அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்! அதிரடியாக உயர்ந்த தேங்காய் எண்ணெய் விலை..!
தேங்காய் எண்ணெய் என்பது முற்றிய தேங்காயிலிருந்து எடுக்கப்படும் ஒரு எண்ணெயாகும். இது சருமத்திற்கு ஈரப்பதம் அளிப்பது, தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் சமையலில் பயன்படுத்துவது என பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. தேங்காய் எண்ணெயில் செறிவூட்டப்பட்ட கொழுப்பு சத்து அதிகமுள்ளது, மேலும் இது ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் கொண்டுள்ளது.
கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றே தேங்காய் எண்ணெயும் சமையலில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. தற்போது தேங்காய் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.
இதன் மூலப்பொருளான கொப்பரை தேங்காய் விலை ஒரு கிலோ ரூ.280 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண தேங்காய் விலையும் உயர்ந்து வருகிறது. உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு காரணமாக இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், நடப்பாண்டு தேங்காய் சீசனில் விளைச்சல் குறைந்தது. வழக்கத்தை விட, 40 சதவீதம் உற்பத்தி குறைந்ததால், தேங்காய், கொப்பரை விலை உயர்ந்தது.
புதுவையில் கடந்த மாதம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ.300-க்கு விற்பனையானது. இந்த விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் ரூ.570-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேங்காய் எண்ணெய் விலை உயர்வின் காரணமாக, வாழைப்பழம் சிப்ஸ் போன்ற பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, இந்தாண்டின் மத்தியில், கேரளாவில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் 529 ரூபாய் என்ற விலையை எட்டியது மற்றும் சில பிராண்டுகள் 600 ரூபாயையும் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து புதுச்சேரி மளிகை கடைக்காரரிடம் கேட்டபோது, கொப்பரைத் தேங்காய்க்கான தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை உயர்வு ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று கூறினார். மேலும் பலரும் கொப்பரை உற்பத்தி செய்யாததால், கொப்பரை உலர் களங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. பண்டிகைக் காலங்கள் நெருங்குவதால், தேங்காய் எண்ணெய் தேவை அதிகரித்து விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அடுத்தாண்டு மார்ச் மாதம் தான் தேங்காய் சீசன் துவங்கும். அதுவரை விலை குறைய வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.
நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதுடன், தேங்காயின் விலையும் அதிகரித்து வருவதால் அதனுடன் சேர்ந்து தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரிக்கும் என்பதால் பண்டிகை காலத்தில் பலகாரங்கள் செய்யும் போது இந்த விலை உயர்வு பட்ஜெட்டை பதம் பார்க்கும் என்பதால் இல்லத்தரிசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.