நகர்ந்து செல்வது போலத் தோன்றும் அதிசய மணல் மேடு - தேரிக்காட்டின் ரகசியங்கள்!

Theri Kaadu
Theri KaaduImg Credit: Pinterest
Published on

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் போது, குரும்பூருக்கு முன்னதாக வலது புறம் திரும்பி நாலுமாவடி, திசையன்விளை வழியாகச் சென்றால் தேரிக்காட்டை அடையலாம். தாமிரபரணி ஆற்றின் தென்கரைப் பகுதியில் கடம்பாகுளத்திற்கு தெற்கே, நாலுமாவடி, புதுக்குடி, சோனகன்விளை, நாதன்கிணறு, காயாமொழி, பரமன்குறிச்சி, நாசரேத் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தேரிக்காடு விரிந்து, பரந்து கிடக்கிறது. மன்னார் வளைகுடாவை நோக்கி தெற்கு, தென்கிழக்காக சற்றே சரிந்த நிலையில் காணப்படும் இந்த தேரிக்காட்டின் மொத்த பரப்பளவு 12 ஆயிரம் ஏக்கர் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.

கடல் மட்டத்தில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த தேரிக்காட்டில் உள்ள மணல் மேடு சில சமயம், கடல் மட்டத்தில் இருந்து 25 மீட்டர் உயரம் வரை உயர்ந்து விடும். ஒரு சமயம் உயரம் குறைவாக இருக்கும் இடம், காற்றின் போக்கு காரணமாக அடுத்த சில மணி நேரங்களில் பெரிய மணல் மேடாக மாறி விடும். அப்போது அந்த மணல் குன்றுகளே மெதுவாக இடம் மாறி நகர்ந்து செல்வது போலத் தோன்றும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அங்கே இருப்பது போன்ற செக்கச்செவேல் என்ற மணல் பகுதி, அந்த மாவட்டங்களின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை என்பது தான். அங்கு இருப்பது ஆற்று மணல் அல்ல. இதனால் அவை தாமிரபரணி நதியால் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவை அல்ல. அதே போல அவை கடல் மண்ணும் அல்ல. எனவே கடல் பொங்கி வந்து இந்த மணல் மேடு ஏற்பட்டது என்று சொல்வதற்கும் வாய்ப்பு இல்லை.

அப்படியானால் இந்த அதிசய மணல் மேடு எப்படித் தோன்றியது? வேறு எங்குமே இல்லாத வகையிலான மணல் எங்கு இருந்து எப்படி வந்தது? என்பது போன்ற வினாக்கள் இன்னும் விடைதெரியாத புதிராகவே இருக்கின்றன. ஏதோ ஒரு மிகப்பெரிய இயற்கை விளைவு நிகழ்ந்து, அதன் காரணமாக அந்தப் பகுதியில் மட்டும் தேரிக்காடு உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இப்படி ஒரு அதிசய பூமியை உருவாக்கிய அந்த இயற்கை நிகழ்வு என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது.

அங்குள்ள மணல் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, மணல் மூன்று அடுக்குகளாக இருப்பது தெரிய வந்தது. முதல் அடுக்கு 8 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தியது என்றும், அதன் மேல் உள்ள இரண்டாம் அடுக்கு, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், மேல் தளத்தில் உள்ள மணல் பகுதி, ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எனவே, தேரிக்காட்டின் மணலுக்கு அடியில், அந்தக் காலத்தில் புதையுண்ட நகரங்களின் எச்சங்கள் இருக்கலாம்.

அங்குள்ள மணலுக்கு அடியில் இறுக்கமான செந்நிற களிமண் பூமி தென்படுகிறது. தென் மேற்கு சுழல் காற்றால் அந்தப் பகுதியின் மணல் இடம் மாறுகிறது. அப்போது, அங்குள்ள மரங்கள், வயல்வெளிகள், ஏன், சில கிராமங்களைக் கூட கால ஓட்டத்தில் அந்த மணல் மூடிவிடுகிறது என்று அங்கே ஆய்வு நடத்திய பாதிரியார் கால்டுவெல் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
இந்தியர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்களா?
Theri Kaadu

இங்குள்ள மணல் மேடுகள் காற்றின் போக்குக்கு ஏற்ப இடம் மாறுவதால் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க, இந்தப் பகுதியில் பனை மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்ற கருத்தை 1848-ம் ஆண்டு அங்கு ஆங்கிலேய ஆட்சியின் கலெக்டராக இருந்த இ.பி. தாமஸ் என்பவர் முன் வைத்தார். அவரது முயற்சியால் தேரிக்காட்டில் ஏராளமான பனை மரங்கள் வளர்க்கப்பட்டன. நிறைய பனை மரங்களைக் கொண்ட குதிரைமொழி தேரி இப்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

தாமிரபரணி ஆற்று நாகரிகத்தைத் தேடிய போது, ஆதிச்சநல்லூர் போன்றே தாமிரபரணி ஆற்று நெடுகிலும் உள்ள வேறு சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதே போல தேரிக்காட்டிலும் அகழ்வாராய்ச்சி நடை பெற்றது. ஆதிச்சநல்லூர் போன்று மிகப் பெரிய அளவில் இல்லை என்றாலும், தேரிக்காட்டிலும் சில அபூர்வமான பொருட்கள் கிடைத்தன. சில இடங்களில் முதுமக்கள் தாழிகள் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. பாலைவனம் போல இருக்கும் தேரிக்காட்டுக்கு அருகே வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டவர்கள், இந்த தேரியில் தங்களது மூதாதையர்களின் உடலை தாழிகளில் வைத்து புதைத்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. அவை எந்தப்பகுதியில் வசித்தவர்களின் முதுமக்கள் தாழிகள் என்பது தெரியவில்லை. அங்கு இருந்த தாழிகளில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் மற்றும் இரும்பால் செய்யப்பட்ட கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்கள் ஆகியவையும் கிடைத்தன. எனவே ஆதிச்சநல்லூருக்கும், தேரிக்காட்டுக்கும் தொடர்பு இருந்தது என்ற விவரம் தெரிய வந்துள்ளது. இது பற்றி இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இதையும் படியுங்கள்:
தூய தமிழ் போயே போச்சு! எங்கும் எதிலும் 'தமிங்கிலம்' வந்தாச்சு!
Theri Kaadu

இந்த தேரிக்காட்டில் மற்றொரு அதிசயம், அந்தப் பாலைவனத்தில் ஒரு சோலையாக மேலப்புதுக்குடி என்ற இடத்தில் ஒரு சுனை இருக்கிறது. கோடை காலத்தில் கூட அந்த சுனையில் சுவையான தண்ணீர் கிடைக்கிறது. அந்த சுனையின் கரையில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில், கற்குவேல் அய்யனார் கோவில் போன்றவை புகழ் பெற்றதாகும்.                                                   

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com