புத்தகத்தை வைத்துப் பணம் பெற்ற இளைஞன்! யார்? எங்கே? எதற்கு?

அரிதான பொக்கிஷங்களும் கிடைக்கும் பழைய புத்தகக் கடையில்... பொக்கிஷங்கள் என்று சொல்லப்படும் அச்சில் இல்லாத பல புத்தகங்கள் கிடைக்கும் ஒரே இடமாகச் சாலையோரம் அமைந்துள்ள பழைய புத்தகக் கடைகள் திகழ்கின்றன.
old books in a store
books
Published on
Kalki Strip
Kalki Strip

மாமேதைகளான புத்தக வாசிப்பாளர்கள் பலரின் வாழ்வில் நூலகங்கள் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக இருந்ததோ அதே போல, பழைய புத்தகக் கடைகளில் வாங்கிய புத்தகங்களும் அவர்கள் வாழ்வில் உயர உதவியாக இருந்தது என்று சொல்லலாம். பழைய புத்தகக் கடையில் சிதறி கிடக்கும் புத்தகத்தைத் தேடி பிடித்து “அட! இவ்வளவு வருஷம் இந்தப் புத்தகத்தை தான் தேடிட்டு இருந்தேன். இன்னைக்குக் கிடைச்சிருச்சி” என்று முகத்தில் மகிழ்ச்சி அலை பொங்க சொல்லும் பலரை நான் கண்டுள்ளேன்.

பொக்கிஷங்கள் என்று சொல்லப்படும் அச்சில் இல்லாத பல புத்தகங்கள் கிடைக்கும் ஒரே இடமாகச் சாலையோரம் அமைந்துள்ள பழைய புத்தகக் கடைகள் திகழ்கின்றன. வசதியில்லதோர் தொடங்கி நடுத்தர மக்கள் வரை பழைய புத்தகக் கடையை நாடாதவர்கள் எவருமில்லை. கையில் பணமில்லாததால் வாங்க தவறிய புத்தகங்கள், நடப்பிலுள்ள இதழ்கள், அநேகமாக இன்று காணமால் போன Home Magazines என்று சொல்லப்படும் பல விதமான இதழ்கள் மற்றும் வரலாறு சம்பந்தப்பட்ட பல புத்தகங்களை மலிவு விலையில் பழைய புத்தகக் கடைகளில் வாங்கிப் படித்து மகிழலாம்.

அப்படியாகப் பலரின் தேவையைப் புரிந்து கொண்டு அனைவருக்கும் பல அரிய புத்தகங்கள் கிடைக்குமாறு குறைந்த விலையில் விற்கப்படும் பழைய புத்தகக் கடைகளை ‘புதையல் சுரங்கம்’ என்று சொன்னால் மிகையாகாது.

எழுத்தாளர்கள் பெரும்பாலும் பழைய புத்தகக் கடைகளைக் குறித்த அனுபவங்களை எழுதுவதில்லை. பிரபஞ்சன் அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி நடைபாதை புத்தகக் கடைகளைக் குறித்து எழுதியுள்ளார். பல்வேறு ஊர்களில் தான் வாங்கிய பழைய அரிய புத்தகங்களையும், பழைய புத்தகக் கடைகளின் உலகையும் குறித்து வீடில்லாத புத்தகங்கள் என்ற கட்டுரை தொகுப்பை எஸ்.ரா அவர்கள் எழுதியுள்ளார். சிலர் போகிற போக்கில் ஓரளவு குறிப்பிட்டுள்ளார்கள்.

விட்டல் ராவ் அவர்கள் பழைய புத்தகக் கடைக்காரர்களின் குணாதிசயங்களையும், தான் பழைய புத்தகங்களை எப்படிச் சேகரித்தேன் என்பதையும், இலக்கிய இதழ்களின் முக்கியத்துவம் குறித்தும் தனது ‘வாழ்வின் சில உன்னதங்கள்’ என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.

தந்தைக்கும் பழைய புத்தகக் கடைக்காரருக்கும் இடையே இருந்த நட்பை உணர்ச்சிப் பொங்க குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மூர் மார்க்கெட்டில் அமைந்துள்ள பழைய புத்தகக் கடைகள் தீக்கிரையானதை பற்றியும், பழைய புத்தக வியாபாரிகளிடையே ஒரு தங்கச் சுரங்கைத்தை கட்டி மேய்ப்பதற்கான பாவனை அவர்களே அறியாமல் அவர்களிடத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றும், வெளியீட்டு விழா முடிந்த ஒரு சில மணி நேரங்களில் பழைய புத்தகக் கடைகளுக்கு வந்து சேர்ந்த புத்தம் புதிய சூடு தணியாத புத்தகங்களை எல்லாம், பார்த்து தான் வியந்த சம்பவங்கள் உண்டு என்பது போன்ற பழைய புத்தகக் கடையைப் பற்றிய பல சுவாரசியமான விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.

வரலாற்றின் பக்கங்களில் பழைய புத்தகக்கடைகளும், கடைக்காரர்களும் தனது தடத்தைப் பதித்திருக்கிறார்கள். அதில் சுவாரசியமான ஒரு தகவலை இங்குப் பார்ப்போம்.

