

பணமே உனக்குத்தான்
பாரினிலே எத்தனைபெயர்!
பாதாளத்துக்குள்ளும் பாயும்
பலசாலி நீயன்றோ!
ஒருபக்கம் உழைக்கவைத்து
மறுபக்கம் படுக்கவைத்து…
உழைப்பையும் உதவாத
சோம்பேறித் தனத்தையும்
ஒன்றாக ஊக்குவித்து
இரண்டுக்கும் பாலமாய்
இருப்பவன் நீதானே?
உலகத்தை ஆட்டுவிக்கும்
ஒருவனென்றும் நீயல்லவா?
வஞ்சிதனைக் கைப்பிடிக்கும்
வாலிபனின் கரத்தினிலே
நீயிருக்கும் போதினிலே
நிந்தன்பெயர் வரதட்சணை! (Dowry)
தெய்வ அருள்பெறவே
தெய்வீகச் சன்னதியில்
கற்பூரத்தட்டினிலும் கவினான உண்டியலிலும்
கவிழும்நீயோ காணிக்கை! (Offering)
கல்விக் கூடத்தில்
காசே நீயுந்தான்
கட்டணம் ஆகின்றாய்! (Fee)
கண்ணடித்துக் காதலித்து
கல்யாணமும் செய்துபின்னர்
வேண்டாம் என்றுசொல்லி
வெறுத்தே பிரிகையிலே
ஜீவிக்கும் பெண்கையில்
ஜீவனாம்சமாய் உருளுகின்றாய்! (Alimony)
நீதிமன்றப் படியேறி
நீதிக்குத் தலைவணங்கி
உன்னைச் செலுத்துகையில்
அபராதமென்றே அழைக்கப்படுகின்றாய்! (Fine)
செல்வர்கள் வீட்டுச்
சிங்காரக் குழந்தைகள்
கடத்தப்பட்டுக் கவலையளிக்கையில்
விடுவிக்கும்நீயோ மீட்புத்தொகையாகிறாய்! (Ransom)
பணியிலிருக்கும் பணியாளர்களுக்கு
சம்பளமாய் சந்தோஷமளிக்கும்நீ (Salary)
ஓய்வில் அவர்களுக்கு
ஓய்வூதியமாகி உதவுகிறாய்! (Pension)
அதிகம் சம்பாதிக்கும்
அத்தனை பேரும்
அரசுக்கு உன்னைச்செலுத்துகையில்
வரியெனவே நாமம்தரிக்கிறாய்! (Tax)
அவசரச்செலவுக்கு அடுத்தவரிடமிருந்தோ
அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலிருந்தோ
கைமாறுகையில் கடன்ஆகின்றாய்! (Loan)
சேவை செய்வோருக்குச்
சிறப்பு செய்கையில்
'டிப்'ஆகி டீக்காய்நிற்கிறாய்! (Tips)
முதலாளி தொழிலாளின்கையில்
கொடுக்கும்போது கூலிஆகிறாய்! (Wages)
நல்லவிதமாய் நாம்சேர்த்ததை
நலப்பணிகள்செய்திட அளித்திடும்போது
நன்கொடை என்பதே அதனின் நாமம்! (Donation)
பணமே உனக்குத்தான்
பாரினிலே எத்தனைபெயர்!
இத்தனைக்கும் மேலே
இன்னும் பலவுண்டு!
கணக்கைச் சரியாகக்
காட்டாமல் வரிசெலுத்தாமல்
உன்னை வைத்திருந்தால்
உன்பெயர் கறுப்புப்பணம்! (Black Money)
குறுக்கு வழியினிலே
விரும்பியதை அடைந்திடவே
உதவும்நீயோ லஞ்சம்! (Bribe)
எழுத்தாளர் பலருக்குப்
பத்திரிகைகள் பலவும்
தந்துதவுவதோ சன்மானம்! (Reward)
காசே நீயும்
கவினான உலகினிலே
நாமங்கள் பலவேற்று
நல்லதையும் செய்கின்றாய்!
நலிவுறவும் உதவுகின்றாய்!