
உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான கருப்பொருள், "புகையிலை தொழில் தலையீட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்" என்பது ஆகும்.
இந்த ஆண்டு, புகையிலை மற்றும் நிக்கோடின் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை, குறிப்பாக இளைஞர்களை மிகவும் கவர பயன்படுத்தும் ஏமாற்று தந்திரங்களை அம்பலப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது உலக நலவாழ்வு அமைப்பு.
2025 ஆம் ஆண்டின் பிரச்சாரம் புதிய தலைமுறை பயனர்களை ஈர்க்கும் வகையில் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில், இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தின பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முக்கிய கவலைகளில் ஒன்று, புகையிலை மற்றும் நிக்கோடின் பொருட்களின் மீதான வளர்ந்து வரும் ஈர்ப்பிலிருந்து இளைஞர்களைப் பாதுகாக்க வலுவான கொள்கைகளின் தேவை பற்றியதாகும்.
இளைஞர்களிடையே மின்-சிகரெட்டுகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில், ஐரோப்பிய கண்டத்தில் 12.5% இளம் பருவத்தினர் மின்-சிகரெட்டுகளைப் பயன்படுத்தியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது பெரியவர்களில் வெறும் 2% மட்டுமே. சில நாடுகளில், பள்ளி வயது குழந்தைகளிடையே மின்-சிகரெட் பயன்பாடு சிகரெட் புகைப்பதை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. இது அவசர நடவடிக்கை தேவைப்படும் ஓர் அத்தியாவசிய தேவையைச் சுட்டிக்காட்டுகிறது. புகையிலையில் சுவைகளைத் தடை செய்தல், சந்தைப்படுத்துவதில் கடுமையான விதிமுறைகளை விதித்தல் மற்றும் இந்த தயாரிப்புகளின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல் போன்றவற்றின் மூலம் இளைஞர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. புகையிலை பயன்பாடு புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) ஆகியவற்றை இளம் வயதிலேயே ஏற்படுத்துகிறது. இதன் விளைவுகள் கவலையளிக்கின்றன.
உலகளாவிய ஆய்வுகள் 13-15 வயதுடைய இளம் பருவத்தினரிடையே புகையிலை மற்றும் நிக்கோடின் பயன்பாட்டின் போக்கு அதிகரித்து வருவதைக் குறிக்கின்றன. இது அவர்களின் உடனடி ஆரோக்கியத்தை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் அடிமையாதல் மற்றும் அசாதரண உடல்நலப் சிக்கல்களுக்கும் வழிவகுக்கின்றன.
இளம் வயதிலேயே புகையிலையை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானவை. நிக்கோடின், பயன்படுத்துபவரை அடிமையாக்கும் தன்மை கொண்டது. வயது வந்தோரின் தொடர் புகைப்பிடிப்பு பழக்கம் அவர்களை போதைப் பொருள் பழக்கத்துக்கு இட்டுச் செல்லும்.
புகையிலைப் பயன்பாட்டின் ஆபத்துகளை, குறிப்பாக இளைஞர்களிடையே எடுத்துரைக்க இந்த நாளை அர்ப்பணிப்பதன் மூலம், உலக புகையிலை எதிர்ப்பு தினம் புகையிலை பொருட்களைத் தயாரிப்பினைத் தடுப்பதையும் அவற்றுடன் பரிசோதனை செய்வதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.