மனிதர்களின் வாழ்க்கையில் 'வளர்ச்சி அடைதல்' என்பதின் உண்மையான பொருள் என்ன?! பொதுவாக வளர்ச்சியைப் பற்றி குறிப்பிடும் போது, இப்படி மூன்று விதங்களாக சொல்வார்கள்.
முதலாவது, உடளவில் காணப்படும் வளர்ச்சி. இந்த உடல் ரீதியான வளர்ச்சி, நமது பிறப்பிலிருந்தே தொடங்கி விடுகிறது. அது நமது உடல் மீதான பரிணாம வளர்ச்சி, நமது மூளையினுடைய வளர்ச்சி, உணர்வுகள் சம்பந்தப்பட்ட புலன்கள், செயல்படுகிற திறமை மற்றும் உடல் நலத்தைப் பற்றியது.
இரண்டாவது பகுத்தறிவு மற்றும் தீர்க்கமான சிந்தனைகளை உள்ளடக்கிய அறிவாற்றலை அடிப்படையாக கொண்ட வளர்ச்சி. ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வது, நினைவு வைத்திருப்பது, விழிப்புணர்வோடு செயல்படுவது, பேசுகிற மொழிகளின் மீதான அறிவு மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனை மீதான மனதின் செயல்பாடுகளைப் பற்றியது.
மூன்றாவது உளவியலாக நடைபெறும் வளர்ச்சி. அது செய்ய வேண்டிய செயல்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, சீரமைத்து, தன்னிறைவை அடைவதைப் பற்றியது.
இந்த உளவியல் ரீதியிலான வளர்ச்சி என்பது, மனித வாழ்க்கை முழுவதும் தொடருகின்ற ஒரு செயலாகும்.
உளவியல் வளர்ச்சி என்பது மனிதர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எவ்வாறு, ஏன் வளர்கிறார்கள், மாறுகிறார்கள் மற்றும் மாற்றியமைக்கிறார்கள் என்பதற்கான அறிவியல் ஆய்வு ஆகும்.
சிறந்த தமிழ் அறிஞரும், பாடலாசிரியருமான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய பாடலில் வரும் வரிகள் போல,
"ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடுதான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி
தனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா"
இந்த வரிகளின் படியே வாழ்ந்து கட்டிய ஒரு மேதையின் சுயசரிதையைப் படித்தால், உண்மையான வளர்ச்சியைப்பற்றிய தெளிவை நாம் பெறமுடியும்.
எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன்,... படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டவன். தன் அம்மாவிடம் சென்று “அம்மா நான் படிக்கணும், அம்மா நான் படிக்கணும்.." என்று அடம் பிடிக்கிறான். கருப்பு இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பள்ளிப்படிப்பு மறுக்கப்பட்ட காலம் அது. ஆகையால், சிறுவனை அம்மாவால் பள்ளியில் சேர்க்க இயலவில்லை.
ஒரு நாள் அம்மாவின் தோழி ஒருவர், “சற்று தொலைவில் உள்ள நகரில் நம்மை போன்ற கருப்பு இனத்தைச் சேர்ந்தவர்களை ஒரு பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு நிபந்தனை. அரை நாள் படிக்க வேண்டும், அரை நாள் அந்தப் பள்ளியில் வேலை செய்ய வேண்டும்,” என்றார்.
இதைக் கேட்டவுடன் அம்மாவிடம் ஓடி வந்து, “அம்மா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன்” என்று கூறிவிட்டு, அம்மாவின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டான் சிறுவன்.
அந்த காலகட்டத்தில் இப்பொழுது இருப்பது போல் போக்குவரத்து வசதிகள் இல்லை. ஆனாலும் பள்ளியை நோக்கி நடந்து செல்கிறான். பள்ளியை அடைந்தவுடன் எல்லோரும் அங்கு சேர்க்கைக்காக வரிசையில் நின்று கொண்டே இருக்கிறார்கள்.
