திருமணமானவர்களுக்கு டிமென்ஷியா நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்! அதிர்ச்சி தரும் புதிய ஆய்வு!
சமீபத்திய அமெரிக்க ஆராய்ச்சி முடிவு ஒன்று, திருமணமான ஆண், பெண் இருவருக்கும் மூளை சம்பந்தமான நோய் பாதிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாகக் கூறுகின்றது. திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்கும் வாழ்க்கையில் இணைய வேண்டிய முக்கியமான தருணமாக இருக்கிறது. இன்றைய காலத்தில் இது போன்ற ஒரு செய்தி அவர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
பொதுவாக திருமணம் என்பது ஆண், பெண் இருவரும் இணைந்து தங்களது வாழ்க்கையை துவங்குவதைக் குறிக்கின்றது. திருமணம் தான் மனித வாழ்க்கையில் பூரண அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. இதனால் சமூகத்திற்கு நன்மைகள் விளைகின்றன. வருங்கால சந்ததிகள் உருவாகக் காரணமாக இது இருக்கிறது.
அதே நேரம், திருமணமான நபர்களை விட திருமணமாகாதவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்று பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
சமீபத்திய ஒரு ஆராய்ச்சி, திருமணமானவர்களுக்கு மத்தியில் தீவிர, மூளை பாதிப்பான டிமென்ஷியா உருவாகும் அபாயம் அதிகமாக இருக்கிறது என்று தகவல் தெரிவித்துள்ளது. டிமென்ஷியா என்பது ஒரு குறிப்பிட்ட மூளை நோய் அல்ல. அதே நேரம் பல நோய்கள் இந்த நிலையை உருவாக்கும்.
இது ஒருவரின் நினைவாற்றல், சிந்தனைகளைப் பாதிக்கும் அறிகுறிகளின் தொகுப்பைக் குறிப்பிடுகிறது. இந்த நிலை ஒரு நபரின் தினசரி வாழ்க்கையில் பலவித சிரமங்களை ஏற்படுத்துகிறது. இதன் முக்கிய அறிகுறியாக ஞாபக மறதி உள்ளது. வயதான நபர்களுக்கு இன்றைய காலக் கட்டத்தில் இந்த அறிகுறிகள் அதிகமாகவே தென்படுகின்றன.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் செலின் கராகோஸ் என்ற மருத்துவ நிபுணர் மற்றும் அவரது குழுவினர் டிமென்ஷியா நோய் குறித்த ஆய்வை நடத்தினார்கள். அமெரிக்காவை சேர்ந்த 24,000 முதியவர்களை பங்கு பெற வைத்து 18 ஆண்டுகள் வரை கண்காணித்து, ஒரு நீண்ட கால ஆய்வை நடத்தினார்கள்.
இந்த ஆய்வில் பங்கேற்ற முதியவர்களின் சராசரி வயது 72 ஆக இருந்துள்ளது. அவர்களை திருமணமானவர்கள், விவாகரத்து பெற்றவர்கள், துணையை இழந்தவர்கள், எப்போதும் திருமணம் செய்யாதவர்கள் என நான்கு குழுக்களாகப் பிரித்தனர்.
திருமணமான நபர்கள் உள்ள குழுவில் டிமென்ஷியா ஏற்படுவதற்கான அறிகுறிகள் அதிகமாக இருந்தது. எப்போதும் திருமணம் செய்யாதவர்கள் குழுவில் இருப்பவர்களை மற்ற குழுக்களுடன் ஒப்பிடும்போது டிமென்ஷியா உருவாகும் ஆபத்து 40% குறைவாக இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
விவாகரத்து பெற்ற நபர்களுக்கு 34% குறைவான ஆபத்து இருக்கிறது. அதே நேரத்தில் துணையை இழந்த குழுவினருக்கு 27% குறைவான ஆபத்து இருந்தது.
முந்தைய பொதுவான ஆய்வின் முடிவுகள் அனைத்தும் திருமணம் ஆன நபர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவே தெரிவித்து இருந்தன. புதிய ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திருமணமான நபர்களிடையே டிமென்ஷியா ஏற்படும் ஆபத்து பற்றிய தெளிவான காரணத்தை இந்த ஆய்வு கண்டுபிடிக்கவில்லை என்றாலும் சில சாத்தியக் கூறுகளை அறிந்துள்ளது.
முன்பு திருமணம் ஆனவர்கள் மன அழுத்தம் குறைவாக இருப்பவர்கள், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பவர்கள், அதனால் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று நம்பப்பட்டு வந்துள்ளது. அதே சமயம் சிலரின் திருமண வாழ்க்கை அழுத்தம் உள்ளதாக அமையலாம் என்ற வகையில் யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த அறிகுறிகள் அனைத்தும் 70 வயதுக்கு மேல் தான் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)