தொழிலாள தோழர்களுக்காக உழைத்த சிந்தனை சிற்பி சிங்கார வேலர்

Singaravelar
Singaravelar
Published on

தேசபக்தி, பொதுவுடைமை, மனிதாபிமானம் கொண்ட தென்னகத்தின் முதல் பொதுவுடைமைவாதி, முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர், சுயமரியாதை இயக்கச் சிந்தனையாளர் என்ற பன்முக ஆளுமை கொண்ட ம.சிங்காரவேலர், சிறந்த விடுதலை போராட்ட வீரரும் கூட.

சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. இருந்தாலும் பொருளாதார ரீதியாக வசதியான குடும்பம். இதனால் தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் புலமை இருந்தது. வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும், ஏழைகள் பற்றியே அவரது மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது.

சுதந்திரத்தீ பற்றி எரிந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவர் இருந்ததால் இயல்பாகவே அவருக்கு காங்கிரஸ் மீது ஈடுபாடு வந்தது. சிங்காரவேலர் இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு காந்தியைத் தன் தலைவராக ஏற்று 1917-ல் காங்கிரஸில் உறுப்பினரானார். தேச விடுதலைப் போராட்டங்களிலும் சமூக சேவைகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

1919-ல் ஒத்துழையாமை இயக்கத்தின்போது ஒரு பொதுக் கூட்ட மேடையில் தன்னுடைய வக்கீல் கவுனை தீயிலிட்டுக் கொளுத்தி, "நாட்டு மக்களுக்காக என்னுடைய வக்கீல் தொழிலை துறக்கிறேன்" என்று பகிரங்கமாக அறிவித்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டங்களையும் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலங்களையும் நடத்தினார்.

1918-ல் சென்னை தொழிலாளர் சங்கத்தை துவங்கினார் ம.சிங்காரவேலர். இதுவே இந்தியாவின் முதல் தொழிற்சங்கம். காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட சிங்காரவேலர், கிராமம் கிராமமாக சென்று ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற உழைத்தார்.1922-ல் கயாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்று முழுவிடுதலை பற்றிப் பேசினார். சுதந்திர போராட்டத்தில் தொழிலாளர்களையும் இணைத்து போராட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவில், ஏன் ஆசியாவிலே 1923 ம் ஆண்டு மே 1 அன்று "உழைப்பாளர் தினம் " சென்னையில் முதல் முறையாக கொண்டாப்பட்டது. அன்று சென்னை திருவல்லிக்கேணியிலும், உயர் நீதிமன்றம் அருகிலும் பொதுக் கூட்டங்கள் நடத்தினார். "விவசாய தொழிலாளர்கள் கட்சி"என்று புதிய கட்சியை ஆரம்பித்தார் சிங்காரவேலர்.

1925 ம் ஆண்டு சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகமானது. அவர் நகரசபையின் உறுப்பினராக பணியாற்றிய போது அவர் பரிந்துரைத்து அறிமுகமான திட்டம் அது. மாமன்ற உறுப்பினர்கள் தமிழில் தான் பதவி பிரமாணம் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தன்னுடைய திரளான சொத்துக்களை தேசமெங்கும் பரவிக் கிடந்த தொழிலாள தோழர்களுக்காக வாரி இறைத்தார். தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதியாக கருதப்படும் சிங்காரவேலர் தொழிற்சங்கவாதியாக மே தினத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் மட்டும் அல்ல மே தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும் போராடியவர். தனது சிந்தனைகள் தொடர்பாக பிரபஞ்ச பிரச்னைகள், மூட நம்பிக்கைகளின் கொடுமை, மனிதனும் பிரபஞ்சமும் போன்ற நூல்களையும் எழுதி உள்ளார்.

சிங்கார வேலருக்கு அவரது சமகால தலைவர்களோடு நல்ல நட்பு இருந்தது. மகாத்மா காந்தி, மூதறிஞர் ராஜாஜி, திரு.வி.க, அண்ணல் அம்பேத்கர் போன்றோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அந்தத் தொடர்புகளின் மூலம் சோஷலிசத்தை நாடெங்கும் பரப்பும் பணியில் தீவிரம் காட்டினார். ரஷ்ய தலைவர் ஸ்டாலினோடு இவருக்கு கடிதத் தொடர்பு இருந்தது.

கம்யுனிச அரசு எப்படி செயல்படுகிறது என்பதை கண்டறிய ரஷ்ய நாட்டின் விருந்தினராக தந்தை பெரியாரை அனுப்பி வைத்ததும் சிங்கார வேலர் தான்.அந்த நேரத்தில் பெரியாரின் குடியரசு பத்திரிகையை பார்த்து கொண்டது சிங்கார வேலர் தான்.

இதையும் படியுங்கள்:
நீரின் மேற்பரப்பில் நடக்கவும், ஓடவும், மிதக்கவும் கூடிய 7 அபூர்வ உயிரினங்கள்... இயற்கையின் அற்புத படைப்பு!
Singaravelar

சிங்காரவேலர் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய மே தினத்தை போற்றும் வகையில் தான், சென்னை கடற்கரையில் முதல் முறையாக அவர் மே தின பொதுக் கூட்டம் நடத்திய இடத்திற்கு அருகில் 'உழைப்பாளர் சிலை' நிறுவப்பட்டது.1959 ம் ஆண்டு குடியரசு தினத்தன்று உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது. இதை வடிவமைத்தவர் தேபி பிரசாத் ராய் சென்னை ஓவியக் கல்லூரியில் முதல் முதல்வர்.

தமிழர்களுக்கும் , இந்தியத் தொழிலாளர்கள் நலனுக்கும் போராடிய சிங்காரவேலர் தன் 84 வயதில் 1946-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி சென்னையில் காலமானார். பின்னர் தொடங்கப்பட்ட மீனவர் வீட்டு வசதி திட்டத்திற்கு இவரது பெயரே சூட்டப்பட்டது. சிங்காரவேலரின் நினைவைப் போற்றும் விதமாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவர் பெயரைத்தான் ஆட்சியாளர்கள் இன்று சூட்டியுள்ளனர். சென்னை ராயபுரத்தில் சிங்காரவேலர் மணிமண்டபம் அமைந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
8 வடிவ நடைபயிற்சி... Gen Z-கான சிம்பிள் உடற்பயிற்சி!
Singaravelar

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com