எல்லா குழந்தைகளும் அம்மா அல்லது அப்பாவுடன், இல்லையென்றால் இருவருடனும் சேர்ந்து வந்திருந்தனர். ஆனால் இந்தச் சிறுவன் தனியாக அந்த வரிசையில் நின்றிருந்தான்.
அவனது முறை வரும் போது தலைமை ஆசிரியர் மேலும் கீழுமாக அவனைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
“நான் படிக்க வேண்டும். என்னையும் இந்த பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள்” என்றான். “நிஜமாகவே நீ இந்த பள்ளியில் படிக்க வேண்டுமா? சரி அப்போது இந்த அறையை சுத்தம் செய்து காட்டு” எனக் கூறினார்.
சிறுவன் குடுகுடுவென ஓடிச்சென்று தனக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் எல்லோரிடமும் கேட்டு கேட்டுப் பெற்று, அந்த அறையை முழுவதுமாக சுத்தம் செய்தான்.
எடுத்த பொருள்களை எல்லாம் மீண்டும் அதே இடத்தில் சரியாக வைத்தான். பின்பு தலைமை ஆசிரியரிடம் சென்று “நான் வேலையை முடித்து விட்டேன்” என்றான். “அப்படியா! வா சென்று பார்க்கலாம்”, என சிறுவனை அழைத்துச் சென்றார் ஆசிரியர். தன் கையில் வைத்திருந்த வெண்ணிற கைக்குட்டையை எடுத்து மேசையின் அடிப்புறமாக துடைத்துப் பார்த்தார்.
வெண்ணிறம், வெண்ணிறமாகவே இருந்தது. சிறு அழுக்குகூட இல்லை. சுற்றிலும் பார்த்த தலைமையாசிரியர் ஆச்சரியமடைந்து,
“உன்னை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு,
“இவ்வளவு நன்றாக இந்த அறையை எப்படி சுத்தம் செய்தாய்?” என்று கேட்டார்.
அவனும் “நான் 3 முறை இந்த அறையை சுத்தம் செய்தேன். முதல் முறை நீங்கள் சுத்தம் செய்யச் சொன்னீர்களே என்பதற்காக சுத்தம் செய்தேன். நான் இந்தப் பள்ளியில் படிக்கப் போகின்றேன். எனக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள் இந்த அறையில் வந்து கல்வி கற்றுக் கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்காக இரண்டாவது முறை சுத்தம் செய்தேன். மூன்றாவது முறை ‘நான் புக்கர் வாஷிங்டன்’. நான் எதைச் செய்தாலும், இயன்ற வரை சிறப்பாகத்தான் செய்து கொடுப்பேன். அவ்வாறே இந்த அறையையும் சுத்தம் செய்தேன்” என்று கூறி முடித்தான்.
இந்த ஒரு குணம்தான் சிறுவன் புக்கர் வாஷிங்டனை பிற்காலத்தில் அமெரிக்காவின் மிகச்சிறந்த கல்வியாளராக மாற்றியது.
எந்தப் பள்ளியில் நீ சேருவதற்கு தகுதி இல்லை, உன்னை போன்றவர்கள் படிப்பதற்கே தகுதி இல்லை என்று உதைத்து தள்ளினார்களோ, அது போன்ற பள்ளிகளுக்கு எல்லாம் மேலாக அவரை போன்றவர்களுக்காக புக்கர் டி. வாஷிங்டன் 1881 இல் பள்ளியை நிறுவினார்; படிப்படியாக உயர்ந்த இந்தப் பள்ளி 1985 இல் பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது.
ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் உரிமைகள் அமைப்பின் தலைவராகவும் வாஷிங்டன் இருந்தார்.
வளர்ச்சி என்பது இதுதான். யாரெல்லாம் எனக்கு நிகராக நீ இருக்க முடியாது என்று ஓரம் கட்டினார்களோ, அவர்களுக்கு நிகராக இருக்க என்னால் முடியாது; ஆனால் அவர்களை விடவும் மேலே உயர என்னால் முடியும் என்று ஆணித்தரமாக உயர்ந்து காண்பித்த மேதையின் கதை.