
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. ஒவ்வொரு இந்தியனும் "நாம் எப்படி இதற்கு பதிலடி கொடுத்து பழிவாங்கப் போகிறோம்?" என்று துடித்துக் கொண்டிருக்க... இந்தியா எப்படி, எங்கு தாக்கப் போகிறது? என்று பாகிஸ்தான் அரசும் எதிர்பார்த்துக் காத்திருந்தது.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7-ம் தேதி நள்ளிரவு முதல் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் ஒன்றை நடத்தியது.
திறமையான திட்டம்
பஹல்காம் தாக்குதல் நடந்தபின் 15 நாட்கள் அமைதி காத்த அரசின் செயல் விமர்சிக்கப்பட்டது. ஆனால் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே இந்திய அரசு உயர்மட்டக் குழு திட்டங்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டது. சங்கிலித்தொடர் போல பல கண்ணிகளை இணைத்து துல்லியமான ஒரு தாக்குதலுக்கு திட்டம் தயாரானது.
பிரதமரும், ராணுவ அமைச்சகமும் தந்த ஆலோசனையின்படி மூன்று முக்கிய அம்சங்களுடன் திட்டத்தை உருவாக்கினர் உயர்மட்டகுழுவினர்:
தீவிரவாதிகளின் முகாம்களை அடியோடு அழிக்க வேண்டும்.
ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகளின் ஒன்பது முகாம்களின் தற்போதைய இடங்களை உறுதி செய்து, அவற்றை மட்டும் துல்லியமாகத் தாக்க வேண்டும்.
இந்த ஆபரேஷனில் முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
முதல் கட்டமாக, ராணுவத்தின் உளவுப் பிரிவு தீவிரவாத முகாம்களை வரைபடமாக்கிக் கொடுத்தது. விமானப்படை துல்லியமாகத் தாக்குதலை நடத்த வேண்டிய பொறுப்பை ஏற்றது.
அதிநவீன தொழில்நுட்பம்
இந்தத் தாக்குதலில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. தீவிரவாத முகாம்களைக் கண்டறிய இஸ்ரேல் தயாரிப்பான ‘கமிகேஸ்’ ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இவை மிகத் தாழ்வாகவும் வேகமாகவும் பறப்பதால் ரேடார்களில் சிக்காதவை. இலக்கைப் பதிவேற்றினால், அந்த இடத்திற்குச் சென்று தரையிறங்கி, அங்கிருந்து எழுப்பும் சமிக்ஞைகள் மூலம் இலக்கை உறுதி செய்ய உதவுபவை.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் உயர் துல்லியமான இலக்குத் தகவல்களை வழங்கின. இந்தியக் கடற்படையின் P-8I போசிடான் கண்காணிப்பு விமானங்களும், கடற்படைக் கப்பல்களும் உளவு மற்றும் தகவல் பரிமாற்றத்தில் பங்கேற்றன.
வானிலிருந்து இலக்குகளைத் தாக்க ரஃபேல் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இவை வேகம் மட்டுமல்லாமல், பல நவீன வசதிகளையும் கொண்டவை. இவற்றில் ‘ஸ்கால்ப்’ ஏவுகணைகள் பொருத்தப்பட்டன. இந்த ஏவுகணைகள் மிகவும் புத்திசாலித்தனமானவை. இலக்கின் புகைப்படத்தையும், ஜிபிஎஸ் மூலம் அதன் இருப்பிடத்தையும் பதிவேற்றிவிட்டால், பகலோ இரவோ துல்லியமாக இலக்கை அடையாளம் கண்டு, லேசர் கேமரா மூலம் படமெடுத்து, அதைத் தன்னிடமுள்ள புகைப்படத்துடன் ஒப்பிட்டு, இலக்கை அழிக்கும். இவை அனைத்தையும் வினாடிகளில் செய்துவிடும்.
