

இன்றைய இசை சிம்பொனிகள் முதல் எலக்ட்ரானிக் நடன இசை வரை கிட்டத்தட்ட 1,200-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட இசை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் உலகளவில் ஒவ்வொரு கலாச்சார இசையும் ஒரு தனித்துவத்தைப் பெற்றுள்ளது. ஆப்பிரிக்க டிரம்மிங், இந்திய ராகங்கள், லத்தீன் சல்சா மற்றும் மேற்கத்திய ஜாஸ் போன்ற எண்ணற்ற வகைகளில் கொட்டிக்கிடக்கிறது. இதில் பெரும்பாலான இசை வகைகள் கலை அல்லது பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகப் பயன்பட்டாலும்; சில இசைகள் மனித ஆரோக்கியத்தில் பல நல்ல தாக்கத்தைத் தருவதாக அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
ஆரோக்கியத்திற்கு உதவும் இசை வகைகள் (Music Therapy) என்ன?
கிளாசிக்கல் இசை:
மன அழுத்தம் குறைத்தல், ரத்த அழுத்தம் குறைத்தல், கவனத்தை மேம்படுத்துதல் போன்ற நிரூபிக்கப்பட்ட பலன்களின் காரணமாக இது முதலிடத்தில் உள்ளது. அதில் மொஸார்ட் (Mozart), பாக் (Bach) போன்ற ஐரோப்பிய இசையமைப்பாளர்களால் உருவான இசைகள் மூளைச் செயல்பாட்டைத் தூண்டி நினைவாற்றலை மேம்படுத்துவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
சூழல்/கருவி இசை (Ambient/Instrumental):
மனிதர்களை அமைதிப்படுத்தும் விஷயங்களுக்காக அறியப்படும் இந்த வகையான சூழல் இசைகள்; தியானம், சில சிகிச்சை நேரங்களில் பதட்டத்தைக் குறைக்கவும், உறக்கத்தை மேம்படுத்தவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பாரம்பரிய நாட்டுப்புற, பழங்குடி இசை:
கலாச்சார சடங்குகளில் வேரூன்றிய இந்த இசை வகைகள் பெரும்பாலும் திரும்பத் திரும்ப வரும் தாளங்களையும், வரிகளையும் பயன்படுத்துகின்றன. இவை உடல் தளர்வையும். சமூகப் பிணைப்பையும் ஊக்குவித்து; மறைமுகமாக மன ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கின்றன.
ஜாஸ் (Jazz):
இந்த இசை ஒருவரின் படைப்பாற்றலையும், உணர்ச்சி வெளிப்பாட்டையும் தூண்டி மன நிலையைச் சீராக்க உதவுகிறது.
ரெக்கே (Reggae):
சீரான தாளங்கள், உற்சாகமூட்டும் பாடல் வரிகளுடன் வரும் ரெக்கே இசையானது மன அழுத்தத்தைக் குறைத்து சமூகப் பிணைப்பை மேம்படுத்துகிறது.
எங்கெங்கெல்லாம் இவை பிரபலமாக இருக்கின்றன?
கிளாசிக்கல் இசை ஐரோப்பா முழுவதும் குறிப்பாக ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலியில் பிரபலமாக இருக்கிறது, அங்கு அது கச்சேரி அரங்குகளில் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. ஜப்பான், ஸ்காண்டிநேவியா (Scandinavia), அமெரிக்கா, இந்தியா போன்ற பல நாடுகளில் இந்த சூழல் இசை (Ambient) பெரிதும் வரவேற்கப்படுகிறது. ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் தென் அமெரிக்காவின் கிராமப்புற பகுதிகளில் இந்த நாட்டுப்புற இசைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன; அவை அன்றாட சடங்குகள் மற்றும் திருவிழாக்களில் பின்னிப் பிணைந்துள்ளன. ஜாஸ் இசை அமெரிக்காவில் குறிப்பாக நியூ ஆர்லியன்ஸில் (New Orleans) ஒரு அடையாள அந்தஸ்தைப் பெற்றுள்ளது; அதே நேரத்தில் பிரான்ஸ், ஜப்பானிலும் ஒரு வலுவான ஆதரவைப் பெற்றுள்ளது.
இந்த இசை வகைகள் ஏன் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன?
இந்த இசைகள் மூலம் நம் உணர்ச்சிகள் ஒழுங்குபடுத்தப்படுகிறது, மூளை செயல்பாட்டை நல்ல நிலையில் வைக்கிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. காரணம் மெதுவான தாளம், அதன் இசை இணக்கக் கட்டமைப்புகள் (harmonic structures) மற்றும் அந்த இசை பிறந்த கலாச்சார ரீதியான புரிதல்; மனிதருக்குள் மிக வலிமையான சிகிச்சை விளைவுகளை வழங்க முனைகின்றன. இதனால் உலகில் இசையை ஒரு செலவு குறைந்த கருவியாக அங்கீகரித்து அரசாங்கங்களும், பல நல்வாழ்வு அமைப்புகளும் இந்த இசையை அவரவர்களின் சுகாதார அமைப்புகளில் அதிகளவில் நிறுவி வருகின்றன.