மயிலாப்பூர் குறிப்பாக கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள வடக்கு மாட வீதியில் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. பண்டிகை காலங்களில் இங்கு கொலு பொம்மைக் கடைகள் அமைக்கப்பட்டு பாரம்பரியமான மற்றும் அழகிய பொம்மைகள் விற்கப்படுகின்றன. ரூபாய் 100ல் தொடங்கி நம் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் பொம்மைகள் இங்கு கிடைக்கின்றன.
மாநிலத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பொம்மைகள் விற்கப்பட்டாலும், சென்னையைப் பொறுத்தவரை மக்கள் பாரம்பரியம் நிறைந்த மயிலாப்பூர் பகுதியிலிருந்து அவற்றை வாங்க விரும்புவார்கள். ஆயிரக்கணக்கான பொம்மைகள், நூற்றுக்கணக்கான சாலையோரக் கடைகளில் கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றி உள்ள மாட வீதிகளில் விற்கப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
நவராத்திரி நெருங்கி வந்துவிட்ட நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை விநாயகர் சதுர்த்தியை ஒட்டியே மெள்ள மெள்ள துவங்கி விட்டது. இப்பொழுது முழு வீச்சில் தெருவை அடைத்துக் கொண்டு பொம்மைக் கடைகள் பெருகிவிட்டது. ஏற்கனவே மயிலாப்பூர் பரபரப்பான மக்கள் நடமாட்டத்திற்கு பெயர் பெற்றது. நவராத்திரி நெருங்கி வரும் இந்த சமயத்தில் பெருகி வரும் கூட்டத்தை கேட்கத்தான் வேண்டுமா?
பாரம்பரிய பொம்மைகள்:
நவராத்திரி பண்டிகை காலத்தின் பொழுது மட்டுமே இந்த சிறப்பான தற்காலிக தெரு பொம்மைக் கடைகள் அமைக்கப்படும். ஆழ்வார்கள், நாயன்மார்கள், அஷ்டலட்சுமிகள், தசாவதார தொகுப்பு, பிரம்மாண்டமான பத்து தலைகளுடன் கூடிய ராவணன், ராமர் என பல்வேறு வகையான கடவுள் பொம்மைகள் கண்களையும் கருத்தையும் கவரும் விதத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
காகித கூழ், மணல், மரம் போன்ற பல்வேறு பொருட்களில் தயாரிக்கப்பட்ட இந்த பொம்மைகளை மக்கள் ஆர்வமுடன் நின்று பார்ப்பதுடன் இல்லாமல் வாங்கியும் செல்கின்றனர். பொம்மைகள் 100 ரூபாயில் தொடங்கி 18,000 வரை விற்கப்படுகின்றன.
அமோக விற்பனையில் மஞ்சள் குங்கும செட்:
விஜயா ஸ்டோர்ஸ் சீப்பு, கண்ணாடி, மஞ்சள், குங்குமம் செட் வாங்கவும், சின்னச் சின்ன பரிசு பொருட்களை வாங்கவும் வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிகிறது. கொலுப்படிகளும், ஸ்டாண்டுகளும் கூட கிடைக்கின்றன.
மளிகைக் கடையில் பருப்பு வகைகள் அமோகமாக விற்பனையாகின்றன. என்ன முழிக்கிறீர்கள்? தினம் தினம் சுண்டல் செய்ய வேண்டும் அல்லவா?
அன்றாட நிகழ்வுகள் கூட பொம்மையில்:
டீக்கடை, பானி பூரி செட், பஞ்சு மிட்டாய் போன்ற அன்றாட வாழ்க்கையை சித்தரிக்கும் பொம்மைகள் அனைவரையும் கவர்கின்றது. தற்போதைய டிரெண்டுகளுக்கு ஏற்ப Pokemon, JJ & Mikey, டாம் & ஜெர்ரி போன்ற கார்ட்டூன் பொம்மைகளும் கிடைக்கின்றன. வித்தியாசமான படைப்பான நிஞ்ஜா ஹட்டோரி 300 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இது வேகமாக விற்று தீர்ந்து விடுவதாக சொல்கின்றனர். ஆப்பிரிக்க பழங்குடி பொம்மைகள் அசத்தலாக இருந்தது.
நீங்கள் பொம்மைகளை வாங்க விரும்பினாலும், விரும்பா விட்டாலும் இந்தப் பகுதிக்கு உல்லாசமாக சென்று வருவது சுவாரஸ்யம் நிரம்பியதாக இருக்கும். கடைகளா அல்லது கடல் அலைகளா என்று வியக்க வைக்கும் அளவில் எல்லாவிதமான பொம்மைகளும் இங்கு கிடைக்கின்றன. தயவுசெய்து மிஸ் பண்ணி விடாதீர்கள்! ஒரு ரவுண்ட் போயிட்டு வாருங்கள்.