மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்று உணவு ஆகும். தண்ணீர், உணவு இல்லாமல் மனிதன் உயிர்வாழ்வது சாத்தியமே இல்லை. இந்நிலையில் கிழக்கு ஆசியாவைத் தவிர, துணைப் பகுதிகளில், ஏறக்குறைய பத்தில் ஒரு பங்கு பெண்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
இனப்பெருக்க வயதுடைய பெண்களிடையே இரத்த சோகை விகிதம் இன்னும் உலக சுகாதார சபை உலகளாவிய ஊட்டச்சத்து இலக்குகளை விட குறைவாகவே உள்ளது. 2022ல் உலகின் சராசரியுடன் ஒப்பிடும் போது, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில்,14.3 சதவீத குழந்தைகள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 370.7 மில்லியன் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களில், 50% மக்கள் ஆசியா-பசிபிக் நாடுகளில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் 10 பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். 2020- ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, உலகளவில் 5 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒருவர் வளர்ச்சி குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஆப்பிரிக்காவில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் பட்டினியை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடக்கத்தக்கது. உலகம் முழுவதும் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். பல நாடுகளில் பட்டினி என்பதே தலையாய பிரச்சனையாக உள்ளது.
உலக உணவு தினம் 1979 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் நிறுவப்பட்டது. இந்த நாள் உலகின் 150 நாடுகளில் கொண்டாடப்படுகிறது. உலக மக்கள் அனைவரின் உணவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பசி, பட்டினியை எதிர்த்துப் போரிடவும் இந்த நாள் உருவானது. மேலும், உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இது அமைகிறது.
இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. மாறிவரும் உணவுப் பழக்கத்தால் உருவாகும் உடல் குறைபாடு, வாழ்க்கை முறை ஆகிய விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த நாள் பயன்படுகிறது.
அன்றாட வாழ்வில் தண்ணீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில்2024 ஆம் ஆண்டுக்கான உலக உணவு தினத்தின் கருப்பொருளாக “நீரே உணவு, நீர்தான் வாழ்க்கை – யாரையும் விட்டுவிடாதீர்கள்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உலக உணவு தினத்தின் கருப்பொருள், பூமியில் உணவு மற்றும் வாழ்வின் முக்கிய ஆதாரமாக இருப்பதால், தண்ணீரை வீணாக்குவதையும், தண்ணீரை மீண்டும் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இந்நாள் வலுப்படுத்துகிறது.
உணவுப் பாதுகாப்பு, நிலையான விவசாயம், நவீன விவசாய நடைமுறைகள் போன்றவற்றைக் குறித்து விவாதிக்க மாநாடுகளும் கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன.
உலக மக்களை பசிக்கொடுமையில் இருந்து ஒரேநாளில் மீட்டுவிட முடியாது. ஆனால், முடிந்தவரை ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க முடியும். முதலில் தாங்கள் உண்ணும் உணவை வீணாக்குவதைத் தவிர்க்கலாம். ஒரு பருக்கை சோறாக இருந்தாலும் அதை வீண் செய்யக்கூடாது என உறுதியாக இருக்கலாம். வீட்டில் குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உணவின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுப்போம். அதுமட்டுமன்றி, மீதமுள்ள உணவை வீணாக்காமல் பசியின்றி தவிக்கும் மக்களுக்கு தானமாக அளிக்க முன்வருவோம்.
இந்நாளில் உலக மக்கள் அனைவரும் சிறந்த, சத்தான உணவை பெறுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். ஒன்றாக இணைந்து நாம் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு பிரகாசமான பசியில்லா உலகத்தை படைப்பதில் அக்கறைக் காட்டுவோம்.