இதோ கூப்பிடு தூரத்தில் தேர்தல் வந்துவிட்டது. வாக்காளராக நம் கடமை என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா???
வாக்காளர்கள்...
அரசியல்வாதியின் சூதாட்டத்தில் பகடைக்காய் இல்லை.
நாட்டை விற்கப் போகிறோமா? இல்லை.
நாட்டை வியக்க வைக்க போகிறோமா? இதற்கான
விடை, வினா. இரண்டும் வாக்காளர் கையில்.
'மான்டெஸ்க்யூ'என்ற அறிஞர் 'சட்டங்களின் ஆன்மா' என்ற நூலில் தன்னுடைய அரசை தானே தீர்மானிக்கும் எஜமானர்கள் வாக்காளர்கள் என்று பெருமையாகக் குறிப்பிடுகிறார். உண்மை.
பணம், இதர சலுகைகளை எதிர்பாராமல் நம் கையில் உள்ள வாக்கு என்ற மாபெரும் ஆயுதத்தைக் கொண்டு ஜாதி, மதம், இனம் பாராமல் இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டைக் கட்டமைக்க நாம் உறுதி மேற்கொள்வது அவசியம்.
நம் உரிமை, நம் ஓட்டு என்பதற்கிணங்க நாட்டையும், நம்மையும் ஆளக்கூடிய நபரைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம் வாக்காளரான நமக்கு உண்டு. அதை உரிய வகையில் பயன்படுத்தினால் மட்டுமே நமக்கான நல்ல பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதில் தவறுகள் நிகழாது என்பது உறுதி.
நம் சிந்தனை 5 ஆண்டு காலம் நம்மை ஆளப்போகும் அரசியல் ஆளுமையைத் தேர்ந்தெடுப்பதில் இருக்க வேண்டியது அவசியம்.
பணம் செலவழித்தால் போதும் தேர்தலையும், வாக்காளர்களையும் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற மனநிலையும், செலவழித்த பணத்தை திரும்பப் பெற பல மடங்கு ஊழல் என்ற நிலையும் இங்கு சர்வசாதாரணமாக உள்ளது.
1500 ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தல் துறைக்கு முன்னோடியாக இருந்த உத்திரமேரூர் கல்வெட்டு என்ன சொல்கிறது தெரியுமா? போட்டியிடுபவருக்குரிய தகுதிகள் தேர்தல் விதிமுறைகளை மிகச் சரியாக பயன்படுத்துபவரைத் தேர்ந்தெடுப்பதே சரி என்று கூறுகிறது.
இலவசத்தை வாங்கி, வாங்கி இல்லம் நிறைத்துவிட்டு அடுத்து என்ன கிடைக்கும் என்று பாராமல் உண்மையான ஜனநாயகத்திற்கு ஓட்டு போடுதல் அவசியம்.
வாக்காளர்களின் சக்தி அளவிட முடியாதது.
நாடு முழுக்க மக்கள் பரந்துபட்டு இருக்கின்றனர். இவர்களை எல்லாம் ஒன்றுசேர்த்து அவர்களுக்கான வாக்கு உரிமையை அறவழியில் பதிவிட்டு, தனி மனித உரிமைகளுக்கும், தரமான செயல் முறைகளுக்கும், வழிவகை செய்து எவர் ஒருவர் தன்னையே அர்ப்பணிக்கிறாரோ, அவரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சாலச்சிறந்தது.
அப்பொழுதுதான் எதிர்கால இந்தியா ஏற்றம் பெறும். வாக்களிப்பவர்கள் மேற்கொள்ளும் ஒருவிரல் புரட்சியினால் வாய்மை வலிமை பெறும். வாக்குரிமை மதிக்கப் பெறும். வேட்பாளர்களின் வாய்வாக்குகளும் நிஜமாகும்.
ஊழலுக்குக் கைகொடுக்காமல், கும்பிட்டு வாழாமல்
நமது உரிமை காப்போம். சிந்தித்து வாக்களிப்போம்.
யார் வந்தால் நாடு செழிக்கும் என்பதை யோசித்து நம் வாக்குகளை செலுத்துவோம்.
'ஒற்றை விரல் நீல மையால்' நம் உரிமையை மீட்டு எடுப்போம். வாக்காளராக தமது பங்களிப்பை 100% செயலாற்றுவோம்.