

விடுமுறையை கொண்டாட்டமாய் கழிப்பதில் ஜெர்மானியர்களை விஞ்ச முடியாது. ஆனால் அவர்களே மூக்கில் மீது விரல் வைத்து ஆச்சரியமாய் பார்க்கும் வகையில் அமைந்தது கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நூர்ன்பெர்க் தமிழ் சங்கத்தின் தீபாவளித் திருவிழா.
ஜெர்மனியின் நூர்ன்பெர்க் நகரில் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டம் முதல் சென்னை வரையிலும் உள்ள அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து உற்சாகமாய் கொண்டாடிய திருவிழா அது.
கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழ் சங்கம் மூலம் பொங்கல், தமிழ் புத்தாண்டு, பள்ளி ஆண்டு விழா என நம் திருவிழாக்களை உற்சாகமாக கொண்டாடி மகிழும் நம் தமிழ் மக்கள், இந்த வருட தீபாவளியையும் சந்தோஷமாய் கொண்டாடி அசத்திவிட்டார்கள்.
இலையுதிர் காலமான இந்த நவம்பர் மாதத்தில் ஜெர்மனி மரங்களின் இலைகள் பச்சை, மஞ்சள், சிவப்பு என பல வண்ணங்களில் கண்களுக்கு விருந்து படைக்கும். அதுபோல தீபாவளி கொண்டாட்டத்திற்காக அரங்கிற்கு வந்திருந்த மக்களும் பல வண்ண உடைகளில் நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேஷ்டி, சேலை, பட்டுப்பாவாடை, சட்டை என சந்தோஷமாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
குழந்தைகளின் சந்தோஷத்திற்கு தடை போட முடியுமா என்ன! தன் வயதை ஒத்தவர்களை கண்டவுடன் சந்தோஷமாய் கூக்கிரலிட்டு ஓடி விளையாடி மகிழ்ந்தார்கள். அதை பார்த்த பெரியவர்களுக்கும் கட்டாயமாக பத்து வயதாவது குறைந்திருக்கும். இது போன்ற கொண்டாட்டங்கள் தான், நம்மை எப்பவும் இளமையாகவும் துடிப்பாகவும் வைத்திருக்கின்றன.
வெளிநாடு வந்து எப்போதும் வேலை, வேலை என ஓடிக்கொண்டிருக்கும் மனது, இது மாதிரியான கொண்டாட்டங்களில் உற்றார் உறவினர், நண்பர்களை பார்த்து குசலம் விசாரித்து மகிழும் போது தான் உண்மையான சந்தோஷம் கொள்கிறது. ஏதோ மிகப்பெரிய சார்ஜ் ஏற்றின பேட்டரி மாதிரி மனதுக்குள் உற்சாகமும் ஊற்றெடுக்கிறது. அந்த வகையில் சனிக்கிழமை நூர்ன்பெர்க் நகரில் நடந்த தீபாவளி கொண்டாட்டம், அந்த மக்களுக்கு மிகப்பெரிய ஆனந்தத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
மாலை 3 மணிக்கு கொண்டாட்டம் ஆரம்பம் என்று சொன்னாலும் இரண்டரை மணிக்கே மக்கள் வர ஆரம்பித்து விட்டனர். நண்பர்களையும் உறவினர் களையும் பார்க்க போகிற சந்தோஷம் ஒரு பக்கம், தீபாவளி கொண்டாட்டம் மறு பக்கம் என அனைவர் முகத்திலும் சந்தோஷம் குடிகொண்டிருந்தது.
காலநிலை ஒற்றை இலக்கத்தில் இருந்தபோதிலும் வழக்கம்போல அரங்கம் முழுவதும் ஹீட்டர் வசதி செய்யப்பட்டிருந்ததால் நம்மூர் உடை உடுத்தி அனைவரும் உற்சாகமாய் வலம் வந்தனர்.
தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. தலைவர் சுஜாதா விவேகானந்தன் அனைவரையும் வரவேற்க, அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக அரங்கேறின. ஃபேஷன் ஷோ, பாடல், நடனம், நாடகம் என அப்பப்பா! எத்தனை எத்தனை கலை நிகழ்ச்சிகள்! அத்தனையும் அருமை.
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு மதிப்பு கொடுத்து பிளாஸ்டிக் 'கப்'புகளை தவிர்த்து பாட்டில்களை தண்ணீர் குடிப்பதற்காக உபயோகித்ததற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
அசைவ விரும்பிகளுக்கு சிக்கன் பிரியாணி என்றால் சைவ பிரியர்களுக்கு வெஜ் பிரியாணி. அதுமட்டுமல்லாமல் சமோசா, பிஸ்கட், டீ என நிகழ்ச்சி நடந்த 5 மணி நேரமும் டீ ஸ்டால் களைகட்டியது.
வெளிநாட்டு வாழ் தமிழர்கள் எப்பொழுதுமே தமிழ் மொழியின் மீது ஈடுபாடு கொண்டிருப்பார்கள் என்பதற்கு ஆதாரமாக திருக்குறள் சொல்லுதல், ஆத்திசூடி என குழந்தைகளும் தங்களின் பங்குக்கு அசத்திவிட்டனர்.
பள்ளிக்குழந்தைகள் ஆடிய பரதநாட்டிய ஃபியூஷன் நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
கரோக்கே மற்றும் நடனங்களுக்கான பாடல்களின் ஆடியோ சிஸ்டத்தை நெறிப்படுத்தி எந்த பிசிறும் இல்லாமல் உடனுக்குடன் வழங்கியது நிகழ்ச்சியோடு நாம் ஐக்கியமாக பெரிதும் உதவியது.
நிகழ்ச்சியில் பார்வையாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக பார்வையாளர்களை இரண்டாகப் பிரித்து, மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் கேள்வி கேட்க, இரு குழுவினரும் பதில் சொல்லி உற்சாகத்தை பரிமாறிக் கொண்டார்கள்.
தீபாவளி என்றாலே பட்டாசு இல்லாமலா! அனைவரும் தங்களின் ஜெர்கின் & ஸ்வெட்டர்களை அணிந்து வெளியே வந்து ஜெர்மனி அரசாங்கத்தின் வரையறைபடி மற்றவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் மத்தாப்பு மற்றும் சிறுவெடிகளை கொளுத்தி தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடி சந்தோஷமாய் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துக்களை சொல்லி மகிழ்ந்தனர்.
வெற்றி என்பது பல கைகள் இணைந்ததுதான் என்பதை இந்த விழாவில் நேரடியாக பார்க்க முடிந்தது. நூர்ன்பெர்க் தமிழ் சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மிகச் சிறப்பாக இந்த விழாவை கொண்டாடியதை பார்க்க சந்தோஷமாக இருந்தது.
இறுதியாக திரு. வெங்கடேஷ் நன்றி சொல்ல, விழா இனிதே நிறைவடைந்தது.