இந்த ஏவுகணைகளின் முனையில் பொருத்தப்பட்டிருந்த ‘ஹேமர்’ வகைக் குண்டுகள், குறிப்பிட்ட கோணத்தில் வெடிக்கக் கூடியவை. இவற்றின் செல்லப்பெயர் ‘சாய்வாகச் சறுக்கும் குண்டுகள்’. பொதுவாக, விமானங்களிலிருந்து வீசப்படும் குண்டுகள் நேரடியாகத் தரையில் பாயும். ஆனால், இந்தத் தாக்குதலில் இந்திய விமானங்கள் இந்திய வானெல்லைக்குள்ளிருந்தபடியே, சாய்வாகச் செல்லும் இந்தக் குண்டுகளுடன் கூடிய ஏவுகணைகளை வீசின. இதனால், எதிரி நாட்டு வான்வெளியில் நுழையாமல், இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க முடிந்தது. முழு அதிரடியும் 25 நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது.
பாகிஸ்தான் இந்தியத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லையா?
பாகிஸ்தான் ஒரு தாக்குதலை எதிர்பார்த்தது, தயார் நிலையில் இருந்தது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது ஏதாவது ஒரு இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஒரு தாக்குதல். அதற்கேற்ப, இந்திய விமானப்படை விமானங்கள், ராக்கெட் ஏவுதளங்கள் எல்லையில் கடந்த வாரத்தில் அதிக அளவில் நிறுத்தப்பட்டன. போருக்கு தயார் என்ற செய்திகள் பாகிஸ்தானுக்கு கசியவிடப்பட்டன. இதில் கவனம் செலுத்திய பாகிஸ்தான், அங்குதான் தாக்குதலை எதிர்பார்த்தது. ஆனால் தங்கள் ஆதரவில் இயங்கும் தீவிரவாத முகாம்கள் தாக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த அதிரடி அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
உலக நாடுகளின் பார்வை
கடந்த ஒரு வாரமாக இந்திய வெளியுறவுத் துறை, இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது என்று பல முக்கிய நாடுகளிடம் தெரிவித்திருந்தது. அதனால் தான், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள், பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்க வேண்டும் என்று கூறினாலும், இந்தியாவின் அதிரடி நடவடிக்கை தவறு என்று கூறவில்லை. மேலும் இரவு 1.30க்கு நடந்து முடிந்த தாக்குதலைப்பற்றி உலகுக்கு மறு நாள் காலை அறிவிக்கப்பட்டது. அதிலும் பத்திரிகையாளார் கூட்டத்தில் ராணுவச்செய்தி தொடர்பாளார் செய்தியைச் சொல்லாமல் இரண்டு உயர்மட்ட பெண் அதிகாரிகள் மூலம் அறிவித்தார்கள். இதில் ஒருவர் விமானப்படை அதிகாரி. அவர் முஸ்லீம். இதன் மூலம் இந்தியா உலகிற்கு சொன்ன செய்தி எங்கள் ராணுவத்தில் திறமை வாய்ந்த பெண் அதிகாரிகளும் உயர் பதவிகளில் இருக்கிறார்கள் என்பது.
பாகிஸ்தான் என்ன செய்யும்?
பெரும்பாலான நாடுகளில் ராணுவம் அரசின் கட்டளைகளைப் பின்பற்றும். ஆனால், பாகிஸ்தானில் ஆளும் அரசு ராணுவத்தின் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுகிறது. எனவே, தனது மதிப்பைக் காப்பாற்றிக்கொள்ள, பாகிஸ்தான் ராணுவம் நிச்சயம் பதிலடி கொடுக்க முயலும். இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் இந்த நொடியிலும் அது நிகழலாம். இருப்பினும், இந்திய ராணுவம் எந்தவொரு சூழலையும் திறமையாக எதிர்கொள்ளத் தயாராக உள்ளது.
இந்திய மக்களின் நிலை
கட்சி வேறுபாடுகளின்றி, அனைத்து இந்திய அரசியல் கட்சிகளும் அரசுடன் கைகோர்த்து நிற்கின்றன.. பதிலடியின் வெற்றியில் முழு தேசமும் பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கிறது.
மொத்தத்தில், ‘ஆபரேஷன் சிந்தூர்'-ன் வெற்றி இந்திய முப்படை வீரர்களுக்கு மக்கள் இட்ட ஒரு வெற்றித் திலகம்.