கூத்துக்களில் இடம் பெற்றன.
நாடகம் என்பது காலத்தின் கண்ணாடி. அந்தந்த காலகட்டத்தில் சமுகத்தின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் கருத்திலும், வடிவத்திலும் மாற்றம் அடைந்து கொண்டே வந்த நாடகக் கலையின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் வகையில் உருவாக்கப்படுள்ளது இந்த நிகழ்ச்சி.
பம்மல் சம்பந்த முதலியார் அவர்களே உரைநடை பாணியில் நாடகத்தை கொண்டு வந்தவர். பிரம்மாண்டமான செட் அமைத்து நாடகத்தை அரங்கேற்றியவர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை. இவர் இராமாயணம் நாடகம் போட்ட போது நாடகம் பார்க்க பேருந்தில் வரும் பிரயாணிகளுக்கு ‘இராமாயணம் பஸ் ஸ்டாப்’ பிரத்தியேகமாக அமைக்கப்பட்டதாம்.
நாடகத்தில் நடிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் பலரும் தமது குடும்பத்தை விட்டு வெளியே வந்து காண்ட்ராக்ட் முறையில் பாய்ஸ் நாடக கம்பெனியில் இணைந்து தங்களுடைய நாடக ஆர்வத்தை தீர்த்துக் கொண்டனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் உட்பட பலர் இதில் அடங்குவர். சுதந்திரப் போராட்ட காலத்தின் போது சுதந்திர வேட்கையைத் தூண்டி, மக்களிடம் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவே பல நாடகங்கள் அரங்கேறின.
நாடகம் எழுதியவர்கள் பலர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். ஜாதிப் பிரச்னை போன்ற விஷயங்களை அறிஞர் அண்ணா அவர்கள் மிக அருமையாக தமது நாடகங்களில் கையாண்டார். மனோரமா நம்பியார் இப்படி பலரும் நாடக மேடையிலிருந்து திரைக்கு வந்தவர்களே.
நாடகக் கலைக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இவர்கள் அனைவரையும் போற்றி நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி அமையும். இவர்களுடைய சில படைப்புகள் நாடகமாக மேடையில் அரங்கேற இருக்கிறது. பலரைப் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் காணொளிகளாகவும் மேடையில் அன்று அரங்கேற போகிறது.
மொத்தம் 12 குழுக்கள், 16 நாடகக் காட்சிகள், சில காணொளிகள். ஒவ்வொரு காட்சியிலும் மாறுபடும் கதைப் பின்னணியை எளிதில் கையாள எல்இடி பின்னணியைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஒவ்வொருக்கும் தேவையான கதை களன்களுக்கு ஏற்ப டிசைன்களை டிசைனருடன் இணைந்து உருவாக்கி இருக்கிறேன். கிட்டத்தட்ட 68 கலைஞர்கள் அன்று மேடையில் தோன்றப் போகிறார்கள். அனைவருக்கும் ஒரே மேக் அப் மேன். ஒரே ஒளிக்கலைஞர். இசையை கையாள்பவரும் ஒருவர்.
அத்தனை ஜாம்பவான்களையும் இணைத்து ஒருசேர ஒரே மேடையில் நிகழ்ச்சியை வழங்குவது இதுவே முதல் முறை. அத்தனை கலைஞர்களும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாடக மேடை மேல் உள்ள மரியாதை மற்றும் தீராக் காதலால் தங்களது பங்களிப்பாக உலக நாடக தினத்தன்று நிகழ்ச்சிகளை வழங்க ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கான அரங்கம் வழங்கி, ஒளி ஒலி ஏற்பாடுகளைச் செய்ய சென்னை சபைகளின் கூட்டமைப்பு முன் வந்திருக்கிறது.
நாடகக் கலைஞர்களுக்கு மட்டுமல்ல அன்று மாலை நாரதகான சபைக்கு இந்நிகழ்ச்சியை காண வரும் நாடக ரசிகர்களுக்கும் இது ஒரு கொண்டாட்டமான தினமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை”, என்று மிகுந்த உற்சாகத்துடன் கூறி முடித்தார் திருமதி தாரிணி கோமல்.
நிகழ்வு 27ந் தேதி மாலை 6 மணிக்கு. அனைவரும் வருக.