மை வைத்த விரலும்... ரகளை செய்த செல்ஃபியும்!

memorable-voting-day
memorable-voting-day
Updated on
Kalki Strip
Kalki Strip

– ச. சத்தியபானு

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் வாக்குச்சாவடியில் நடந்த சுவாராஸ்யமான அனுபவம்! பற்றி கேட்டிருந்தோம். அதில் தேர்வான மூன்று சுவாரஸ்யமான கட்டுரைகளில் மூன்றாவது கட்டுரை இதோ…

வாக்களிப்பது என்பது நம் ஜனநாயகக் கடமைதான், ஆனால் அங்கு நடக்கும் சில சின்னச் சின்ன விஷயங்கள் அந்த நாளையே சுவாரஸ்யமாக்கிவிடும். அன்று காலை நான் வாக்குச்சாவடிக்குச் சென்றபோது நடந்த அந்த அனுபவம் இன்னும் என் சிரிப்பை வரவழைக்கிறது. அந்த "சீரியஸ்" வரிசை காலை 7 மணிக்கே சென்றாலும், எனக்கு முன்னால் ஒரு பெரிய வரிசை நின்றிருந்தது. எல்லோரும் கையில் ஆதார் கார்டுடன், ஏதோ ஒரு முக்கியமான போருக்குத் தயாராவதுபோல மிகவும் தீவிரமான முகபாவனையுடன் நின்றிருந்தார்கள்.

memorable-voting-day
ச. சத்தியபானு

அந்த அமைதியை ஒரு குட்டிப் பையன் உடைத்தான். தன் அப்பாவின் விரலைப் பிடித்துக்கொண்டு வந்தவன், அங்கிருந்த போலீஸ்காரரைப் பார்த்து, "அங்கிள், என் அப்பாக்கு மட்டும் ஏன் ப்ளூ இங்க் வைக்கிறீங்க? எனக்கு ரெட் இங்க் வைப்பீங்களா?" என்று கேட்டான். வரிசையில் இருந்த அத்தனை "சீரியஸ்" முகங்களிலும் ஒரு நொடியில் புன்னகை மலர்ந்தது. அந்த மர்மமான விரல்!

என் முறை வந்தது. அதிகாரி என் பெயரைச் சரிபார்த்துவிட்டு, இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்தார். அந்த 'நீல நிறப்பொட்டு' என் விரலில் பட்டதும், ஏதோ ஒரு பெரிய பதக்கம் வென்றது போன்ற பெருமை எனக்குள். ஆனால், சுவாரஸ்யம் அதற்குப் பிறகுதான்!

வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்தபோது, ஒரு பெரியவர் பதற்றமாக என்னிடம் ஓடி வந்தார். "ஏம்மா அந்த மிஷின்ல லைட் எரியும்போது சத்தம் வருமே... அது வந்தா ஓட்டு விழுந்துடுச்சுன்னு அர்த்தமா, இல்ல பட்டனை அமுக்கும்போதே விழுந்துடுமா?" நான் அவருக்குப் பொறுமையாக, "ஐயா, அந்த 'பீப்' சத்தம் வந்தால்தான் உங்கள் வாக்கு பதிவாகிவிட்டது என்று அர்த்தம்," என்று விளக்கினேன். அவர் நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டு, "நல்லவேளை... சத்தம் கேட்டுச்சு, நான்தான் பயந்துட்டேன்!" என்றார்.

இதையும் படியுங்கள்:
செங்குத்து புரட்சி: நவீன இளைஞர்களின் சாய்ஸ்!
memorable-voting-day

செல்ஃபி கலாட்டா வெளியே வந்ததும் பார்த்தால், பாதிப் பேர் வாக்களித்ததைவிட, அந்த மை வைத்த விரலோடு செல்ஃபி எடுப்பதில்தான் குறியாக இருந்தார்கள். நானும் விதிவிலக்கல்ல! வெவ்வேறு கோணங்களில் விரலைக் காட்டி ஒரு போட்டோ எடுத்துவிட்டுத் திரும்பும்போதுதான் கவனித்தேன். முன்னால் நின்ற ஒரு இளைஞர், ஆர்வக்கோளாறில் மை வைக்கும் முன்பே செல்ஃபி எடுக்க முயன்று, அதிகாரியிடம் "முதலில் ஓட்டுப் போடுப்பா, அப்புறம் போஸ் கொடுக்கலாம்" என்று திட்டு வாங்கிக் கொண்டிருந்தார்.

வாக்குச்சாவடி என்பது வெறும் ஓட்டுப் போடும் இடம் மட்டுமல்ல; நம் ஊர் மக்களை, அவர்களின் அப்பாவித்தனத்தை, உற்சாகத்தை ஒரே இடத்தில் பார்க்கும் ஒரு அழகான களம். அந்த நீல நிற மை காய்வதற்குள், என் மனதில் ஒரு திருப்தி—"நானும் ஒரு மாற்றத்திற்கு வித்திட்டுவிட்டேன்" என்று..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com