
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடிய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் பற்றி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. வரலாற்றில் முதல்முறையாக, இரண்டு பெண் அதிகாரிகள் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை குறித்த அதிகாரப்பூர்வ பத்திரிக்கையாளர் சந்திப்பை வழிநடத்தினர். இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி மற்றும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த ஒருங்கிணைந்த மற்றும் உறுதியான அறிக்கைகள் பயங்கரவாதத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது.
இந்தியாவின் உறுதியை மட்டுமல்ல, ஆயுதப் படைகளில் பெண்களின் அதிகரித்து வரும் பலத்தையும் பிரதிபலித்தன. இந்த விளக்கக் கூட்டத்திற்கு தலைமை தாங்க இரு பெண் அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்தது ஒரு சக்திவாய்ந்த நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பாலின சமத்துவத்தை உலகிற்கு காட்டுவதாகவும் இருந்தது. இது ராணுவத்தில் பணிபுரியும் பல நாட்டு பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும்.
இந்திய ராணுவத்தின் விங் கமாண்டர் வியோமிகா சிங் பேசுகையில் "இந்தியா தனது பதிலடியில் மிகவும் நிதானத்தை கடைப்பிடித்துள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் குடிமக்கள் யாரும் பாதிக்கப்பட வில்லை. ஆனால் , நிலைமையை மோசமாக்கும் வகையில் பாகிஸ்தான் ஏதேனும் தவறு செய்தால், அதற்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் முழுமையாக தயாராக உள்ளது," என்று எச்சரித்துள்ளார்.
இந்த தாக்குதல் பற்றி விளக்கம் கொடுத்த கர்னல் சோபியா குரேஷி "இந்தியா நம்பகமான உளவுத்துறை தகவல் மூலம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்த வேண்டிய, பயங்கரவாதிகளின் முகாம்களை ஆராய்ந்து பயங்கரவாத இலக்குகள் தேர்ந்தெடுத்தது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானில் எந்த இராணுவ நிலையும் குறிவைக்கப்படவில்லை," என்று கூறியுள்ளார்.
இந்த நேரத்தில் விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் பற்றி அறிந்துக் கொள்வோம். விங் கமாண்டர் வியோமிகா சிங் இந்திய விமானப்படையில் (IAF) ஒரு புகழ்பெற்ற ஹெலிகாப்டர் விமானி ஆவார். பொறியியல் படித்த அவர் 2004 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார். ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற மலைகள் நிறைந்த உயரமான பகுதிகளில் மிகவும் சவாலான நிலப்பரப்புகளில் சிலவற்றில் சீட்டா , சேடக் வகை ஹெலிகாப்டர்களை இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர்.
2017 ஆம் ஆண்டு விங் கமாண்டர் பதவிக்கு உயர்த்தப்பட்ட வியோமிகா சிங், பல மீட்புப் பணிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்திய விமானப்படையில் பெண்கள் சேர்வதற்கு ஒரு முன்னோடியாக அவர் இருக்கிறார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் சோபியா குரேஷியின் குடும்பம் மூன்று தலைமுறையாக இராணுவ பாரம்பரியத்தை சேர்ந்தது. அவர் உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார். சோபியா குரேஷி இந்திய இராணுவத்தின் சிக்னல்கள் படைப்பிரிவின் அதிகாரி ஆவார்.
2006 ஆம் ஆண்டில் அவர் காங்கோவில் ஐ.நா. அமைதி காக்கும் பணியின் கீழ் பணியமர்த்தப்பட்டார். 6 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதிப் பணிகளில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். சர்வதேச பணிகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கும் அமைதி காக்கும் பயிற்சி குழுவிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புனேவில் நடந்த பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய இராணுவக் குழுவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார். இது இந்திய மண்ணில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய வெளிநாட்டு இராணுவப் பயிற்சிகளில் ஒன்றாகும்.