1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் Madras Institute of Technology இல் படித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனை தவிர அவனின் நண்பர்கள் அனைவரும் விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டார்கள். தேர்வுக்கு ஒரு பாடம் படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்ததால் அந்த இளைஞன் மட்டும் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் ஊரில் புயல் தாக்கி விட்டதாகவும், பெற்றோர்கள் உடனே தன்னைப் பார்க்க விரும்புவதாகவும் இளைஞனுக்கு தகவல் வருகிறது. மனம் இறுப்புக் கொள்ளவில்லை. உடனே ஊருக்கு செல்ல மனம் துடித்தது. டிசம்பர் மாத கடைசி ஆனபடியால் ஊருக்கு செல்ல பணமில்லை. எப்படியாகச் செல்ல வேண்டும் என்று மனமும் கூறுகிறது.

அப்பொழுது இளைஞனிடம் இருந்த ஒரே சொத்து அவன் விரும்பி படிக்கும் புத்தகம் மட்டுமே. அந்தப் புத்தகம் மெட்ராஸ் பல்கலை கழகத்தின் துணைவேந்தர் லட்சுமணசாமி முதலியார் அவர்களால் அவன் சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசாகக் கிடைத்த புத்தகமாகும். அப்போது அந்தப் புத்தகத்தின் விலை 400. வேறு வழியில்லை. தான் விரும்பி படிக்கும் புத்தகம், எளிதாகக் கிடைக்காத திரும்ப வாங்க முடியாத புத்தகம், அதுவும் துணை வேந்தர் அவர்களால் பரிசாகக் கிடைத்த புத்தகம். அதை விற்று கிடைக்கும் பணத்தில் தான் ஊருக்கு செல்ல வேண்டிய நிலைமை அந்த இளைஞனுக்கு.

மன வருத்ததோடு அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு மூர் மார்க்கெட்டில் அமைந்துள்ள பழைய புத்தகக் கடைக்குச் சென்றான். அங்கே ஒரு கடையில் இருந்த கடைக்காரரான பெரியவரிடம் இந்தப் புத்தகததை வைத்துக் கொண்டு பணம் கொடுங்கள் என்று கேட்டான். அந்த இளைஞனின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்து விட்டுப் புத்தகத்தைக் கையில் வாங்கிப் பார்த்தார்.

இதையும் படியுங்கள்:
இடி இடிக்கும்போது ‘அர்ஜுனா’ என்று சொல்வதன் ரகசியம்: மூடநம்பிக்கையல்ல, அறிவியல் அதிசயம்!
old books in a store

உடனே அந்தக் கடைக்காரர் “நீ படிக்கும் புத்தகத்தை வைத்துப் பணம் வாங்குகிறாயே ஏன்? ஏதாவது அவசரமா” என்று கேட்டார்.

இளைஞன் தனது சூழ்நிலையைக் கூறினான். அவர் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டதற்கு ஊருக்கு செல்ல உடனடியாக 60 தேவை என்றான்.

“இந்தப் புத்தகம் இங்கேயே இருக்கும். நான் எவருக்கும் விற்க மாட்டேன். நான் பணம் தருகிறேன். நீ போய்விட்டு வந்து பணத்தைத் திருப்பிக் கொடுத்துப் புத்தகத்தைப் பெற்றுக் கொள்” என்று சொன்னார் அந்தக் கடைக்காரர்.

அந்த வார்த்தை இளைஞனுக்கு ஆதரவாக இருந்தது. கடைக்காரர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு ஊருக்கு சென்ற இளைஞன், திரும்பி சென்னைக்கு வந்ததும் பெற்றோர் கொடுத்த பணத்தைப் பெரியவரிடம் கொடுத்துப் புத்தகத்தை வாங்கிக் கொண்டான்.

அப்போது அந்தக் கடைக்காரர் “உன்னைப் பார்த்ததும் புத்தகத்தின் மீது உனக்கிருக்கும் பற்றைத் தெரிந்து கொண்டேன். எனவே தான் இதைத் தனியாக எடுத்து வைத்திருந்தேன். நீ படித்து நன்றாக வர வேண்டும்” என்று வாழ்த்தினார்.

இதையும் படியுங்கள்:
பண்டிகைகளின் மகத்துவம்: இன்றைய தலைமுறை ஏன் இதை அறிய வேண்டும்?
old books in a store

இளைஞனே பின்னாளில் “அந்த ஒற்றைப் புத்தகம் தான் என்னை அணு விஞ்ஞானியாக்கியது. நான் அணு விஞ்ஞானியானதால் தான் ஜனாதிபதி ஆனேன்” என்றார். அந்த இளைஞன் தான் உலகமே போற்றுகிற விஞ்ஞானி, இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் ஆவார்.

இப்படியாகப் பலரின் வாழ்க்கையில் பழைய புத்தகக் கடைகள் முக்கியப் பங்கை வகித்திருக்கின்றன. புதையல் சுரங்கமாகச் சாலையோரம் இருக்கும் பழைய புத்தகக் கடைகளுக்கும், கடைக்காரர்களுக்கும் அனைவரின் சார்பாக என் ராயல் சல்யூட்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com